Published : 15 Feb 2017 11:41 AM
Last Updated : 15 Feb 2017 11:41 AM

பிப்.15-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும்

அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என நிரூபணமாகிவிட்டது. அவர் இன்று நீதிமன்றத்தில் சரணடைவார் எனத் தெரிகிறது. ஆனாலும், அதிமுகவில் அதிர்வலைகளை சற்றும் குறையவில்லை. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்னமும் கூவத்தூர் சொகுசு விடுதியில்தான் இருக்கிறார்கள். ஆளுநர் இன்னும் தனது மவுனத்தை கலைக்கவில்லை.

இத்தகைய சூழலில் அதிமுகவில் ஏற்பட்டுவரும் முக்கிய மாற்றங்களில் தொகுப்பு

நிகழ்நேரப் பதிவு நிறைவு



9.00 pm சட்டப்பேரவையை கூட்ட ஆளுநரிடம் ஓபிஎஸ் கோரிக்கை

ஆளுநரிடம் ''பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவையை கூட்ட வேண்டும்'' என்ற கோரிக்கையை ஓபிஎஸ் முன்வைத்தார். அதற்குப் பிறகு ஆளுநர் மாளிகையில் இருந்து ஓபிஎஸ் புறப்பட்டுச் சென்றார். அதன் விவரம்: >ஆளுநருடன் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் மீண்டும் சந்திப்பு

8.50 pm: ஆளுநரை சந்தித்தார் ஓபிஎஸ்

8.30 pm: ஆளுநர் மாளிகை புறப்பட்டார் பொறுப்பு முதல்வர் ஓபிஎஸ்

பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்க ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டார். ஓபிஎஸ் உடன் மாஃபா பாண்டியராஜன், மதுசூதனன், எம்.பி. மைத்ரேயன் ஆகியோர் உள்ளனர்.

8.25 pm: ஆளுநர் ஜனநாயகத்தைக் காப்பார்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

எங்கள் கருத்தை ஆவன செய்வதாக ஆளுநர் கூறியுள்ளார். நாளைக்குள் நல்ல முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கிறோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அதன் விவரம்: >எங்கள் கருத்தை ஆவன செய்வதாக ஆளுநர் கூறியுள்ளார்: அமைச்சர் ஜெயக்குமார்

7.45 pm: ஆளுநருடன் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை சட்டப்பேரவை கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அவருடன் 10 அமைச்சர்கள் இருந்தனர்.

7.20 pm எதிர்க்கட்சிகள் மற்றும் எதிரிக் கட்சிகள் தொல்லை தராமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே கூவத்தூர் தனியார் சொகுசு விடுதியில் தங்கியிருப்பதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்தார்.அதன் விவரம்: >கூவத்தூரில் தங்கி இருப்பது ஏன்?- அமைச்சர் நிலோபர் கபில் விளக்கம்

7.10 pm: பரப்பன அக்ரஹார சிறையில் சுதாகரன் அடைக்கப்பட்டார்

பரப்பன அக்ரஹாரத்தில் நீதிபதி அஸ்வதா நாராயணா முன்பு சுதாகரன் சரணடைந்தார். நீதிபதி உத்தரவைத் தொடர்ந்து சுதாகரன் சிறையில் அடைக்கப்பட்டார்.

6.55 pm: எடப்பாடி பழனிச்சாமியைத் தொடர்ந்து, பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆளுநரை சந்திக்க உள்ளார். 8.30 மணிக்கு நேரம் ஒதுக்கினார் ஆளுநர்.

6.45 pm: ஆளுநரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. கூவத்தூரில் இருந்து புறப்பட்டார்.

6.40 pm: சுதாகரன் சரணடைந்தார்

பரப்பன அக்ரஹாரத்தில் நீதிபதி அஸ்வதா நாராயணா முன்பு சுதாகரன் சரணடைந்தார். முன்னதாக, உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேரில் ஆஜராக முடியவில்லை. சரணடைய கால அவகாசம் தேவை என்று சுதாகரன் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. கோரிக்கை மனுவை நீதிபதிகள் நிராகரித்ததால் சுதாகரன் சரணடைந்தார். அதன் விவரம்: >பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் அடைப்பு

6.35 pm: அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஓபிஎஸ் அவசர ஆலோசனை

அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பொறுப்பு முதல்வர் ஓபிஎஸ் அவசர ஆலோசனை செய்து வருகிறார். மாஃபா பாண்டியராஜன், மதுசூதனன் ஆகியோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

6.25 pm கூவத்தூர் விடுதியில் உள்ள எம்எல்ஏக்களின் உரிமையைப் பாதுகாக்க பேரவை தலைவரிடம் வலியுறுத்த உள்ளோம் என்று ராதாபுரம் எம்எல்ஏ இன்பதுரை கூறியுள்ளார். அதன் விவரம்: >எம்எல்ஏக்களின் உரிமையை பாதுகாக்க பேரவை தலைவரிடம் வலியுறுத்த உள்ளோம்: எம்எல்ஏ இன்பதுரை தகவல்

6.20 pm தமிழக ஆளுநர் அழைக்கும்போது நாங்கள் சென்று எங்களது பலத்தை நிரூபிப்போம் என பெரம்பலூர் எம்எல்ஏ தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். அதன் விவரம்: >ஆளுநர் அழைக்கும்போது எங்களது பலத்தை நிரூபிப்போம்: எம்எல்ஏ தமிழ்ச்செல்வன் பேட்டி

6.15 pm: பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா.

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவும், இளவரசியும் அடைக்கப்பட்டனர்.

6.05 pm ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுப்பார் என்று எதிர்ப்பார்க்கிறோம் என்று அதிமுக அவைத்தலைவர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார். அதன் விவரம்: >ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார்: செங்கோட்டையன் நம்பிக்கை

5.55 pm: ஆட்சியமைக்கக் கோரி ஆளுநருக்கு நினைவூட்டல் கடிதம் - எம்.பி.நவநீதகிருஷ்ணன் பேட்டி

கூவத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி. நவநீதகிருஷ்ணன், ''ஏற்கெனவே கடிதம் கொடுத்தும் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்கக் கோரி ஆளுநர் அழைக்காதது நியாயமற்றது. தற்போது ஆட்சியமைக் கோரி அழைப்பு விடுக்க ஆளுநருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பியுள்ளோம். அதிமுக எம்.பி.க்கள் ஆளுநரை சந்திக்க திட்டமிட்டுள்ளோம்'' என்றார். அதன் விவரம்: >அரசியலமைப்பு சட்டப்படி ஆளுநர் காலதாமதம் செய்வது சட்ட விரோதம்: நவநீத கிருஷ்ணன் எம்.பி. பேட்டி

5.50 pm: பெங்களூரு பரப்பன அக்ரஹாரம் பகுதியில் சசிகலாவுடன் வந்த கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. நீதிமன்றம் அருகே தாக்குதல் நடத்தப்பட்டதால், அங்கு குவிந்திருந்த மக்களைக் கலைக்க போலீஸார் லேசான தடியடி நடத்தினர்.

5.40 pm: சரணடைய அவகாசம் கோரி சுதாகரன் மனு

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேரில் ஆஜராக முடியவில்லை. சரணடைய கால அவகாசம் தேவை என்று சுதாகரன் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

5.20 pm: சசிகலா, இளவரசி ஆகிய இருவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்ற அறையில் நீதிபதி அஸ்வதா நாராயணா முன்பு சரணடைந்தனர். சுதாகரன் சரணடையவில்லை. சிறை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

4.30 pm: சசிகலா சரணடையவுள்ள நிலையில், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை வளாகத்துக்கு மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் ஆகியோர் வந்தடைந்தனர்.

3.45 pm: கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏ.க்கள் விடுவிக்கப்பட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

3.30 pm: "என்வழிதான் நேர்வழி என்று முரண்டு பிடித்து நின்றால் படுகுழி காத்திருக்கும் என்பதை உணர வேண்டும். ஒருவரை ஒருவர் சாடிக்கொண்டிருந்தால் எதிரிக்குத்தான் கும்மாளம்." என்று மயிலாப்பூர் எம்.எல்.ஏ. நட்ராஜ் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். >| அதிமுக ஓரணியாக திரள முயற்சி எடுத்து வருகிறேன்: மயிலாப்பூர் எம்.எல்.ஏ. நட்ராஜ் தகவல் |>

3.15 pm: தமிழக பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது என பாஜக எம்.பி. இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

3.00 pm: அதிமுக துணை பொதுச் செயலாளராக டிடிவி தினகரனை நியமனம் செய்தது சட்டப்படி செல்லாது என்று பொன்னையன் தெரிவித்துள்ளார். >| அதிமுக துணை பொதுச் செயலாளராக டிடிவி தினகரனை நியமனம் செய்தது செல்லாது: பொன்னையன் |

2.55 pm: தினகரன் நியமனம் சட்டவிரோதமானது என மதுசூதனன் தெரிவித்துள்ளார். 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், "அதிமுக விதிகளின்படி கட்சியில் தொடர்ந்து 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்தவர் மட்டுமே கட்சிப் பதவிக்கு தகுதியானவர். அந்த வகையில் தினகரன் அதிமுக துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டது சட்டவிரோதமானது" என்றார். >| தினகரன் நியமனம் சட்ட விரோதமானது: மதுசூதனன் |

2.30 pm: தற்போதைய சூழலில் தமிழக அரசியல் நிலவரம் குறித்து கருத்து ஏதும் தெரிவிக்க விரும்பவில்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

2.15 pm: கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்கள் சிறைபிடித்து வைக்கப்பட்டிருப்பதாக ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ. சரவணன் அளித்த புகாரின் அடிப்படையில், கூவத்தூர் விடுதியில் தங்கியுள்ள எம்.எல்.ஏ.க்களிடம் காஞ்சிபுரம் எஸ்.பி. முத்தரசி நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.

2.00 pm: கூவத்தூரில் தங்கியுள்ள எம்.எல்.ஏ.க்களுடன் அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

1.30 pm: பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதால் ஆளுநர் காலம் தாழ்த்தாமல் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்கியுள்ள ஜெயங்கொண்டம் தொகுதி எம்.எல்.ஏ. ராம்ஜெயலிங்கம் தெரிவித்துள்ளார்.

1.10 pm: சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும். பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதால் அதிமுகவே ஆட்சி அமைக்கும் என தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

1.07 pm: கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அறை எண் 43-ல் சசிகலா ஆஜராக வேண்டும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், அவர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள நீதிமன்ற அறையில் ஆஜராகலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சரணடைய வேண்டிய நீதிமன்ற அறையை கர்நாடக உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து மாற்றம் செய்துள்ளது. பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து 2.5 கி.மீ தூரம் வரையில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

பரப்பன அக்ரஹார சிறை வளாகம்

1.00 pm: அதிமுக துணை பொதுச் செயலாளராக டிடிவி.தினகரன் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக அமைப்புச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார் கருப்பசாமி பாண்டியன். >| கட்சியை குடும்ப சொத்தாக மாற்றியிருக்கிறார் சசிகலா: கருப்பசாமி பாண்டியன் தாக்கு |

12.45 pm: ஜெயலலிதா நினைவிடத்திலிருந்து புறப்பட்ட சசிகலா ராமாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். இல்லத்துக்குச் சென்றார். அங்கு எம்.ஜி.ஆர். சிலை முன் அமர்ந்து சில நிமிடங்கள் தியானம் செய்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுவிட்டார்.

12.30 pm: "நான் எப்படி விட்டுக் கொடுப்பது, நான் எப்படி அவரிடத்தில் போவது என்ற வகையில், பகைமை பாராட்டாமல், பொதுமக்கள் எதிர்பார்க்கின்ற நல்ல முடிவினை எடுத்து, கட்சி பிளவுபடவில்லை - ஆட்சி பிளவுபடவில்லை. இந்த ஆட்சி தொடர்கிறது என்ற நல்ல செய்தியை நாட்டுக்கு சொல்லுங்கள்" என்று அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு சைதை துரைசாமி சூசக அறிவுரை வழங்கியுள்ளார். >| அவரிடம் போக தயங்காதீர்: அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு சைதை துரைசாமி சூசக அறிவுரை |

12.22 pm: அதிமுக எம்.எல்.ஏ.க்களை அடைத்துவைத்திருப்பதாக கூவத்தூர் காவல் நிலையத்தில் வி.கே.சசிகலா மீது வழக்கு பதிவு. ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ. சரவணன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு. >| அதிமுக எம்.எல்.ஏக்களை கடத்தியதாக சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி மீது எம்.எல்.ஏ சரவணன் புகார்|

எம்.எல்.ஏ.சரவணன் | கோப்புப் படம்.

12.20 pm: திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சென்னை வர வேண்டும் என்று தலைமைக் கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக வெளியான தகவல் உண்மையல்ல: மு.க.ஸ்டாலின்.