Published : 15 Feb 2017 12:31 PM
Last Updated : 15 Feb 2017 12:31 PM

அவரிடம் போக தயங்காதீர்: அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு சைதை துரைசாமி சூசக அறிவுரை

"நான் எப்படி விட்டுக் கொடுப்பது, நான் எப்படி அவரிடத்தில் போவது என்ற வகையில், பகைமை பாராட்டாமல், பொதுமக்கள் எதிர்பார்க்கின்ற நல்ல முடிவினை எடுத்து, கட்சி பிளவுபடவில்லை - ஆட்சி பிளவுபடவில்லை. இந்த ஆட்சி தொடர்கிறது என்ற நல்ல செய்தியை நாட்டுக்கு சொல்லுங்கள்" என்று அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு சைதை துரைசாமி சூசக அறிவுரை வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக அதிமுக அமைப்புச் செயலாளர் சைதை துரைசாமி செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள அறிக்கையில், "ஜெயலலிதா மறைவுக்குப் பின்னால் நடைபெறும் நிகழ்வுகள் எல்லாம் ஒவ்வொன்றும் நமக்கு அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு, ஒரு பக்கம் முதல்வர், மறுபக்கம் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் என தினமும் அதிமுக செய்திகள் பிரதானப்படுத்தப்பட்டு சமூக வலைதளங்களில், ஊடகங்களில் வெளிவந்தவண்ணம் உள்ளன. இதைப் பார்க்கும்போது எங்களைப் போன்ற இந்த இயக்கம் தொடங்குவதற்கு உயிரை பணயம் வைத்து இந்த இயக்கம் வளர வேண்டும் என்று எண்ணி பணியாற்றியவர்களுக்கு வேதனை தருகிறது.

ஆயிரம் உண்டிங்கு சாதி, அதில் அன்னியர் புகுவது என்ன நீதி என்று பாரதி சொன்னது போல நமக்குள் இருக்கின்ற கருத்து வேறுபாடுகள், இந்த கட்சியின் வளர்ச்சிக்காக இருக்க வேண்டுமே தவிர, தனிநபர் ஆதாயத்துக்காக இருக்கக் கூடாது. நாம் இன்று எவ்வளவு பெரிய சிக்கலில், எவ்வளவு பெரிய சங்கடத்தில் இருக்கிறோம் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

அனைவரும் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ஓர் இழப்பு இன்னுமொரு உயர்வுக்கு வழிவகுக்கும் என்பதை புரிந்துகொண்டு வாய்ப்புகளை நழுவ விடாமல், நம்முடைய தொண்டர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை ஆதரித்த பொதுமக்கள் மகிழ்ச்சியடையத்தக்க வகையான ஒரு முடிவை நீங்கள் மேற்கொள்வீர்கள் என நம்புகிறேன்.

காலம்தான் கசப்புணர்வுகளை மாற்றுகிறது. காலம் உணர்த்திய பல பாடங்களை பார்த்து படித்த பிறகு, அதை எண்ணி தற்போது முடிவெடுங்கள். எல்லாவற்றையும் முடித்துவிட்டு, அதற்குப் பிறகு நாம் சிந்திப்பதை விட, ஒரே கணம் மட்டும் நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இந்த ஆட்சிக்கும் கட்சிக்கும் பழுது ஏற்பட்டால் என்ன நிலை, தயவு செய்து எண்ணிப் பாருங்கள். ஆகவே, பகைமை உணர்ச்சியை அறவே மறந்துவிடுங்கள். அன்பாக நேசியுங்கள். ஜெயலலிதா இருந்தபோது என்ன பாச உணர்வோடு இருந்தோமோ அந்த நிலைக்கு வாருங்கள். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து தலைவர், அம்மா, மக்கள், தொண்டர், சேவை ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி, செய்வதற்கான வாய்ப்பு ஏராளமாக இருக்கும்போது, நாம் ஒரு குறிப்பிட்ட 131 பேர் அமர்ந்து பேசி ஒரு நல்ல முடிவை எடுப்பதில் என்ன சங்கடம். நாம் அனைவரும் சகோதரர்களாகத்தானே பழகினோம். இன்றைக்கு ஒரு அசாதாரண சூழல் கட்சியில் நிலவுகின்றபோது, இதை ஒருவருக்கொருவர் விட்டு கொடுப்பது சரியான தீர்வாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.

எனவே, நான் எப்படி விட்டுக் கொடுப்பது, நான் எப்படி அவரிடத்தில் போவது என்ற வகையில், பகைமை பாராட்டாமல் கடமை உணர்ச்சியுடன் இந்த கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்றுவதற்காக நீங்கள் அனைவரும் ஒத்துழைப்போடு, பொதுமக்கள் எதிர்பார்க்கின்ற இந்த நல்ல முடிவினை, கட்சி பிளவுபடவில்லை - ஆட்சி பிளவுபடவில்லை.. ஒற்றுமையுடன் இந்த ஆட்சி தொடர்கிறது என்ற நல்ல செய்தியை நாட்டுக்கு சொல்லுங்கள். அமர்ந்து பேசுங்கள். கட்சியைக் காப்பாற்றுங்கள்" என்று அதிமுக எம்.எல்.ஏ.க்களை சைதை துரைசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x