Last Updated : 15 Feb, 2017 04:40 PM

 

Published : 15 Feb 2017 04:40 PM
Last Updated : 15 Feb 2017 04:40 PM

சிறை செல்லும் முன் ஜெ. நினைவிடத்தில் சபதம் செய்த சசிகலா

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடையச் செல்வதற்கு முன், மெரினாவில் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குச் சென்றார். அங்கு அஞ்சலி செலுத்தியபின் சபதம் மேற்கொண்டார்.

அவர் ஆவேசமாக சபதம் செய்த காட்சி ஊடகங்களில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.

நினைவிடத்தில் அந்த சில நிமிடங்கள்:

பெங்களூரு செல்லும் முன் சென்னை மெரினாவுக்கு வந்த சசிகலா ஜெயலலிதா நினைவிடத்தில் பூக்கள் தூவி அஞ்சலி செலுத்தினார். அங்கு கண்மூடி நின்ற சசிகலா மற்றவர்களுக்குக் கேட்காத வகையில் முணுமுணுத்தார்.

சிறிது நேரம் அமைதியாக நின்ற சசிகலா, மூன்று முறை வணங்கியும் எழுந்தவர் திடீரென சமாதியில் ஓங்கி அடித்து சபதம் ஏற்றார். "சூழ்ச்சி, துரோகம், இக்கட்டு ஆகிய மூன்றில் இருந்தும் மீண்டு வருவேன் என அவர் சபதம் மேற்கொண்டார்" என அதிமுகவின் அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஜெ. நினைவிடத்திலிருந்து எம்ஜிஆர் இல்லத்துக்குச் சென்றவர், அங்கிருந்த எம்ஜிஆர் சிலையைத் தொட்டு வணங்கினார். அங்கேயே சில நிமிடங்கள் தியானத்திலும் ஈடுபட்டார்.

முன்னதாக செவ்வாய்க்கிழமை இரவு கூவத்தூரில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கட்சி எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, ''அதிமுகவை என்னிடம் இருந்து எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. நான் எங்கு இருந்தாலும் அதிமுக மீதான சிந்தனை எப்போதும் இருக்கும். என்னை எந்தக் கூண்டில் அடைத்தாலும் கட்சி வளர்ச்சியை நோக்கித்தான் எனது எண்ணம் இருக்கும். என்னைத்தான் அடைக்கலாமே தவிர எனது மனதை அடைத்துவைக்க முடியாது. என் இதயத்தில் இருந்து அதிமுகவை பிரிக்க முடியாது.

இந்த வழக்கைப் போட்டது திமுகதான். அதனால் திமுக என்ற ஒன்று இருந்ததா என்ற நிலையை நீங்கள்தான் உருவாக்க வேண்டும். அதற்கு நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x