Published : 20 May 2018 02:04 PM
Last Updated : 20 May 2018 02:04 PM

கர்நாடக மாநிலத்தில் அமையவுள்ள புதிய அரசுடன் தமிழக முதல்வர் நட்புணர்வு கொண்டு காவிரி நீரை பெற்றாக வேண்டும்: ஸ்டாலின் பேச்சு

கர்நாடக மாநிலத்தில் அமையவுள்ள புதிய அரசுடன் தமிழக முதல்வர் நட்புணர்வு கொண்டு ஜூன் 12 ஆம் தேதி வழங்க வேண்டிய காவிரி நீரை பெற்றாக வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பேசினார்.

மயிலாடுதுறையில் இன்று நடைபெற்ற திருமண விழாவில் மணமக்களை வாழ்த்தி ஸ்டாலின் பேசியதாவது:

''இன்றைக்கு நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகள் அனைத்தும் உங்களுக்கும் தெரியும். நீண்ட நாட்களாக பொதுமக்கள், விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினையாக, தமிழ்நாட்டின் உயிர் நாடிப் பிரச்சினையாக உள்ள காவிரிப் பிரச்சினையில் சட்டரீதியாக ஒரு முடிவை நாம் கண்டிருக்கிறோம். ஆனால், அந்தச் சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கக்கூடியவற்றை நிறைவேற்ற முன்வருவார்களா, பயன் கிடைக்குமா, விவசாயிகளின் வாழ்வாதாரம் வளம் அடையுமா என்ற நிலையில் இருக்கிறோம். தலைவர் கருணாநிதி 5 முறை முதல்வராக இருந்த நேரத்தில் காவிரி பிரச்சினைக்காக எந்தளவுக்கு போராடியிருக்கிறார், வாதாடியிருக்கிறார் என்பதெல்லாம் எல்லோருக்கும் தெரியும். எத்தனைமுறை டெல்லிக்கு சென்று முறையிட்டு இருக்கிறார், கர்நாடக மாநிலத்தில் பல முதல்வர்கள் மாறியிருந்தாலும், அத்துனை பேரையும் நேரில் சந்தித்து வாதிட்டு, நமது உரிமையை பெற்றுத் தந்திருக்கிறார்.

ஆனால், இடையிடையில் ஆட்சி மாற்றம் வந்த காரணத்தால் அதில் பல இடையூறுகள் ஏற்பட்டு, சட்டரீதியாக போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்தில் அமைக்க வேண்டுமென்று தெளிவான, உறுதியான, இறுதியான தீர்ப்பை அளித்தது. ஆனால், அதை செயல்படுத்த வேண்டிய மத்திய அரசு உடனடியாக அதை நிறைவேற்றினார்களா என்றால் இல்லை. எந்தளவுக்கு காலம் தாழ்த்த வேண்டுமோ, அந்தளவுக்கு கால தாமதம் செய்தார்கள். எனவே, அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர் என்றமுறையில் நான் அரசை வலியுறுத்தினேன்.

அதை உடனடியாக நிறைவேற்ற முன்வராத காரணத்தால், எதிர்க்கட்சித் தலைவராக எனது தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டுவதாக அறிவித்தோம். அதற்கான தேதியை அறிவித்த அடுத்த நாளே முதல்வரே அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டுவதாக அறிவித்தார். அதில் அரசியல் ஏதும் பார்க்காமல், கவுரவத்தைப் பார்க்காமல், எதிர்க்கட்சி என்றமுறையில் கூட்டவிருந்த கூட்டத்தை ரத்து செய்துவிட்டு, ஆளும்கட்சி சார்பில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்றோம். கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய அண்டை மாநிலங்களில் எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும், அங்கிருக்கும் எல்லா அரசியல் கட்சிகளும் அரசியலை மறந்து, சுய கவுரவத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒன்று சேர்ந்து போராடுகிறார்கள். அந்த உணர்வு இங்கு இருப்பவகளுக்கும் வர வேண்டும் என்று நான் இப்போது மட்டுமல்ல, தொடர்ந்து சொல்லி வருகிறேன்.

எனவே, அரசின் சார்பில் நடைபெற்ற அந்தக் கூட்டத்துக்கு நாங்கள் அத்துனை பேரும் சென்று, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டுமென அரசு கொண்டு வந்த தீர்மானத்தை மனப்பூர்வமாக ஏற்கிறோம் என்று பகிரங்கமாக நான் பேசி, அனைவரும் ஒரு மனதாக நிறைவேற்றினோம். அதுமட்டுமல்ல, சட்டப்பேரவையில் அந்தத் தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் என்று சொல்லி, அதையும் ஒருமனதாக நிறைவேற்றித் தந்தோம். ஆனால், மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அதை நிறைவேற்றவில்லை. கர்நாடக மாநில தேர்தல் காரணமாக காலம் கடத்தியது. உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஏற்று செயல்படுத்தாமல் மத்திய அரசு காலம் தாழ்த்தியது.

இப்போது, சட்டரீதியாக ஒரு நல்ல முடிவு வந்திருக்கிறது. இந்நிலையில், இங்கிருக்கும் அரசு என்ன செய்ய வேண்டுமென்றால், இன்னும் இரண்டு மூன்று நாட்களில் கர்நாடக மாநிலத்தில் மதச்சார்பற்ற நிலையில் ஒரு புதிய அரசு பொறுப்பேற்கவிருக்கிறது, அப்படி புதியதாக பொறுப்பேற்கும் முதல்வரோடு, இங்கிருக்கும் முதல்வர் ஒரு நட்புணர்வை ஏற்படுத்திக் கொண்டு, சட்டரீதியாக வெற்றி பெற்றிருந்தாலும், வரும் ஜூன் மாதம் 12 ஆம் தேதி பெற வேண்டிய காவிரி நீரை நட்பு ரீதியாகப் பெற்றாக வேண்டும். கடந்த 7 ஆண்டுகளாக நமக்கு வர வேண்டிய நீர் தடைபெற்று இருப்பது அனைவருக்கும் தெரியும். ஒருவேளை நமக்கு வர வேண்டிய நீரைப் பெறுவதில் தமிழக அரசு தவறினால், மீண்டும் தமிழ்நாட்டில் உள்ள, குறிப்பாக டெல்டா பகுதி விவசாயிகளை ஒருங்கிணைத்து மிகப் பெரிய போராட்டங்களை தொடர்ந்து நடத்த வேண்டிய நிலை வரும்.

காவிரி உரிமைக்காக பல்வேறு கட்சிகள், அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டாலும், திமுக நடத்திய போராட்டத்தைக் கண்டு, உச்ச நீதிமன்றமே அதற்கு மதிப்பளித்து சட்டரீதியான உரிமையை அளித்திருக்கிறது. ஆகவே, திமுகவின் போராட்டங்களில் பெருமளவு பங்கேற்று, ஆதரவு தந்திருக்கக்கூடிய விவசாயப் பெருங்குடி மக்களுக்கு, குறிப்பாக டெல்டா பகுதி விவசாயிகளுக்கு எனது இதயபூர்வமான நன்றி''.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

இதை மிஸ் பண்ணாதீங்க:

கர்நாடக அரசியல் விவகாரத்தில் ஆளுநர் பாஜகவுக்கு 15 நாள் அவகாசம் அளித்தது கேலிக்கூத்து: ரஜினி

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x