Published : 20 May 2018 01:28 PM
Last Updated : 20 May 2018 01:28 PM

கர்நாடக அரசியல் விவகாரத்தில் ஆளுநர் பாஜகவுக்கு 15 நாள் அவகாசம் அளித்தது கேலிக்கூத்து: ரஜினி

கர்நாடக அரசியல் விவகாரத்தில் ஆளுநர் பாஜகவுக்கு 15 நாள் அவகாசம் அளித்தது கேலிக்கூத்து என்று ரஜினி கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது ரஜினி மக்கள் மன்றத்துக்கு அனைத்து மாவட்டங்களிலும் நிர்வாகிகளை நியமித்துள்ளார். இதையடுத்து, ஒவ்வொரு அணி நிர்வாகிகளையும் தனித் தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்படி, கடந்த 10-ம் தேதி மாவட்டச் செயலாளர்களையும், 13-ம் தேதி இளைஞர் அணி மாவட்டச் செயலாளர்களையும் தனது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில் இன்று ரஜினி மக்கள் மன்றத்தின் மகளிர் அணி மாவட்டச் செயலாளர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் ஆலோசனை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் ரஜினி கூறியதாவது:

''ரஜினி மக்கள் மன்றத்திற்கு பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. அதைப் பார்க்கும்போது எனக்கு சந்தோஷமாக உள்ளது.பெண்கள் இருக்கும் இடத்தில் நிச்சயம் வெற்றி இருக்கும். பெண்கள் காட்டும் உற்சாகம் மகிழ்ச்சியை அளிக்கிறது. எந்த நாட்டில் பெண்களுக்கு முன்னுரிமை தருகிறார்களோ அந்த நாடு முன்னேறி இருக்கிறது. ரஜினி மக்கள் மன்றத்திலும், நான் தொடங்க உள்ள கட்சியிலும் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

எனக்கு 150 தொகுதிகள் ஆதரவு இருப்பதாக உளவுத்துறை அறிக்கை கொடுத்திருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வந்துள்ளன. அது உண்மையாக இருந்தால் மகிழ்ச்சி.

கர்நாடக அரசியல் விவகாரத்தில் ஆளுநர் பாஜகவுக்கு 15 நாள் அவகாசம் அளித்தது கேலிக்கூத்து. ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் கர்நாடக ஆளுநர் அதுபோன்று செய்திருக்கக் கூடாது. உச்ச நீதிமன்றம் சரியான தீர்ப்பு அளித்துள்ளது. அதற்கு நான் தலை வணங்குகிறேன். கர்நாடகாவில் குமாரசாமி பதவியேற்க உள்ளது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி.

மெரினாவில் நடக்கவுள்ள நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு காரணமின்றி காவல்துறை தடை விதிக்காது. அதற்கு காரணங்கள் இருக்கும்.

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றியே ஆக வேண்டும். அணையின் கட்டுப்பாடு கர்நாடகாவிடம் இருப்பது சரியல்ல. ஆணையத்திடம் தான் இருக்க வேண்டும் என்றார்.

2019 நாடாளுமன்ற தேர்தலுக்குள் கட்சியை கட்டமைத்து அனைத்திற்கும் தயாராக இருக்க விரும்புகிறோம்''.

இவ்வாறு ரஜினி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x