Published : 20 May 2018 11:13 AM
Last Updated : 20 May 2018 11:13 AM

காவிரி வரைவு செயல்திட்டத்தில் ஆணையத்தின் தன்னாட்சி அதிகாரம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை: வைகோ குற்றச்சாட்டு

காவிரி வரைவு செயல்திட்டத்தில் ஆணையத்தின் தன்னாட்சி அதிகாரம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: காவிரி தொடர்பான அனைத்து அதிகாரமும் ஆணையத்துக்கு மட்டுமே இருக்கும் வகையில், வரைவு செயல்திட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டுமென உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. கடந்த 17-ம் தேதி திருத்தம் செய்யப்பட்ட வரைவுத் திட்டத்தை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது. அதனை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு இறுதி ஆணை பிறப்பித்துள்ளது.

‘காவிரி மேலாண்மை வாரியம்’ எனும் தன்னாட்சி அதிகாரம் கொண்ட ஓர் அமைப்பை உருவாக்கினால்தான், இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்திட முடியும் என்று காவிரி நடுவர் மன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டி இருக்கிறது. ஆனால், மத்திய அரசின் வரைவு செயல்திட்டத்தில் தற்சார்பு அதிகாரம் என்ற வார்த்தையே இடம் பெறவில்லை.

‘காவிரி மேலாண்மை ஆணையம்’ என்று பெயரை மட்டும் சூட்டிவிட்டு, அதிகாரம் ஏதுமற்ற வெற்று அமைப்பை உருவாக்குவது என்பது ஏமாற்று வேலை. காவிரி வரைவு செயல்திட்டத்தின் பிரிவு 9, ஆணையத்தின் அதிகாரங்கள், செயல்பாடுகள் மற்றும் கடமைகள் பற்றி குறிப்பிடுகிறது. காவிரி ஒழுங்குமுறைக் குழு உதவியுடன் அணைகளின் இயக்கம் மற்றும் தண்ணீர் திறப்பதை ஒழுங்குபடுத்தும் பணியையும் காவிரி மேலாண்மை ஆணையம் ‘மேற்பார்வையிடும்’ என்றுதான் வரைவு செயல்திட்டம் கூறுகிறது.

அப்படியென்றால் அணைகளைத் திறந்து தண்ணீரை விடும் அதிகாரம் யாருக்கு? இது பற்றி வரைவு செயல்திட்டம் கூறுவது என்ன? கர்நாடகத்தைப் பணிய வைக்கும் அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு இருக்கிறதா என்றால் வரைவு செயல் திட்டத்தின்படி அதற்கு வழியே இல்லை.

காவிரிப் படுகை மாநிலங்கள் என்னென்ன பயிர் செய்ய வேண்டும் என்பதையும், சொட்டு நீர்ப் பாசனம் உட்பட என்னென்ன பாசன முறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்பதையும் மேலாண்மை ஆணையம் முடிவு செய்யும் என்று வரைவு செயல்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது, மாநில அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் செயல் ஆகும். உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இறுதி உத்தரவில் காவிரி மேலாண்மை ஆணையத்தை மட்டும் அணுகினால் போதும், ஆணையத்துக்கு எல்லா அதிகாரமும் இருக்கிறது என தெரிவித்து இருக்கிறது. ஆனால், வரைவு செயல்திட்டத்தில் ஆணையத்தின் தன்னாட்சி அதிகாரம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்காதது கண்டிக்கத்தக்கது.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை ஒட்டுமொத்தமாக நீர்த்துப் போகச் செய்துள்ள மத்திய அரசின் வரைவு செயல்திட்டம், உச்ச நீதிமன்றத்தின் இறுதி உத்தரவை எதிர்த்து அரசியல் சாசன அமர்வில் மேல்முறையீடு செய்ய வேண்டும். முதல்வர் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x