Published : 22 May 2018 03:49 PM
Last Updated : 22 May 2018 03:49 PM

அமைதியாகப் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு: சர்வாதிகார தமிழக அரசு: டிடிவி தினகரன் கண்டனம்

 ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சர்வாதிகார பழனிசாமியின் அரசு என டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தொடர்ந்து நடைபெற்றுவரும் தூத்துக்குடி மக்களின் தன்னெழுச்சி போராட்டத்தை கொஞ்சம்கூட பொருட்படுத்தாமல், அவர்களின் கோரிக்கை தொடர்பாக எவ்வித முறையான அறிவிப்பும் செய்யாமல், மக்கள் வேண்டாம் என்ற சொல்லும் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக பழனிசாமியின் அரசு செயல்பட்டு வருகிறது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிவரும் தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு, பல்வேறு அரசியல் கட்சிகள், வணிக சங்கங்கள், மீனவ சங்கங்கள், தாய்மார்கள், குழந்தைகள் உட்பட லட்சக்கணக்கான மக்கள் இன்று தங்கள் போராட்டத்தின் 100-வது நாளை குறிக்கும்வகையில் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் நேற்றையதினம் மாவட்ட ஆட்சித்தலைவர் 144 தடை உத்தரவு பிறப்பித்தார். எனினும் தடை உத்தரவை மீறி தங்களின் எதிர்கால வாழ்க்கைக்காக போராடிய தூத்துக்குடி மக்கள் மீது காவல்துறையை ஏவி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கிறது, இதில் இரண்டிற்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதாகவும், மேலும் பலர் படுகாயமுற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஊடகத்தைச் சார்ந்தவர்கள் மீதும், அவர்களின் ஒளிபரப்பு சாதனங்களையும் காவல்துறையினர் சேதப்படுத்தியுள்ளனர். தூத்துக்குடி மக்களின் நியாயமான கோரிக்கைக்கு முறையான அனுமதியையோ அல்லது அவர்களின் கோரிக்கை தொடர்பான அறிக்கையையோ வழங்கி அம்மாவட்ட மக்களுக்கு துணையாக அரசு இருந்திருக்கவேண்டும், அதைவிடுத்து சொந்த மக்களையே சுட்டுக்கொல்வது அரக்கத்தனம், இது சர்வாதிகாரம்.

மக்களுக்காகத்தான் அரசே தவிர, மக்களை நசுக்கி நாசமாக்கிக் கொல்வது அரசின் பணியல்ல. தூத்துக்குடி மக்களின் உணர்வை மதிக்கத் தவறி அடக்குமுறை என்ற தவறான முடிவை எடுத்த பழனிசாமியின் அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதோடு, கொந்தளிக்கும் மனநிலையில் உள்ள தூத்துக்குடி மக்களின் இப்பிரச்சினைக்கு ஒரே தீர்வு மக்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை இந்த அரசு நிரந்தரமாக மூடுவதுதான்.

அதைவிடுத்து காவல்துறையை வைத்து மக்களின் போராட்டத்தை இனியும் முடக்க முயற்சித்தால், ஏப்.17 அன்று அமமுக சார்பில் தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் கண்டனப் பொதுக்கூட்டத்தில் அறிவித்ததைப் போல், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை மக்கள் சக்தியே பெரியது என்பதை உணர்த்தும் வகையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.”

இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x