Published : 22 May 2018 03:54 PM
Last Updated : 22 May 2018 03:54 PM

ஸ்டெர்லைட் போராட்டம்; துப்பாக்கிச் சூடு தவிர்க்க முடியாதது: அமைச்சர் ஜெயக்குமார்

 தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் கலவரமாக மாறியதால், போலீஸாரின் துப்பாக்கிச் சூடு தவிர்க்க முடியாததாகி விட்டது என, தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் இன்று (செவ்வாய்க்கிழமை) 144 தடை உத்தரவை மீறி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி சுற்றுவட்டார கிராம மக்கள் பேரணியாகச் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது, போலீஸார் தடியடி நடத்தி பொதுமக்களைக் கலைக்க முற்பட்டனர்.

இதையடுத்து, அங்கு மேலும் பொதுமக்கள் கூடிய வண்ணம் இருந்ததால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறினர். இதையடுத்து, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி பொதுமக்களைக் கலைக்க முற்பட்டனர். மேலும், போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பொதுமக்களில் ஒரு பெண் உட்பட 6 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,  “2013-ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால், அதனை எதிர்த்து ஆலை நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் ஆலையைத் திறக்க வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதனிடையே ஸ்டெர்லைட் ஆலையின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு தமிழக அரசு எந்தவித அனுமதியும் வழங்கவில்லை.

தமிழக அரசு மக்களுடைய உணர்வை மதிக்கின்ற அரசாக உள்ளது. மக்களின் உணர்வுக்கு எதிராகச் செயல்படக் கூடாது என்பதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார். பசுமை தீர்ப்பாயத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம் ஆலைக்கு எதிரான வாதங்களை தமிழக அரசு கடுமையாக முன்வைத்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை இரண்டாம் கட்டப் பணிகளை ஆரம்பிக்கக்கூடாது என பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு ஆட்சேபனை தெரிவித்துள்ளது.

மக்கள் விரும்புகின்ற எந்தவொரு திட்டத்திற்கும் தமிழக அரசின் ஆதரவு உண்டு. மக்கள் விரும்பாத திட்டங்களுக்கு அரசின் ஆதரவு இல்லை. இந்த நிலையில் வன்முறை என்பது எதற்குமே தீர்வாகாது. வன்முறையால் சாதித்து விடலாம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. மக்களின் போராட்டம் ஜனநாயகத்துக்கு உட்பட்டது என்றால் அதனை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு உள்ளே சென்று கலவரம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால், துப்பாக்கிச் சூடு தவிர்க்க முடியாததாகிவிட்டது.

துப்பாக்கிச் சூடு தமிழக அரசின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்டதா என்பது விசாரணைக்குப் பின் தான் உண்மை நிலை தெரியவரும். தொலைக்காட்சிகளில் இதுகுறித்த செய்தி ஒளிபரப்ப தடை செய்யுமாறு தமிழக அரசு எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இதனை இருட்டடிப்பு செய்ய வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து அரசு முடிவெடுக்கும். அதில் மாற்றுக்கருத்து இல்லை. தமிழ்நாடு அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. யார் செய்தாலும் வன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாது. தூத்துக்குடியில் கலவரத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத்தான் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருந்தும் கலவரம் நடைபெற்றுள்ளது கேள்விக்குறியாக உள்ளது. இதுதொடர்பாக விசாரணை ஆணையம் அமைப்பது குறித்து அரசு தான் முடிவெடுக்கும்.

நீதிமன்றத்தில் இதுகுறித்த வழக்கு நிலுவையில் உள்ளபோது இதுபற்றி பேச முடியாது. ஆனால், ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்பது தான் தமிழக அரசின் நிலைப்பாடு. தமிழக அரசின் நிலைப்பாடும், தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிலைப்பாடும் ஒன்று தான். எந்த சூழ்நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பது குறித்து பின்னர் தெரியவரும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை கேட்கப்படும்.

துரதிர்ஷ்டவசமான இந்த சம்பவம் குறித்து முதல்வர் வருந்தினார். இந்த கலவரம் குறித்த அறிக்கையை அரசு வெளியிடும்'' என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

இதை மிஸ் பண்ணாதீங்க:

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x