Published : 22 May 2018 02:23 PM
Last Updated : 22 May 2018 02:23 PM

ஸ்டெர்லைட் போராட்டம்; அசம்பாவிதத்திற்கு முழு காரணம் உளவுத்துறையின் தோல்வி: ஸ்டாலின் குற்றச்சாட்டு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடைபெற்ற அசம்பாவிதத்திற்கு முழு காரணம் தமிழக அரசின் கையாலாகாத்தனமும், உளவுத்துறையின் தோல்வியும் தான் என, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

தூத்துக்குடியில் இன்று (செவ்வாய்க்கிழமை) 144 தடை உத்தரவை மீறி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி சுற்றுவட்டார கிராம மக்கள் பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது, பொதுமக்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திரண்ட பொதுமக்களை போலீஸார் தடியடி நடத்திக் கலைக்க முற்பட்டனர். இதில், போலீஸார் மீது போராட்டக்காரர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தினர்.இதில் போலீஸார் பலருக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீஸாரின் 3 இருசக்கர வாகனங்களை போராட்டக்காரர்கள் தீ வைத்துக் கொளுத்தினர்.

இதையடுத்து, அங்கு மேலும் பொதுமக்கள் கூடிய வண்ணம் இருந்ததால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறினர். இதையடுத்து, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி பொதுமக்களை கலைக்க முற்பட்டனர். இதனால், அப்பகுதியே வன்முறைக் களமாக மாறியது.

இதுதொடர்பாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய முகநூல் பக்கத்தில், “நீண்ட நாட்களாக தொடர்ந்து ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டு வருவதை தமிழக அரசு கண்டுகொள்ளவும் இல்லை, சுமுகத் தீர்வு காணவும் இல்லை. வழக்கம்போல் மக்கள் போராட்டத்தை முடக்க நினைத்த தமிழக அரசின் அலட்சியத்தாலேயே, இன்று மக்கள் பேரணி நடத்தி, அது துப்பாக்கிச் சூடு வரை சென்றுள்ளது.

இன்றைய பேரணி பற்றி முன்பே அறிந்த காவல்துறை, எந்தவொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காதது கடும் கண்டனத்திற்குரியது. இன்று தூத்துக்குடியில் நடைபெற்ற அசம்பாவிதத்திற்கு முழு காரணம் தமிழக அரசின் கையாலாகாத்தனமும், உளவுத்துறையின் தோல்வியும் தான். இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், ஸ்டெர்லைட் ஆலையை அரசு உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரத்தில் மக்களின் நலனுக்காக நடைபெறும் போராட்டங்கள் ஜனநாயக ரீதியிலும், அறவழியிலும் நடந்திடும் வகையில் எதிர்காலத்திலாவது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதை மிஸ் பண்ணாதீங்க:

விபத்தில் மகன் இறந்த துக்கத்தில் பெற்றோர் தற்கொலை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x