Last Updated : 20 May, 2018 11:57 AM

 

Published : 20 May 2018 11:57 AM
Last Updated : 20 May 2018 11:57 AM

தொடர்ந்து 7-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு: 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விலை அதிகரிப்பு

 

கர்நாடகத் தேர்தல் முடிந்தபின், தொடர்ந்து 7-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையை அரசு எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன.

கடந்த 2013-ம் ஆண்டுக்குப் பின், தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.76.24 காசுகளாகவும், டீசல் விலை லிட்டர் ரூ.67.57 காசுகளாகவும் விலை அதிகரித்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.

இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப மாதந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வந்தன. பின்னர், அவற்றின் விலை மாதம் இருமுறை என மாற்றி அமைக்கப் பட்டது.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையைத் தினந்தோறும் என்ற அடிப்படையில் நிர்ணயம் செய்யத் தொடங்கின.

அதன்பின் நாள்தோறும் சில காசுகள் அளவுக்கு பெட்ரோல்,டீசல் விலையில் மாற்றங்கள் செய்யப்பட்டபோதிலும், அது மாதம் முழுவதும் மொத்தமாகப் பார்க்கும் போது, விலை உயர்வு அதிகமாக இருந்து வருகிறது. இதற்கு மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவி வருகிறது.

கர்நாடகத் தேர்தலை காரணம் காட்டி கடந்த 19 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யாமல் எண்ணெய் நிறுவனங்கள் இருந்தன. ஆனால், கடந்த 14-ம் தேதி முதல் மீண்டும் விலையை உயர்த்தி வருகின்றன.

இன்று ஒரே நாளில் டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு 33 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.76.24க்கு விற்பனையாகிறது. டீசல் லிட்டருக்கு 26 காசுகள் உயர்ந்து, ரூ.67.57க்கு விற்பனையாகிறது. இந்த விலை ஒவ்வொரு மாநிலத்துக்கு போக்குவரத்துச் செலவு, வாட்வரி ஆகியவற்றைக் கணக்கிடும்போது இன்னும் அதிகரிக்கும்.

இதற்கு முன் கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.76.06 ஆக இருந்தது, அதன்பின் இப்போது பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. கடந்த 7 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் 61 காசுகளும், டீசல் விலைலிட்டருக்கு ஒரு ரூபாய் 64 காசுகளும் அதிகரித்துள்ளன.

மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 84.07 ரூபாயும், போபால் நகரில் லிட்டர் ரூ.81.83 , பாட்னாவில் ரூ.81.73, ஹைதராபாத்தில் ரூ.80.76, கொல்கத்தாவில் ரூ.78.91, சென்னையில் ரூ.79.13 காசுகளாக உயர்ந்துள்ளன.

டீசல் விலை சென்னையில் டீசல் ஒரு லிட்டர் ரூ.71.32 , ஹைதராபாத்தில் ரூ.73.45, திருவனந்தபுரத்தில் ரூ.73.34 , காந்திநகரில் ரூ.72.63 , புவனேஷ்வரத்தில் ரூ.72.43 , ஜெய்ப்பூரில் ரூ.71.97 , கொல்கத்தாவில் ரூ.71.32 , மும்பையில் டீசல் விலை ரூ.71.12 காசுகளாக விற்பனையாகின்றன.

இந்நிலையில், சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்று 80 அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டுக்குப் பின் இந்த விலை உயர்வைக் கச்சா எண்ணெய் எட்டியுள்ளதால் மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது.

இதற்கிடையே கர்நாடகத் தேர்தலுக்காக 3 வாரங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் இருந்ததால், எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அதை ஈடுகட்ட பெட்ரோல், டீசல் விலை ரூ.4 உயர்த்த புரோக்கேஜ் நிறுவனங்கள் பரிந்துரை செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால், பெட்ரோல், டீசலுக்கான உற்பத்தி வரி குறைக்கப்பட்டால், நுகர்வோர்கள் மீதானசுமை குறையுமே என்ற கேள்விக்கு பதில் அளிக்க மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் மறுத்துவிட்டார்.

கடந்த 2014-ம் ஆண்டில் பாஜக ஆட்சிக்கு வந்தபோது, சர்வதேச அளவில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை படுவீழ்ச்சி அடைந்தது. ஆனால், அதன்பலனை மக்களுக்கு அளிக்காமல் விலையைக் குறைக்காமல் மாறாக உற்பத்தியை வரியை மட்டும் மத்திய அரசு அதிகரித்துக்கொண்டது. அதன்படி கடந்த 2014 முதல் 2016ம் ஆண்டுவரை உற்பத்தி வரி 9 முறை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

கடந்த 15 மாதங்களில் பெட்ரோல் மீது லிட்டர் ஒன்றுக்கு ரூ.11.77 காசுகள் உற்பத்தி வரி உயர்த்தப்பட்டுள்ளது, டீசல் மீது லிட்டர் ஒன்றுக்கு ரூ.13.47 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு வருமானம் இரட்டிப்பாக்கியுள்ளது.

கடந்த 2014-15ம் ஆண்டில் ரூ.99 ஆயிரம் கோடி உற்பத்தி வரியில் இருந்து வரிவருவாய் கிடைத்தது. ஆனால், தொடர்ந்து வரி உயர்த்தப்பட்டதன் காரணமாக தற்போது, அரசுக்கு உற்பத்தி வரியின் மூலம் ரூ. 2லட்சத்து 42 ஆயிரம் கோடி கிடைத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல், டீசல் விலை கடுமையாக கடந்த ஆண்டில் இருந்து உயர்ந்து வருவதைக் கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உற்பத்தி வரியை 2 ரூபாய் மத்தியஅரசு குறைத்தது குறிப்பிடத்தக்கது.

இதைப்படிக்க மறந்துடாதீங்க...

 

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x