Published : 20 May 2018 08:49 AM
Last Updated : 20 May 2018 08:49 AM

கர்நாடக அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்திய 3 உச்ச நீதிமன்ற நீதிபதிகள்

கர்நாடக அரசியலில் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்கள் ஏற்பட உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் முக்கிய காரணமாக இருந்துள்ளனர்.

கர்நாடக தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) கட்சிகள் சேர்ந்து ஆட்சி அமைக்க உரிமை கோரின. ஆனால் ஆளுநர் வஜுபாய் வாலா, பாஜகவின் எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைத்தார். இதை எதிர்த்து காங்கிரஸ், மஜத கட்சிகள் 16-ம் தேதி நள்ளிரவில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தன.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, எஸ்.ஏ.பாப்டே மற்றும் அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு, எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க மறுத்தது. இதையடுத்து 17-ம் தேதி எடியூரப்பா முதல்வராக பொறுப்பேற்றார். பின்னர் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் உடனடியாக (நேற்று) நம்பிக்கை வாக்கெடுப்பை கோருமாறு எடியூரப்பாவுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், தனக்கு போதிய ஆதரவு இல்லை என்பதை உணர்ந்த எடியூரப்பா, நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு சற்று முன்பு தனது பதவியை ராஜினாமா செய்தார். இதில் இந்த 3 நீதிபதிகளின் பங்கு மிகவும் முக்கியமானதாக அமைந்தது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்வுக்கு காரணமான 3 நீதிபதிகளின் விவரம்:

நீதிபதி ஏ.கே.சிக்ரி: 1954, மார்ச் 7-ல் பிறந்தார். 1977-ம் ஆண்டு ஜூலை மாதம் டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டு பணியை தொடங்கினார்.

1999, ஜூலை 7-ல் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியானார். 2011-ல் தற்காலிக தலைமை நீதிபதியானார். 2012-ல் பஞ்சாப் ஹரியாணா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியானார். கடந்த 2013-ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.

நீதிபதி எஸ்.ஏ.பாப்டே: மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் 1956, ஏப்ரல் 24-ல் பிறந்தார். 21 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றினார். 1998-ல் மூத்த வழக்கறிஞரானார். 2000, மார்ச் 29-ல் மும்பை உயர் நீதிமன்ற அமர்வின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2012 அக்டோபரில் மத்திய பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியானார். 2013 ஏப்ரலில் உச்ச நீதிமன்ற நீதிபதியானார்.

நீதிபதி அசோக் பூஷண்: உத்தரபிரதேச மாநிலத்தில் 1956 ஜூலை 5-ல் பிறந்தார். அலகாபாத் பல்கலைக்கழகத்தில் 1979-ல் சட்டப் படிப்பை முடித்தார். அதே ஆண்டில் உத்தரபிரதேச பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்தார்.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். 2001, ஏப்ரல் 24-ல் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியானார். பின்னர் கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்தார். 2016, மே 13-ல் உச்ச நீதிமன்ற நீதிபதியானார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x