Published : 21 May 2018 04:46 PM
Last Updated : 21 May 2018 04:46 PM

நிபா வைரஸ் பாதிப்பு; தமிழக மக்கள் பீதியடைய வேண்டாம்: சுகாதாரத் துறை செயலாளர் அறிவுறுத்தல்

நிபா வைரஸ் பாதிப்பு குறித்து தமிழகத்தில் இதுவரை எந்தவொரு புகாரும் வரவில்லை என தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வவ்வால்களால் பரவும் நிபா வைரஸ் மனிதர்களையும், விலங்குகுளையும் தாக்கி வருகிறது. பல நாடுளில் இந்த வைரஸ் பெருத்த உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கேரளாவை அச்சுறுத்தி வரும் நிபா வைரஸ் தாக்குதலால் அங்கு 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. நோய் பாதிப்பு குறித்து மத்திய குழு ஆய்வு செய்கிறது.

இந்நிலையில், சென்னையில் இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “மலைப்பாங்கான பன்றிப் பண்ணைகளில் இருந்து தான் நிபா வைரஸ் பரவ வாய்ப்புள்ளது. இந்த வைரஸ் மனிதரிடம் இருந்து மனிதருக்குப் பரவ வாய்ப்பில்லை. எந்தவொரு நோய்த் தாக்கத்தையும் வெளிப்படுத்தாமல் இருக்கக்கூடிய உயிரினம் வவ்வால். கேரளாவில் நோய் பாதித்த வவ்வால்கள் அதிக தூரம் பறந்து வர வாய்ப்பில்லை. இருப்பினும், கேரள எல்லையில் இருக்கக்கூடிய நீலகிரி, கோவை ஆகிய பகுதிகளில் கூடுதல் கண்காணிப்புடன் இருக்குமாறு சுகாதாரத் துறைக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் அறிவுறுத்தியுள்ளோம்.

தமிழகத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் காய்ச்சல் நிலைமையை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து கண்காணிக்கிறோம். அதனால், ஏதேனும் குறிப்பிட்ட பகுதியில் கூடுதலாக காய்ச்சல் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தோம். ஆனால், இதுவரை அப்படி எதுவும் இல்லை.

தமிழகத்தில் தேவையற்ற பீதி வேண்டாம். சுகாதாரத் துறை கால்நடைத் துறையுடனும் இணைந்து செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் ஏதேனும் காய்ச்சல் ஏற்பட்டால் அது எம்மாதிரியான காய்ச்சல் என்பதை அரசு மருத்துவமனைக்கு சென்று சோதித்துக் கொள்ள வேண்டும். கேரளாவில் உள்ள சுகாதாரத் துறையுடன் தொடர்பில் தான் உள்ளோம்” என ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதை மிஸ் பண்ணாதீங்க:

12 ஆண்டுகளுக்கு பிறந்த குழந்தை: கொண்டாடி மகிழும் பிரேசில் தீவு

இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் விஜய் அவார்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x