Published : 21 May 2018 03:52 PM
Last Updated : 21 May 2018 03:52 PM

12 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை: கொண்டாடி மகிழும் பிரேசில் தீவு

பிரேசிலில் உள்ள பிரபல சுற்றுலா தீவு ஒன்றில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது. பல ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத அந்தத் தீவில், குழந்தைப் பிறப்பு பற்றிய தகவல் அறியாத அந்தப் பெண், கழிப்பறையில் குழந்தை பெற்று பயந்து அலறியுள்ளார். தீவுக்கு வந்துள்ள புது வரவை வரவேற்று மக்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

பிரேசில் நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற தீவு பெர்னாண்டோ டி நோரன்ஹோ. இங்குள்ள அழகிய கடற்கரையும், வனப்பகுதியும் உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்ககான சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கிறது. இங்கு 3 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். ஆனால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

சிறிய தீவு என்பதாலும், அதன் இயற்கை அழகு சீர்குலைந்து விடக்கூடாது என்பதாலும் அங்கு மக்கள்தொகை கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. தீவில் மக்கள் தொகை உயர்வதை விரும்பாத பிரேசில் அரசு, அங்கு குழந்தை பெறுவதற்கு கட்டுப்பாடு விதித்துள்ளது.

அந்தத் தீவில் உள்ள மருத்துவமனைகளில் பிரசவ வார்டு மட்டும் இல்லை. 12 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தை பெற்றபோது, இங்குள்ள பெண்கள் தீவில் இருந்து வெளியேறி பிரேசில் நாட்டின் பிற நகரங்களுக்குச் சென்று குழந்தை பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் அந்தத் தீவில் 12 ஆண்டுகளுக்குப் பின், பெண் ஒருவர் குழந்தை பெற்றுள்ளார். 22 வயதான அவர் கர்ப்பமாக இருந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று குழந்தை பெற்றுள்ளார். வழக்கம்போல் கழிப்பறைக்குச் சென்ற அவருக்கு திடீரென குழந்தை பிறந்தது. குழந்தை  வெளியே வருவதைப் பார்த்து அதிர்ந்து போன அந்த பெண் கூப்பாடு போட்டு அலறியுள்ளார்.

உடனடியாக அவரது கணவர் கழிப்பறைக்குச் சென்று குழந்தையைக் கையில் எடுத்து, மனைவிக்கு பிரசவம் பார்த்துள்ளார். குழந்தை இப்படித்தான் பிறக்கும் என்பதை உணராமல் போன அந்தப் பெண் மயங்கினார். இதையடுத்து அந்தப் பெண்ணும், குழந்தையும் அருகில் உள்ள மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பெற்று வரும் தாயும் சேயும் நலமுடன் உள்ளனர். அந்தத் தீவில் பல ஆண்டுகளாக குழந்தையே பிறக்காததால் குழந்தைப் பேறு பற்றிய தகவல்கள் தெரிந்திருக்கவில்லை. குழந்தை எப்படி பிறக்கும் என்ற தகவல் தனக்குத் தெரியாது என தற்போது குழந்தை பெற்றுள்ள பெண்ணும் கூறியுள்ளார்.

தங்கள் சொர்க்கத் தீவில் 12 ஆண்டுகளுக்குப் பின், குழந்தை பிறந்துள்ள தகவல் வெளியானதும், அங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போயினர்.

ஆடைகள், ஆபரணங்கள் என பரிசுப் பொருட்களுடன் அந்தத் தீவு மக்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். எனினும் அந்தத் தீவில் குழந்தை பெறுவதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் பிரேசில் அரசு குழந்தை பெற்ற பெண்ணின் பெயர் மற்றும் தகவல்களை வெளியே தெரிவிக்கவில்லை. அந்தப் பெண்ணும் தனது பெயரை வெளியிட விரும்பவில்லை.

 

இதை மிஸ் பண்ணாதீங்க:

அருணாச்சலப் பிரதேசத்தில் ரூ. 4 லட்சம் கோடி தங்கச் சுரங்கம்: அத்துமீறும் சீனா; அடுத்த மோதல் ஆரம்பம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x