Published : 19 May 2018 02:10 PM
Last Updated : 19 May 2018 02:10 PM

மதிமுக -நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் மோதல்: திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு

திருச்சி விமான நிலையத்தில் மதிமுகவினருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் மோதல் ஏற்பட்டதால் அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலம் செல்வதற்காக மதிமுக பொதுச் செயலர் வைகோ, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் இன்று (சனிக்கிழமை) சென்னையில் இருந்து ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் திருச்சிக்கு வந்தனர்.

வரவேற்க மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு சேரன் ஆகியோர் தலைமையில் மதிமுகவினரும், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபு தலைமையில் நாம் தமிழர் கட்சியினரும் விமான நிலைய வாசலில் தங்களது கட்சி கொடிகளுடன் காத்திருந்தனர்.

வைகோ, சீமான் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் விமானத்திலிருந்து இறங்கி டெர்மினலுக்குள் வந்தனர். அப்போது மதிமுக பொதுச் செயலர் வைகோ முதலில் அங்கிருந்து வெளியேறி, வாசல் பகுதிக்கு வந்தார். அவருக்கு வாழ்த்து முழக்கங்கள் எழுப்பி மதிமுகவினர் வரவேற்றனர்.

பின்னர் வைகோ செய்தியாளர்களை சந்தித்து விட்டு காரில் தஞ்சைக்கு புறப்பட்டார். அப்போது அங்கு கூடி இருந்த நாம் தமிழர் தொண்டர்களில் சிலர் வைகோ குறித்து கேலி பேசியதாக தெரிகிறது.

ஆத்திரமடைந்த மதிமுக தொண்டர்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது நாம் தமிழர் கட்சியை சேர்ந்த கரிகாலன் என்பவர் மயங்கி விழுந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இருதரப்பினரையும் சமாதனம் செய்து விலக்கி விட்டனர்.

சிறிது நேரம் கழித்து விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த சீமானிடம் இதுதொடர்பாக பத்திரிகையாளர்கள் கருத்து கேட்டனர்.

“இதற்கு முன் இப்படி நடந்ததில்லை. பிரச்சினை ஏன் ஏற்பட்டது என்பது குறித்து இனிமேல் தான் விசாரிக்க வேண்டும்” எனக்கூறி விட்டு காரில் ஏறி தஞ்சைக்கு புறப்பட்டார்.

நாம் தமிழர் - மதிமுக கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலால் திருச்சி விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே தங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விமான நிலைய காவல் நிலையத்தில் மதிமுக மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி சோமு புகார் அளித்துள்ளார்.

இதை மிஸ் பண்ணாதீங்க:

 ‘நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலையில் ஒளிபரப்ப வேண்டும்’ - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x