Published : 19 May 2018 12:43 PM
Last Updated : 19 May 2018 12:43 PM

விவசாயிகளை முன்னிறுத்தியே ஆலோசனைக் கூட்டம்; எங்களை அல்ல: கமல் விளக்கம்

விவசாயிகளின் பிரச்சினையை முன்னிறுத்தி தான் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதாகவும், தங்களை முன்னிறுத்தி அல்ல எனவும், மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதற்காக இன்று (சனிக்கிழமை) ‘காவிரிக்கான தமிழகத்தின் குரல்’ என்ற கூட்டம் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சென்னையில் நடத்தப்படுகிறது.

இந்தக் கூட்டத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தலைமை ஏற்பார் என மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஏற்கெனவே அறிவித்திருந்தார். ஆனால், அதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மறுப்பு தெரிவித்தது. அதேபோல், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான விசிக, மதிமுக உள்ளிட்ட 9 கட்சிகள் அந்தக் கூட்டத்தில் பங்கேற்காது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இக்கூட்டத்திற்கு முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், “விவசாயிகளின் பிரச்சினையை முன்னிறுத்தி தான் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. எங்களை முன்னிறுத்திக் கூட்டத்தை நடத்துவதாக அழைப்பை புறக்கணித்த கட்சிகள் தவறாக புரிந்துகொண்டன.

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு இரு மாநிலங்களுக்கிடையேயான தண்ணீர் பிரச்சினை குறித்த தீர்ப்பு தான். ஆனால், தமிழக விவசாயிகளின் பிரச்சினை இன்னும் தீர்ந்தபாடில்லை. அந்த பிரச்சினையை பற்றி பேசுவதற்கு நாங்கள் மட்டும் போதாது. அதுகுறித்து அனுபவம் மிக்கவர்கள் ஆலோசிக்கத் தான் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது” என கூறினார்.

இதை மிஸ் பண்ணாதீங்க:

கர்நாடக சபாநாயகராக போபையாவே செயல்படுவார்; உச்ச நீதிமன்றம் உத்தரவு: வாக்கெடுப்பை நிறுத்தி வைக்க சம்மதமா? என காங்கிரஸூக்கு நீதிபதிகள் அதிரடி கேள்வி


தப்புவாரா எடியூரப்பா? - பாஜகவுக்கு உள்ள 5 வாய்ப்புகள்: வாக்கெடுப்பில் வெற்றி பெற புதிய வியூகம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x