Published : 19 May 2018 10:46 AM
Last Updated : 19 May 2018 10:46 AM

தப்புவாரா எடியூரப்பா? - பாஜகவுக்கு உள்ள 5 வாய்ப்புகள்: வாக்கெடுப்பில் வெற்றி பெற புதிய வியூகம்

கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் இதில் வெற்றி பெற சில அதிரடி வியூகங்களை பாஜக தரப்பு வகுத்து வருவதாக கூறப்படுகிறது. அந்த கட்சிக்கு 5 வாய்ப்புகள் இருப்பதாக சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 104 எம்எல்ஏக்கள் பெற்று தனிப்பெரும் கட்சியான பாஜக ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியது.

அதேசமயம், காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை இணைந்து பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரின. ஆனால் அந்த கோரிக்கையை நிராகரித்த ஆளுநர் வாஜ்பாய் வாலா, கர்நாடக முதல்வராக எடியூரப்பாவிற்கு, பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதை எதிர்த்து காங்கிரஸ் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கர்நாடக முதல்வராக எடியூரப்பா சட்டப்பேரவையில் இன்று மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி, தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி கர்நாடக சட்டப்பேரவையில் வாக்கெடுப்புக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. பாஜகவினர் கடத்த வாய்ப்பு இருப்பதாக புகார் எழுந்ததால் ஹைதராபாத் சென்ற காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள எம்எல்ஏக்கள் இன்று காலை பெங்களூரு திரும்பினர்.

அவர்கள் அனைவரும் பெங்களூருவில் உள்ள ஓட்டலில் ஓய்வு எடுத்த பின் கர்நாடக சட்டப்பேரவைக்கு செல்ல தயாராகினர். இதனிடையே கர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிருபிக்க பாஜவினர் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். இதுதொடர்பாக கர்நாடக பாஜக தலைவர்களிடம் அக்கட்சித் தலைவர் அமித் ஷா ஆலோசனை நடத்தி வருகிறார்.

லிங்காயத் எம்எல்ஏக்களுக்கு வலை

மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி முதல்வராக பதவியேற்க காங்கிரஸ் ஆதரவு அளிக்க முன் வந்ததை காங்கிரஸில் உள்ள லிங்காயத் சமூக எம்எல்ஏகளுக்கு பிடிக்கவில்லை. காங்கிரஸில் 18 பேரும், மதச்சார்பற்ற ஜனதாதளத்தில் 2 பேரும் லிங்காயத் சமூக எம்எல்ஏக்கள் உள்ளனர். லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த எடியூரப்பா முதல்வர் பதவியில் தொடருவதற்காக, இவர்களுக்கு பாஜக தரப்பில் வலை விரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தேர்தல் சமயத்தில் லிங்காயத் சமூகத்தில் பிளவு ஏற்படுத்தியதாக காங்கிரஸ் மீது அந்த சமூக தலைவர்கள் ஏற்கெனவே கோபத்தில் உள்ளனர். எனவே அவர்களின் ஆதரவுடன், அந்த சமூக எம்எல்ஏக்களை வளைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஜனார்த்தன் ரெட்டி

வடக்கு கர்நாடகாவில் பெல்லாரி, பிஜாப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தெலுங்கை தாய் மொழியாக கொண்ட மக்கள் அதிகமாக வசிக்கின்றனர். பாஜகவின் செல்வாக்குடன் திகழும் ஜனார்த்தன் ரெட்டி மூலமாக, அந்த சமூகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏக்களை இழுக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்காக பண பேரமும் நடந்து வருகிறது.

எடியூரப்பா தப்புவரா?

கர்நாடக சட்டப்பேரவையில் மொத்தம் 224 எம்எல்ஏக்கள் உள்ளனர். இரு தொகுதிகளில் தேர்தல் நடைபெறாத நிலையில் மொத்தம் 222 எம்எல்ஏக்கள் தற்போது தேர்வாகியுள்ளனர். இதில் 104 எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே பாஜகவுக்கு உள்ளது. அதேசமயம் காங்கிரஸ் 78 மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள எம்எல்ஏக்கள் 38 பேர் உள்ளனர். மேலும் இரு சுயேச்சை எம்எல்ஏக்கள் அந்த அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன் மூலம் அந்த அணியின் மொத்த எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 118 ஆகும். சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 222 பேரில் 111 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே பாஜக வெற்றி பெறும். தற்போதுள்ள எம்எல்ஏக்களில் ஒருவர் சபாநாயகராகி விட்டதால் பாஜக அணிக்கு 103 பேர் பலம் மட்டுமே உள்ளது. எனவே இன்னமும் 8 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. இந்த சூழலில் தான் இன்று மாலை 4 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

பாஜகவுக்கு உள்ள 5 வாய்ப்புகள்

வாக்கெடுப்பில் வெற்றி பெற எடியூரப்பாவிற்கு 5 வாய்ப்புகள் இருப்பதாக சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

1) அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள எம்எல்ஏக்களை எடியூரப்பாவிற்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்யலாம். ஆனால் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் மூலம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. எனினும் தமிழகம் போன்ற மாநிலங்களில் இந்த வழக்கு பல காலம் நீதிமன்றத்தில் இருப்பதால் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படலாம்.

2) காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள எம்எல்ஏக்களில் சிலரை சட்டப்பேரவைக்கு வரவிடாமல் செய்யலாம். அவர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்றால், வந்தவர்களில் பெரும்பான்மை என்ற அடிப்படையில் பாஜக வெற்றி பெற வாய்ப்புள்ளது.

3) காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள எம்எல்ஏக்கள் சிலர் சட்டபேரவைக்கு வந்து வாக்கெடுப்பின்போது, நடுநிலைமை வகிக்கிலாம். அப்போது ஆதரவு குறைவாகும் என்பதால் எடியூரப்பா வெற்றி பெற வாய்ப்பு ஏற்படும். இதுவும் கொறாடா உத்தரவுக்கு எதிரான நடவடிக்கையே. ஆனால் அரசு வெற்றி பெற்று விடும் என்பதால் மற்றவை நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்பட்டதாகி விடும்.

4) சபாநாயகர் பாஜகவை சேர்ந்தவர் என்பதால் எதிர் தரப்பு எம்எல்ஏக்கள் சிலரின் வாக்குகளை செல்லததாக அறிவிக்க வாய்ப்புள்ளது. அதன் மூலம் எதிர்ப்பு எண்ணிக்கையை குறைக்க முடியும். ஆனால் இதுவும் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படும். ஆனாலும் பின்னர் தான் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால் அந்த வாய்ப்பை பாஜக பயன்படுத்தலாம்.

5) பெரும்பான்மையை நிருபிக்க முடியாத நிலை ஏற்பட்டால் வாக்கெடுப்பு நடைபெறும் போது பெரிய அளவில் கலவரம் ஏற்படலாம். இதை காரணம் காட்டி வாக்கெடுப்பை தள்ளி போடலாம்.

இதை மிஸ் பண்ணாதீங்க:

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x