Published : 22 Jan 2018 07:23 PM
Last Updated : 22 Jan 2018 07:23 PM

தோல்வியை வார்த்தைகளால் மறைப்பவர் அல்ல கோலி: தோனி குறித்து ஆகாஷ் சோப்ரா சூசகம்?

தென் ஆப்பிரிக்காவில் இந்திய அணி சந்தித்த தோல்வி வழக்கமானதோ, எதிர்பார்க்கப்பட்டதோ அல்ல என்று முன்னால் இந்திய தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ரா கட்டுரை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஈ.எஸ்.பி.என் கிரிக் இன்போ இணையதளத்தில் அவர் எழுதிய பத்தி ஒன்றில் இது பற்றி ஆய்ந்து எழுதியுள்ளார், அதில் விராட் கோலி தோல்விகளை வார்த்தைகளால் மறைப்பவர் அல்ல என்று கூறியதோடு முன்னாள் கேப்டன் தோனி அடிக்கடி பயன்படுத்தும் இரண்டு விஷயங்களை அவர் பெயரைக் குறிப்பிடாமல் சூசகமாகக் குறிப்பிட்டு விமர்சித்துள்ளார்.

தோனி அடிக்கடி ‘புரோசஸ்’ தான் முக்கியம் முடிவு முக்கியமல்ல, முடிவைப் பற்றி தனக்குக் கவலையில்லை என்று கூறிவருவது தோனியின் செய்தியாளர்கள் சந்திப்பை கூர்ந்து கவனிப்பவர்கள் நன்கு அறிந்ததே.

இந்நிலையில் ஆகாஷ் சோப்ரா தன் பத்தியின் தொடக்கத்திலேயே,

“கோலி ஒரு உணர்வுபூர்வமான கிரிக்கெட் வீரர். ஒரு பேட்ஸ்மெனாகத் தவறு செய்யும் போது அதனை ஒப்புக் கொள்ளக்கூடியவர், அதே போல் அணி சரியாக விளையாட போதும் அதனையும் ஒப்புக் கொள்வார். அவர் ‘புரோசஸ்’ ‘எதிர்காலத்திற்காக திட்டமிடுகிறோம்’ போன்ற வார்த்தைகள் பின்னால் தோல்வியை மறைப்பவர் அல்ல, கடந்த 2 ஆண்டுகளாக ஒன்றுக்கும் மேற்பட்டத் தருணங்களில் வெளிநாடுகளில் சிறப்பாக விளையாடுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.

அது தனக்கும் அணிக்கும் எவ்வளவு முக்கியமானது என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார். அதே போல் வீரர்கள் மேல் தனக்கு எவ்வளவு நம்பிக்கை உள்ளது என்பதையும், அன்னியமான சூழ்நிலையில் வெற்றி பெற தன் அணியிடம் என்ன திறமை உள்ளது என்பது பற்றியும் பேசியுள்ளார்” என்று கோலிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஆனாலும் இந்திய அணி நம்பர் 1 அணிதானா என்ற கேள்வியையும், 12 கேட்ச்களை நழுவ விட்டுவிட்டு அதற்கு தயாரிப்பின்மையையும் தென் ஆப்பிரிக்கச் சூழலையும் குறை கூற முடியாது என்றும் விமர்சித்துள்ளார். அதே போல் ரன் அவுட்களுக்கு நாம் சூழ்நிலையைக் குறை கூற முடியாது என்று கூறிய ஆகாஷ் சோப்ரா, “இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றிக்கு நெருக்கமாகவே வந்தது இந்திய அணி, சரியான அணிச்சேர்க்கையை அமைக்காதது விவாதங்களுக்கும் வருத்தங்களுக்கும் உரியதாக இருக்கலாம், ஆனால் இந்திய அணி இப்படித்தான் தோல்வியுறும் என்று ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டது என்று கூறுவது உண்மையான பிரச்சினைகளிலிருந்து திசைமாறுவதாகும்.” என்கிறார் ஆகாஷ் சோப்ரா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x