Last Updated : 15 Nov, 2017 12:05 PM

 

Published : 15 Nov 2017 12:05 PM
Last Updated : 15 Nov 2017 12:05 PM

தோனியின்  ‘புரோசஸ்’ தத்துவ பிரயோகமும் முரண்பாடுகளும்!

சமீப காலங்களாக பெரிய ஷாட்களை ஆட முடியாமல் திணறி கடும் விமர்சனங்களுக்கு ஆளாகி வரும், ஒரு காலத்திய பிக் ஹிட்டரான தோனி அடிக்கடி ஒன்றைக்கூறுவார், அதுதான் ‘புரோசஸ்’ என்ற வார்த்தை.

அவர் கேப்டனாக இருக்கும் காலங்களில் வெற்றி பெறும் போதெல்லாம் winning is important என்று கூறுவார், கடும் தோல்விகளைச் சந்திக்கும் போதெல்லாம் results are not important process is important என்று கூறுவார். அணி தோல்வியடையும் போது வின்னிங் எப்படி புரோசஸ் என்று மாறியதோ அதே போல் இவரது தனிப்பட்ட பேட்டிங் கடுமையாகச் சரிவடையும் போது  ‘வின்னிங்’ முக்கியத்துவம் குறைந்து ‘புரோசஸ்’ முக்கியத்துவம் பெறுகிறது.

எனவே புரோசஸ் என்பது தோனியைப் பொறுத்தவரையில் தோல்வி ஏற்படும் போதெல்லாம் தனக்குச் சாதகமாக (துஷ்) பிரயோகம் செய்யும் ஜோடனை, அலங்கார வார்த்தை என்பது தெளிவாகிறது.

அன்று துபாயில் தனது கிரிக்கெட் அகாடமியைத் தொடங்கி வைத்து பேசிய தோனி, தனக்கு எப்போதுமே புரோசஸ்தான் முக்கியம், முடிவுகளை நான் ஒரு போதும் சிந்திப்பதில்லை, ஓவருக்கு 10 ரன்கள், 14 ரன்கள், 5 ரன்களாக இருந்தாலும் எது சரியானதோ அதையே செய்வேன் என்ற ரீதியில் கருத்துக் கூறினார். இது ஏதோ அவரை கொள்கைப் பிடிப்பு மிக்கவராகவும் சுயநலமற்றவராகவும் பிறருக்குக் காட்டியிருக்கும், ஆனால் நாம் மேற்கூறியது போல் புரோசஸ் என்பது அதன் உண்மையான பொருளில், ஆதர்சமான பொருளில் தோனியினால் பயன்படுத்தப்படவில்லை, தோல்வியை மறைக்கும் ஒரு அலங்கார ஜோடனை, முகமுடியாகப் பயன்படுத்துகிறார் என்பது நமக்குப் புரியவருகிறது.

இதில் முக்கியமான முரண்பாடு என்னவெனில் தோனியை வாரிவாரி அணைத்து பாதுகாக்கும் கேப்டன் கோலியும் சரி, ரவிசாஸ்திரியும் சரி வெற்றிதான் முக்கியம், களத்தில் இறங்கினாலே வெற்றி என்ற இலக்குடன்தான் களமிறங்குகிறோம் என்கின்றனர், இவர்கள் இலக்கு என்னும் முடிவு நோக்கியவர்கள் என்றால்,  ‘புரோசஸ்’ என்ற  ‘நடைமுறை’,  ‘தொழிற்படுதல்’ அல்லது  ‘செயற்பாங்கு’ ஆகியவற்றுக்கே முக்கியத்துவம் கொடுக்கும் முடிவுகள் பற்றி கவலைப்படாத தோனியை எப்படி அணியில் தக்க வைக்க முடிகிறது?  எனவே அங்கு கொள்கைகள் எதுவும் இல்லை, சந்தைச் சக்திகள் அணியில் ஒவ்வொருவரது இடத்தையும் தீர்மானிக்கிறது என்றுதான் கூற வேண்டியுள்ளது, இதைத்தான் பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் தனது Democracy's XI என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தன் நூலில் பெயர் குறிப்பிடாத பிசிசிஐ அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டிக் கூறுவது என்னவெனில், “'Make no mistake, Dhoni knows which way the wind is blowing, he knows how to manoeuvre his way through the BCCI's corridors of power when required,'  என்று அந்த வாரிய அதிகாரி கூறியுள்ளதை எடுத்துரைத்துள்ளார்.

அதன் தமிழாக்கம் என்னவெனில், ‘தவறு செய்ய வேண்டாம், காற்று எப்பக்கம் வீசுகிறது என்பது தோனிக்குத் தெரியும். பிசிசிஐ-யின் அதிகார மையங்களுக்குள் எப்படி ஊடுருவது என்பதை தோனி அறிந்தேயிருக்கிறார்’ என்று அந்த அதிகாரி கூறியதாக ராஜ்தீப் சர்தேசாய் தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பின்னணியில் தோனி அடிக்கடி கூறும் ‘புரோசஸ்’ (Process) என்ற வார்த்தையின் துஷ்பிரயோகமற்ற உண்மையான பிரயோகங்கள் சிலவற்றைப் பார்ப்போம்:

பெயர்ச்சொல்லாக புரோசஸ் என்பது, தொடரும் ஒன்று, மேம்பாடு அல்லது வளர்ச்சி, இந்த வார்த்தையின் லத்தீன் வேர்ச்சொல்லான processus என்பது முன்னேறிச் செல்வது, நடைமுறை அல்லது செயலின் வழிமுறை. அதாவது இந்த வழிமுறை, தொடர் செயல்கள், அல்லது நடவடிக்கைகள் ஒரு முடிவை நோக்கிச் சென்று நோக்கத்தைப் நிறைவேற்றுவது என்று பொருள்.

வினைச்சொல்லாக நமக்கு இந்த இடத்தில் தேவைப்படும் அர்த்தம் செயற்பாங்கு மூலம் தயார் செய்துகொள்ளுதல் ஆகும். எதற்குத் தயார் செய்து கொள்ளுதல் வேண்டும்? எந்த ஒன்றையும் எதிர்நோக்கி தயார் செய்து கொள்ளுதல் என்பதே புரோசஸ். எனவே புரோசஸ் என்ற வார்த்தையின் அர்த்தத்திலேயே வேர்ச்சொல் முதல் சமகாலப் பிரயோகம் வரை ஒரு முடிவை நோக்கிய நடைமுறை, செயற்பாங்கு என்ற அர்த்தமே உள்ளது.

எனவே எனக்கு புரோசஸ்தான் முக்கியம், முடிவு முக்கியமல்ல என்று கூறுவது புரோசஸ் என்பதன் அர்த்தத்தைத் திரிக்கும் சுயமுரண்பாடு.  மேலும் முடிவு முக்கியமல்ல சூழ்நிலைகளுக்கு ஏற்ப எது சரியானதோ அதைத்தான் செய்ய முடியும் என்று கூறுகிறார் தோனி. அப்படிப்பார்த்தாலும் preference-utilitarianism என்ற ஒரு கோட்பாட்டின் படி மக்களுக்கு எது திருப்தி அளிக்கக் கூடியதோ அந்தத் திருப்தியை உண்டாக்கும் செயலே சரியான செயலாக இருக்க முடியும், எனவே புரோசஸ் முக்கியம் என்றாலும் அது வெற்றி என்ற ரசிகர்களின் திருப்தியை பூர்த்தி செய்யும் முயற்சியாக இருந்தால்தான் அது புரொசஸ் என்ற தன்மையை எட்ட முடியும். எனவே வெற்றி, முடிவு போன்ற இலக்குகள் இல்லாமல் புரோசஸ் என்பதைத் தனியாக சில இடங்களில் நாம் பிரிக்க முடியாது.

இதன் தத்துவார்த்தப் பொருளைப் பார்த்தோமானால், மாற்றம் என்பதே உண்மை, இலக்கு தேவையில்லை, நோக்கம், குறிக்கோள் தேவையில்லை போன்றவற்றின் எதிரொலிகளும் இந்த வார்த்தைக்கு உண்டு, எனவே தோனி இந்தப் பொருளில் கூறுகிறார் என்றால் செயல்வழிதான் முக்கியம், நடைமுறைதான் முக்கியம் அதன் மூலம் வெற்றியோ, ஆட்ட நாயகன் விருதோ, வெற்றிகரமாக முடித்து ஹீரோ ஆகும் தன்முனைப்போ இல்லை என்று தோனிக்குச் சாதகமாக  ‘புரோசஸ்’என்ற பிரயோகம் மூலம் அவரது வார்த்தைப் பிரயோகத்துக்கு வலிந்து ஒரு பொருளை நாம் ஏற்ற முடியும்.

ஆனால், விளையாட்டில் குறிப்பாக வெற்றிகளை வைத்து ஒரு அணியையே பிராண்டாக கட்டமைக்கும் சமகால நடைமுறைகளுக்கு புரோசஸ்தான் முக்கியம், வெற்றி, முடிவு, முக்கியமல்ல என்று கூறும் ஒருவரை எப்படி அணியில் வைத்துக் கொள்ள முடியும்? என்ற கேள்வி எழுகிறது. விராட் கோலி தலைமையில் கேப்டன், வீரர் என்ற திறமையை பிராண்டாகக் கட்டமைக்க வேண்டியதோடு ‘பிராண்ட்- டீம் இந்தியா’என்பதைக் கட்டமைக்கும் தேவையில்தான் இலங்கையுடன் குறுகிய காலத்தில் 3வது பெரிய தொடரை ஆடவிருக்கிறோம். இவ்வளவு டெஸ்ட் தொடர்கள் உள்நாட்டிலேயே நடத்தப்பட்டதன் அவசியம் வேறு என்னதான் இருக்க முடியும்? வெற்றிகளின் மூலம் இந்திய அணியை விராட் கோலி தலைமையில் பிராண்டாக மாற்றும் முயற்சியைத் தவிர.  இவற்றுக்கெல்லாம் காரண காரியம் ஒன்றுமில்லை, தொடரை எங்கு, யார் ஆடுவது என்பதெல்லாம் ஐசிசி விஷயம் என்று யாரேனும் நினைத்தால் அவர்கள் பரிதாபத்துக்குரியவர்களே.

எனவே கொள்கை அடிப்படையில் தோனியின் புரோசஸ் தத்துவம் உண்மையென்றால் கோலி, ரவிசாஸ்திரி & கோ-வின் வெற்றி சூளுரைகள், முனைப்புகள், குறிக்கோள்களுக்கு எதிரானது. ஓவருக்கு 5 ரன்கள், 10 ரன்கள், 14 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற டி20 வடிவத்திலோ, ஒருநாள் போட்டி வடிவத்திலோ புரோசஸ் என்பது முடிவைத் தீர்மானிப்பதே, வெற்றியை நோக்கியதே, இதையும் மீறி தோல்வி அடைந்தால் மட்டுமே புரோசஸ் சரியாக இருந்தது முடிவு சாதகமாக இல்லை என்று கூற முடியும்.

பவுண்டரி அடிக்க வேண்டிய பந்துகளை பவுண்டரிக்கு அனுப்புவதே புரோசஸ், அதை தட்டிவிட்டு ஒரு ரன், 2 ரன் என்று எடுப்பது புரோசஸ் அல்ல. அணி வெற்றி பெறுவதைப் பார்க்கத்தானே அவ்வளவு ரசிகர்கள் கியூவில் முண்டியடித்து டிக்கெட் வாங்கி ஸ்டேடியத்துக்கு வருகிறார்கள்? வீட்டில் பெரியோர்கள் மெகா சீரியல் பார்ப்பதைத் தடுத்து அவர்களிடமிருந்து ரிமோட்டைப் பிடுங்கி மேட்ச் பார்க்கும் இளைஞர்களும் மற்றவர்களும் தோனியின் புரோசஸைப் பார்க்கவா வருகிறார்கள்?

அப்படி கிரிக்கெட் ஆட்டத்தின் புரோசஸ்தான் முக்கியம் என்றால் அதற்கு ஓரளவுக்கு உதவக்கூடிய டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஏன் திடீரென விலகினாராம் தோனி?

இன்று தல தோனி, எங்க தல தோனி என்று ரசிக்கும் ரசிகர்கள்தான் அன்று உலகக்கோப்பையில் 60 ஒவர்கள் ஆடி 36 ரன்கள் எடுத்த சுனில் கவாஸ்கரை கேலி பேசுகின்றனர். சுனில் கவாஸ்கர் மே.இ.தீவுகளின் ராபர்ட்ஸ், ஹோல்டிங், மார்ஷல் ஆகியோரடங்கிய பயங்கர வேகப்பந்து வீச்சுக்கு எதிராக 95 பந்துகளில் சதம் அடித்தது ‘எங்கதல தோனி’ ரசிகர்களுக்குத் தெரியுமா? சுனில் கவாஸ்கர் 36 ரன்கள் எடுத்த காலக்கட்டத்தில் ஒருநாள் கிரிக்கெட் என்பது வெறும் முடிவை நோக்கிய பொழுதுபோக்கு அம்சமாகவே பார்க்கப்பட்டது. அதனால் கவாஸ்கர் புரோசஸ்தான் முக்கியம் என்று கூறினால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் கவாஸ்கர் அவ்வாறெல்லாம் பெரிய மனுஷத்தனமாகப் பேசவில்லை. டெஸ்ட் கிரிக்கெட் என்ற 5 நாள் உடல்/மன சவால்களைச் சமாளிக்க முடியாமல் இன்னும் கொஞ்ச காலம் ஒருநாள், டி20 என்று ஆடினால் தனக்கு நன்மையே என்று எடுத்த வணிகநலன் சார்ந்த முடிவை ‘புரோசஸ்’ என்று கூறி ஜோடனை செய்யலாமா என்பதே நம் கேள்வி.

மேலும் புரோசஸ் என்பது எங்கு முக்கியமெனில் கிரிக்கெட்டைக் கற்கும் அதன் ஆரம்ப காலக்கட்டங்களில் முக்கியம், ஏனெனில் சிறு வயதில் பணம், புகழ் போதைகள் ஒரு இளம் வீரர் கண்களை மறைக்கக் கூடாது, அதையே லட்சியமாக வைத்துக் கொண்டால் நாளை வெற்றி பெறமுடியாமல் போனால் மனநலம் கூட பாதிக்கப்படலாம், அதனால் சிறுவயதில் விளையாட்டில் புரோசஸுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று அறிவுரை வழங்கலாம். 36 வயதில் கிரிக்கெட்டின் அந்திம காலத்தில் இருந்து கொண்டு ஜெயிக்க வேண்டிய ஆட்டங்களில் அடிக்க முடியாமல் திணறி தன்னால் ஏற்படும் தோல்வியை  புரோசஸ், அது, இது என்று முகமூடியாகப் பயன்படுத்தலாமா என்பதே என் கேள்வி.

மேலும் இவரைப்போலவே தாங்களும் தோனியாக வேண்டும் என்ற கனவுடன் ஆடி வரும் பிற வீர்ர்கள் அணிக்குள் நுழைந்து சாதிக்க நினைக்கும் புரோசஸுக்கு தோனி தடையாக இருக்கலாமா?

இதில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் கட்டுரை ஆசிரியரின் தனிப்பட்ட கருத்துக்களே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x