Last Updated : 19 Dec, 2017 12:46 PM

 

Published : 19 Dec 2017 12:46 PM
Last Updated : 19 Dec 2017 12:46 PM

குருவே... யோகி ராமா..! 19: மகான் அறிந்து கொண்ட மகான்!

 

பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்

மகான்களின் சந்திப்பு, அவர்களின் தரிசனம் வாழ்வில் பல உன்னதங்களை நமக்குத் தந்தருளக் கூடியவை. வாழ்வில், ஏதேனும் ஓர் தருணத்தில், மகானின் தரிசனம் கிடைக்கப் பட்டிருந்தால், அதுவே நம்மை நல்வழிக்குக் கொண்டு செல்லும். புத்தியில் சத்விஷயங்களை உண்டுபண்ணும். அப்படி உண்டுபண்ணுகிற சத்விஷயங்களை, செயலாக்குவதற்கான அத்தனை திடத்தையும் தெளிவையும் வழங்கி அருள்வார்கள் மகான்கள்!

மருந்தின் பலனை அறியாமல் குடித்தாலும் அறிந்து உணர்ந்து குடித்தாலும் மருந்தின் இயல்பு என்னவோ அது நிகழ்ந்தே தீரும். மருந்தின் பலனானது நம்மை வந்தே தீரும். எதற்காக மருந்தைச் சாப்பிடுகிறோமோ, எதன் பொருட்டு உட்கொள்கிறோமோ... அவை நிவர்த்தி செய்யும் வல்லமை மருந்துக்கு உண்டு. அதுவே மருந்தின் மகத்தான குணம்!

அதுபோல், இந்த உலகுக்கு வந்த எல்லா மகான்களும் மாமருந்து என்றே போற்றப்படுகின்றனர். அப்படி போற்றப்படுவதற்கு, மருந்தின் குணம் போல், தன்னை நாடி வருவோரை அரவணைப்பதே காரணம்!, அருள் செய்யும் பணியை, ஆசி வழங்கும் சேவையை, செம்மையுறச் செய்து கொண்டிருந்தால்தான் மருந்தின் குணத்துக்கு ஈடாக முடியும். மாமருந்து என்று போற்றிக் கொண்டாடுவார்கள் மக்கள். மண்ணில் உதித்த மகத்தான மகான் என்று எல்லோரும் தேடித் தேடி வந்து வணங்குவார்கள்.

சுவாமி அரவிந்தரை, புதுச்சேரிக்கு வந்து தரிசித்தார் ராம்சுரத்குன்வர். பார்த்ததும், விழுந்து நமஸ்கரித்தார். அப்படி நமஸ்கரிக்கும் போதே, ’யாரிவர்... இவர் சாமான்யரில்லையே...’ எனும் எண்ணம் சுவாமி அரவிந்தருக்குள் உதித்தது.

நமஸ்கரித்துவிட்டு எழுந்தவரைத் தொட்டு ஆசீர்வதித்தார் சுவாமி அரவிந்தர். அந்த ஸ்பரிசத்தில், சட்டென்று உணர்ந்து கொண்டார். முகம் மலர்ந்தார். ராம்சுரத் குன்வரைப் பார்த்து புன்னகைத்தார்.

நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் எதிரில் நின்றாலே மகான்கள், சட்டென்று நம்மை உணர்ந்து கொள்வார்கள். அப்படி உணரக் கூடிய வல்லமையும் சக்தியும் இருப்பதால்தான், அவர்களை மகான்கள் என்றும் யோகிகள் என்றும் ஞானிகள் என்றும் போற்றுகிறோம். வணங்குகிறோம். கொண்டாடுகிறோம். அவரை கதி, அவரே வழிகாட்டி, அவரே குரு... என மகான்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறோம். மகான்களின் திருவடியே சரணம் என அனவரதமும் அவர்களின் திருநாமங்களை உச்சரித்துக் கொண்டிருக்கிறோம்.

நம்மிடம் யாரோ ஒருவர் நேரிலோ போனிலோ பேசும் போது, அந்தப் பேச்சைத் தொடங்குவதற்கு முன்பும் பேச்சை நிறைவு செய்கிற போதும், அந்த மகான்களின் திருநாமத்தைச் சொல்கிற அன்பர்கள் நிறையவே இருக்கிறார்கள். மகான்கள், மிக எளிதாக உணர்ந்து, நம் தேவைகள் என்ன, என்னவிதமான தேவைகளுக்காக இவர் வந்திருக்கிறார் என்பதையெல்லாம் புரிந்துணர்ந்து அருள்வார்கள். ஆசி வழங்குவார்கள்.

தன்னைத் தேடி வந்திருக்கிற ராம்சுரத் குன்வரை அவர் புரிந்து கொண்டார். உணர்ந்து கொண்டார்.அந்தத் தேடலின் விளைவால், உலகுக்கு மிகப்பெரிய நன்மை விளையப் போகிறது எனும் எண்ணம் அரவிந்தருக்குள் தோன்றியபடியே இருந்தது.

கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்பது போல், அரவிந்தர் எனும் மகான், பகவான் யோகி ராம்சுரத்குமார் எனும் மகானை சட்டென்று உணர்ந்து கொண்டதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

சுவாமி அரவிந்தரின் ஆசியும் அன்னையின் பேரருளும் பெற்றதும், ஏதோவொரு நிறைவுடன் நின்றார் ராம்சுரத்குன்வர். தேடியது கிடைக்கப் போகிறது எனும் நிம்மதியில், ஆனந்தத்தில் இருந்தார். கிடைத்துவிட்டதாகவே உணர்ந்து, சலனமற்று இருந்தார். நிறைவு, எப்போதும் சலனத்தைத் தராது. சலனமற்று இருக்கும் போதுதான், உள்ளே ஒரு நிறைவு ஏற்படும்!

அப்படியொரு ஆனந்த நிலையில், புதுச்சேரியில் சுவாமி அரவிந்தரின் ஆஸ்ரமத்தில் சிலநாட்கள் தங்கியிருந்தார் ராம்சுரத்குன்வர். அங்கே... அரவிந்தரின் சத்சங்கத்தில் கலந்து கொண்டார்.

தியானமும் மெளனமும் கொண்டு, ஆஸ்ரமத்தில் இருந்தார். சுவாமி அரவிந்தரின் கருத்துகளை இன்னும் உள்வாங்கிக் கொண்டார். அரவிந்தரைத் தரிசிக்கிற போதும் அவருடன் பேசுகிற வேளையிலும் உள்ளே ஏதொவொரு மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதாக உணர்ந்தார். அந்த ஆனந்தப் பரவசத்தை கூர்ந்து கவனித்தார். அங்கே இருந்த ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமான உணர்வுகளை பூரணமாக அனுபவித்து உள்வாங்கிக் கொண்டார் ராம்சுரத் குன்வர்.

ஆனாலும் இன்னும் ஏதோ தேவையாக இருக்கிறது. எது தேவை. சொல்லத் தெரியவில்லை. ஆனால் தேவை என்பது மட்டுமே தெரிகிறது. விவேகானந்தரின் குரல் காட்டிய வழி போல், அரவிந்தரின் புத்தகம் நற்பாதையைக் காட்டி வழிநடத்தியது. அந்த சாதுவின் சொற்களும், வழிகளாக, பாதைகளாக அமைந்தன.

இங்கே... இப்போது... சுவாமி அரவிந்தர், சொல்லாமல் சில விஷயங்களைச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். வாய் பேசாமால், பேச்சாக இல்லாமல், ஒலியாக சப்தமாக இல்லாமல், எதிரில் நின்ற ஒவ்வொரு தருணத்திலும் ஏதோவொன்றை உணர்த்திக் கொண்டே இருந்தார். அதையெல்லாம் ராம்சுரத் குன்வரால் உணரமுடிந்தது.

தெற்கே போ... என்று சாது சொன்னார். வந்துவிட்டோம். ஆனால் தெற்கில் எங்கே செல்வது. எந்த ஊருக்குச் செல்வது. எதுவும் புரியாமல்தான் இருந்தார் ராம்சுரத் குன்வர். ஆனால் வடக்கே, காசிக்கு அருகில் உள்ள சின்னஞ்சிறிய கிராமத்தில் இருந்து, கிளம்பி, தெற்குப் பக்கம் தென்னிந்தியாவின் பக்கம் வந்தாயிற்று. இங்கே, தமிழகத்தை ஒட்டியுள்ள சிறிய மாநிலமான புதுச்சேரிக்கு வந்தாகி விட்டது. அங்கே... நம் மனதில் பீடமிட்டு அமர வைத்திருந்து நமஸ்கரித்த சுவாமி அரவிந்தரையும் தரிசனம் செய்தாயிற்று.

இனி அடுத்து... எனும் கேள்வி இடைவிடாமல் துரத்திக் கொண்டே இருந்தது, ராம்சுரத் குன்வரை!

ஒருநாள்... வெயிலின் உக்கிரம் தணிந்த அற்புதமான மாலைப் பொழுதில், சில்லிடும் காற்று அந்த ஊரையே தழுவிக் கொண்டிருந்த அருமையான வேளையில்... சுவாமி அரவிந்தர் எனும் மகானுக்கு அருகில் இருந்து கொண்டிருக்கிற இந்த மகத்தான தருணத்தில்... ராம்சுரத் குன்வருக்குள் ஒரு குரல் கேட்டது. அது யாருடைய குரல்... தெரியவில்லை. ஆனால் கேட்டது.

இடைவிடாது, ஏதோ சொல்லிக் கொண்டே இருந்தது. அதைக் கூர்ந்து கேட்டார் ராம்சுரத் குன்வர்.

திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்தது அந்தக் குரல். அதென்ன... இன்னும் கவனமாகக் கேட்டார். இப்போது தெளிவுறப் புரிந்தது. அது ஊரின் பெயர். இடைவிடாமல் ஊரின் பெயர் உள்ளிருந்து உத்தரவு போல் வந்து கொண்டே இருக்கிறது என உணர்ந்தார்.

ஆமாம் என்ன ஊர்.

அந்தக் குரல் சொன்ன ஊர்... திருவண்ணாமலை.

அடுத்த பயணம்... திருவண்ணாமலைக்கு என மனதில் சங்கல்பம் செய்துகொண்டார் ராம்சுரத் குன்வர்.

மீண்டும் உள்ளுக்குள் சொல்லிக்கொண்டார்...

திருவண்ணாமலை, திருவண்ணாமலை, திருவண்ணாமலை!

யோகி ராம்சுரத்குமார் ஜெயகுரு ராயா!

- ராம்ராம் ஜெய்ராம்

தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in

முந்தைய அத்தியாயம் படிப்பதற்கு...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x