Last Updated : 18 Dec, 2017 11:03 AM

 

Published : 18 Dec 2017 11:03 AM
Last Updated : 18 Dec 2017 11:03 AM

குருவே... யோகி ராமா..! 18: விவேகானந்தரின் குரல்..!

 

பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்

துறவிகளின் தொடர்பும், ஞானிகளின் சம்பாஷணையும் மகான்களின் தரிசனமும் ராம்சுரத் குன்வருக்கு புதிதல்ல. சிறுவயதில் இருந்தே, நிறைய துறவிகளைச் சந்தித்திருக்கிறார். பால்யத்தில் இருந்தே, சாதுக்களின் அருகில் நின்றிருக்கிறார். அவர்கள் கூடிப் பேசியதை, அருகில் இருந்தபடி, கைகட்டி, கேட்டு, உள்வாங்கிக் கொண்டிருக்கிறார்.

காசியம்பதியில் இன்னும் ஏராளமான ஞானிகள். அங்கேயும் பலரைச் சந்தித்திருக்கிறார். அவர்களுடன் உரையாடி, தன் தேடலுக்கான திசையை அறியும் ஆவலுடன் யோசித்திருக்கிறார். இந்தத் தேடல் சரியானதுதானா என்று உள்ளே கேட்டுக் கொண்டிருக்கிறார். காசி விஸ்வநாதரின் சந்நிதியில், தன்னையே மறந்து, நின்று உருகியிருக்கிறார்.

சாரநாத்திலும் இதேபோல், நிறைய துறவிகள்; சந்திப்புகள்; சம்பாஷணைகள். ஆத்ம விசாரங்களின் தொடர்பாகவே அனைத்துத் தொடர்புகளும் நிகழ்ந்தன. துறவிகளும் சாதுக்களும் பேசிய சத்சங்க சம்பாஷணைகள், சத்தான விஷயங்களாக, பேச்சுகளாக உள்ளே சேகரித்துக் கொண்டே வந்தார் ராம்சுரத் குன்வர்.

இதுவரை நேரடியாகச் சந்தித்தவர்களின் தாக்கமே ராம்சுரத் குன்வரினுள்ளே ஆக்கிரமித்திருந்தது. அசைப்போட்டுக் கொண்டிருந்தது. அவைகளே அவரை வழிநடத்திக் கொண்டிருந்தன. இன்னும் இன்னுமாய்த் தெளிவு வேண்டி யோசித்துக் கொண்டிருந்த வேளையில்தான்... Lights on yoga எனும் சுவாமி அரவிந்தரின் புத்தகம் கிடைத்தது. படிக்கப் படிக்க ஏற்பட்ட உள்ளொளியே, புதிய பாதையைக் காட்டின. அந்தப் பாதையின்படி பயணிக்கலாமா வேண்டாமா. குழப்பம் லேசாக அவருக்குள் இருந்தது.

'இது உன் வேலை அல்ல. நீ செய்து கொண்டிருக்கும் வேலை உன்னுடையது அல்ல.’ என்று குரல் கேட்டது. அது விவேகானந்தரின் குரலாக உணர்ந்தார் ராம்சுரத்குன்வர். இதேபோல், சுவாமி விவேகானந்தரின் குரல், அடிக்கடி கேட்டது. ‘இது உன் வேலை அல்ல... உன் வேலை அல்ல’ என்று சொல்லிக் கொண்டே இருந்தது. ‘அப்படியென்றால் எது என் வேலை’ என்று கேட்டபடி இருந்தார் ராம்சுரத் குன்வர்.

‘தெற்கே போ’ என்றார் சாது ஒருவர். ‘நம் வேலை இதுவல்ல. நமக்கான வேலை, தெற்குப் பக்கம் போனால்தான் கிடைக்கும்’ என்பதாக உணர்ந்தார். ரயிலேறினார். சுவாமி அரவிந்தரைத் தரிசிக்கும் ஆவலுடன் புறப்பட்டார்.

சுவாமி அரவிந்தருக்கும் ஆரம்ப காலத்தில், இப்படியான ஒற்றுமைகள் நிகழ்ந்திருந்தன. பத்திரிகையாளராக, எழுத்தாளராக, இலக்கியவாதியாக, சுதந்திரப் போராட்டத் தியாகியாக, வீரராக, புரட்சிக்காரராக பல் வேறு தளங்களிலும் பயணப்பட்ட சுவாமி அரவிந்தர், ஒருகட்டத்தில் ஆன்மிகத்தின் பக்கம் மொத்தமாகத் திரும்பினார்.

ஆத்ம விசாரத்தில் ஈடுபட்டார். லயித்தார். கரைந்து காணாது போனார். உள்ளே இருப்பதும் வெளியே இருப்பதும் ஒன்றே என்பதாக உணர்ந்தார். புதுச்சேரியில் தங்கி, ஆன்மிகச் சேவையை விரிவுபடுத்தினார். ஆன்மிகச் சேவையே இறைவனை அடையும் வழி என்பதாக உணர்ந்து செயல்பட்டார்.

அரவிந்தரும் விவேகானந்தரின் சூட்சும உருவம் தன்னை நெருங்கி, அடிக்கடி உத்தரவு பிறப்பிப்பதை உள்ளுணர்வால் உணர்ந்தார். பூரித்தார். சிலிர்த்தார். ஓர் சூட்சுமமான உருவமானது, தன் அறைக்குள் அடிக்கடி வருவதைக் காட்சியாகவே பார்க்கும் திறன் அரவிந்தருக்கு இருந்தது.

‘விவேகானந்தர் என் அறைக்கு வந்து, எனக்குப் போதனைகள் செய்ய விரும்பினார். அதை நான் இன்முகத்துடன் ஏற்றுக் கொண்டதை அவர் உணர்ந்து, போதனைகளை, அறிவுரைகளை, உபதேசங்களை வழங்கி அருளினார். அவை எனக்கு, என் இந்த வாழ்க்கைக்கு திசையாய், திசையைக் காட்டும் கலங்கரை விளக்கமாய் அமைந்தன’ என்கிறார் சுவாமி அரவிந்தர்.

அதேகாலகட்டத்தில், சுதந்திரப் போரட்டத்தை விட்டுவிடவில்லை அவர். கர்மயோகி எனும் ஆங்கிலப் பத்திரிகை, தர்மா எனும் வங்கமொழிப் பத்திரிகை ஆகியவற்றை நடத்தினார். இவற்றிலெல்லாம் அனல் பறக்கும் கட்டுரைகளை எழுதினார். அந்தக் கட்டுரைக்குள்ளே, சுதந்திர தாகமும் இருந்தது. ஆன்மிக உணர்வும் பரவியிருந்தது. இதைப் படித்தவர்கள், சுதந்திரத்தின் பக்கமும் போராட்டத்தின் பக்கமும் நின்றார்கள். அதேசமயம், மெல்ல மெல்ல, ஆன்மிகத்திலும் நாட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்தது அவர்களுக்கு!

ஒருகட்டத்தில், உள்ளிருந்து குரல் கேட்டுக் கொண்டே இருந்தது. குரலானது ஒலித்துக் கொண்டே இருந்தது. பாரீஸிலும் மற்ற நாடுகளிலும் இருந்துகொண்டு, சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்த சுவாமி அரவிந்தரை, ஒரு குரலானது தொடர்ந்தபடியே இருந்தது. அந்தக் குரல் சொன்னபடியே பயணித்தார்.

'இதுவும் சுவாமி விவேகானந்தரின் குரல்தான். என் ஒவ்வொரு செயலையும் கூர்ந்து கவனித்துக் கொண்டே இருந்தார் சுவாமி விவேகானந்தர். ஒவ்வொரு தருணத்திலும் குரல் வழியே குருவாக இருந்து என்னை வழிநடத்திக் கொண்டே இருந்தார். அவரின் குரல், என்னை வெளிநாட்டிலும் தொடர்ந்தது. அங்கிருந்தபடியே என்னை வழிநடத்தியது. ஒருகட்டத்தில்... இந்தியாவுக்கு வரச் சொல்லி, அறிவுறுத்திக் கொண்டே இருந்தது.

அதன்படி இங்கே புதுச்சேரிக்கு வந்தவனை, மக்கள் அரவணைத்துக் கொண்டார்கள். அவர்களின் அன்பால் இந்தப் புதுச்சேரியிலேயே இருப்பது என உறுதி கொண்டேன். இங்கிருந்தே என் பணிகளைத் தொடர்வது என முடிவு செய்தேன். அவரின் உத்தரவு என்ன சொல்கிறதோ... அதன்படியே இயங்கிக் கொண்டிருக்கிறேன்’’ என அருளியிருக்கிறார் அரவிந்தர்.

விவேகானந்தர் குரல் என்ன சொல்கிறதோ அதன்படி ஆன்மிகச் சேவையாற்றிக் கொண்டிருக்கும் மகான் அரவிந்தரை, விவேகானந்தரின் குரல் சொன்னபடி, ‘இது என் வேலை அல்ல’ என பார்த்து வந்த ஹெட்மாஸ்டர் வேலையை உதறிவிட்டு வந்த ராம்சுரத் குன்வர்... என சூட்சுமரூபமாய் கணக்குப் போடுவார்கள் மகான்கள்!

ராம்சுரத் குன்வருக்கு அப்படித்தான் நிகழ்ந்தது சுவாமி அரவிந்தரின் தரிசனம்!

ஓம் நமோ பகவதே ஸ்ரீஅரவிந்தாயா!

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

ஜெயகுரு ராயா.

- ராம்ராம் ஜெய்ராம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x