Last Updated : 13 Dec, 2017 08:08 AM

 

Published : 13 Dec 2017 08:08 AM
Last Updated : 13 Dec 2017 08:08 AM

குருவே... யோகி ராமா.. 14: மனதில் பரவிய ஒளி!

பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்!

‘‘இப்போது செய்துகொண்டிருக்கும் வேலை, உன்னுடையது இல்லை. உன்னுடைய வேலை இது அல்ல. சுவாமி விவேகானந்தர் சொல்வது போல் குரல். இந்தக் குரலும் வார்த்தைகளும் என்னைத் தொடர்ந்து கொண்டே இருந்தது’’ என்று பகவான் யோகி ராம்சுரத்குமார் பின்னாளில், இந்த வாசகங்களைச் சொல்லியிருக்கிறார்.

நம்முடைய இன்றைய வாழ்க்கைக்கும் யார் யாரோ காரணமாக இருப்பார்கள். இருந்திருப்பார்கள். இருந்திருக்கிறார்கள் என்பதே உண்மை. ஆனால் இந்த உண்மையை நாம் உணருவதே இல்லை.

‘இன்னிக்கி நாலு காசு சம்பாதிக்கிறேன்னா... அதுக்கு என்னோட கடுமையான உழைப்பு காரணம்’ என்று சொல்லுவோம். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், அப்படி உழைப்பதற்கான புத்தியை, யாரோ நமக்குள் விதைத்திருக்கிறார்கள் என்பது தெரியவரும்.

கடுமையாக உழைப்பவர்களாகத்தான் இங்கே பலரும் இருக்கிறோம். அப்படி உழைப்பதற்கு ஓரிடம் வேண்டும். அந்த இடத்தை, அதாவது அலுவலகத்தை எவரேனும் நமக்குக் கைகாட்டியிருப்பார்கள். ‘அங்கே ஆள் தேவையாம்...’ என்று சொல்லியிருப்பார்கள். ‘இங்கே தேவை... வர்றீங்களா...’ என்று கேட்டிருப்பார்கள்.

வேலைக்கு என்றில்லை. உழைப்புக்கு மட்டுமே இப்படிச் சொல்பவர்கள் என்றில்லை. மொத்த வாழ்க்கைக்குமே இது பொருந்தும். வாழ்வில், ஏதேனும் ஒரு தருணங்களில், சொல்லப்போனால் ஒவ்வொரு தருணங்களிலும் யாரோ ஒருவர், யார் மூலமாகவோ சின்னதாகவோ பெரிதாகவோ நமக்கு வழி சொல்லியிருப்பார்கள். வழி காட்டியிருப்பார்கள்.

‘நல்ல மனைவி. என்னை அம்மா மாதிரி பாத்துக்கறவ’ என்று மனைவியைக் கொண்டாடுகிறோம். உடனே... கேட்பவர்கள் ‘உங்களுக்குச் சொந்தமா. சொந்தத்துலயே பொண்ணு எடுத்துட்டீங்களா’ என்பார்கள். இங்கு சொந்தத்தில் பெண்ணெடுத்த நிலை, இப்போதெல்லாம் மாறிவிட்டன.

‘அதுவொரு பெரியகதைங்க. ஜாதகத்துல ஒருகுறையும் இல்ல. ஆனாலும் கல்யாணம் தள்ளிப்போயிகிட்டே இருந்துச்சு. என் அம்மாதான் புலம்பிக்கிட்டே இருந்தாங்க. அக்கம்பக்கத்துல பேசும்போதெல்லாம் என்னைப் பத்தி, எனக்குக் கல்யாணமாகாதது பத்தி சொல்லிச் சொல்லி அழுதுக்கிட்டே இருந்தாங்க. அப்ப, பக்கத்துவீட்டுக்காரங்க அவங்க சொந்தக்காரங்க வீட்டுக் கல்யாணத்துக்குப் போனப்ப, அங்கே பேசும்போது, பேச்சுவாக்குல எங்களைப் பத்திச் சொன்னப்ப, ‘இவங்க வீட்ல ஒரு பொண்ணு இருக்குதுங்க. பேசிப்பாப்போமே’னு வந்த சம்பந்தம் இது’ என்று வாழ்க்கைத் துணையானவர், வாழ்க்கையில் தடாலென்று உறவாய் வந்திருக்கும் கதை, சுவாரஸ்யத்துடன் சொல்லப்படும்.

ராம்சுரத் குன்வர் எனும் இளைஞர், தான் யார், தன்னுடைய வேலை எது என்பதையெல்லாம் அறிந்து உணர்ந்து புரிவதற்கு முன்பே, அவரை... அந்த இளைஞரை, அவரின் பிறப்புக்கான காரணத்தை, இந்த பூமியில் ராம்சுரத் குன்வர் என்பவருக்கான வேலையை மகான்கள் உணர்ந்துவிட்டிருந்தார்கள்.

சுவாமி விவேகானந்தரின் குரலாக, அசரீரி போலான அந்த வார்த்தைகள், பள்ளியில் கேட்டன. வீட்டில் கேட்டன. பள்ளியில் இருந்து வீட்டுக்குச் செல்லும் வழியில் கேட்டன. வீட்டில் இருந்து பள்ளிக்கு, வேலைக்குச் செல்லும் போதும்... ‘இது உன் வேலை அல்ல. நீ செய்யும் வேலை உனக்கானது அல்ல...’ என்று கேட்டுக் கொண்டே இருக்க... ராம்சுரத் குன்வர் எனும் அந்த இளைஞர், இன்னும் இன்னுமான யோசனையில் ஆழ்ந்தார்.

அந்த வார்த்தைகளுக்குப் பின்னே என்ன இருக்கிறது.வார்த்தைகளுக்குள் இருக்கிற நமக்கான வாழ்க்கை எது என்பது புரியாமல் தவித்தார். புரிந்து கொள்ளவேண்டுமே என்று தவித்தார்.

கிணற்று மேடையில் இருந்த குருவியும் அதன் மரணமும் ஏதோவொன்றை உணர்த்தியது போல... இதுவும் ஏதோ உணர்த்துகிறது என்பதாக அவரின் யோசனை இருந்தது. அங்கே... அப்போது... அந்தக் குருவியின் மூலம் இறப்பின் ரகசியம் அறியும் எண்ணம் மேலோங்கியது. இங்கே... இப்போது... சுவாமி விவேகானந்தரின் குரல் வழியே வந்த அசரீரி... தன் பிறப்பின் ரகசியம் அறியும் எண்ணத்தைத் தூண்டியது.

அந்தக் குரல் தூண்டிவிட்ட மனதின் ஓட்டம்... புத்தகத்தின் வாயிலாக இன்னும் கிளர்ந்தது. இடைவிடாத யோசனைக்குள்... அல்லது யோசனையே இல்லாத வெளிக்குள்... செல்வதற்கு மனம் தயாரானது. அப்படி ராம்சுரத் குன்வரின் மனதைத் தயார் படுத்திய புத்தகம்... ‘லைட்ஸ் ஆன் யோகா!’

இந்தப் புத்தகம் அவரை என்னவோ செய்தது. ஏதேனும் செய்யத் தூண்டியது. எதுவும் செய்யாமல் இருக்கச் சொல்லிற்று. இது வேண்டும், அது வேண்டாம்... இது விருப்பம்... இதன் மீது ஆசை இல்லை... என்பதே இல்லாமல், அதாவது பாரபட்சமே இல்லாமல், சகலத்தையும் பார்க்கச் சொல்லிற்று, இந்தப் புத்தகம்.

யோகாவின் மீதான வெளிச்சம், இவர் மீது விழுந்தது. ராம்சுரத் குன்வர் என்பவரின் மனதுக்குள் அந்த வெளிச்சம் மெல்ல மெல்லப் பரவியது. உள்ளே ஒளி படர்ந்தது. அந்த இளைஞர், இன்னும் இன்னும் புத்தகத்தை ஆழ்ந்து படித்தார். படித்து, படித்ததை உள்வாங்கிக் கொண்டார். அப்படி உள்வாங்கியதே, இன்னும் ஒளியை உள்ளுக்குள் கூட்டிற்று.

அவருக்கு மிக எளிதாக தியானமும் கைகூடியது. நீண்ட நேரம் தன்னை மறந்து அவரால் உட்கார முடிந்தது. சுவாமி விவேகானந்தரின் குரல், அவரை அடுத்தகட்டத்துக்கு நகர்த்திக் கொண்டே இருந்தது. ‘லைட்ஸ் ஆன் யோகா’ எனும் புத்தகமும் அவரைக் கைபிடித்து, அடுத்த நிலைக்கு இட்டுச் சென்றது.

தியானத்தில் ஈடுபட தன்னை அறியும் நிலையை மெல்ல மெல்ல அடைந்து கொண்டிருந்தார், இளைஞர் ராம்சுரத் குன்வர். அந்தப் புத்தகம், மனதுக்குள் அச்சாகப் பதிந்துவிட்டது. புத்தகத்தை எழுதியவர் அவருக்குள் அடிக்கடி வந்து போனார்.

அந்தத் தருணத்தில்... மீண்டும் சாதுக்களைச் சந்தித்தார் ராம்சுரத் குன்வர். அவர்களின் சத்சங்கப் பேச்சுகளைக் கேட்டார்.

இந்த முறை சாதுக்களில் ஒருவர், ராம்சுரத் குன்வரை அழைத்துப் பேசினார்.

அதுதான்... நமக்கான, தமிழகத்துக்கான, தமிழகத்தின் மூலமாக இந்த உலகுக்கான பேரருளாகவும் பெருங்கருணையாகவும் திகழ்ந்த அற்புதத் தருணம்!

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

ஜெயகுரு ராயா.

- ராம்ராம் ஜெய்ராம்

தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in

முந்தைய அத்தியாயம் படிப்பதற்கு...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x