Last Updated : 12 Dec, 2017 07:59 AM

 

Published : 12 Dec 2017 07:59 AM
Last Updated : 12 Dec 2017 07:59 AM

குருவே... யோகி ராமா.. 13: ‘அந்தக் குரல் தந்த கட்டளை!’

பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்!

உண்மையானவர்கள், எங்கே இருந்தாலும் உண்மையானவர்களாகத்தான் இருப்பார்கள். சத்தியவான்கள் எப்போதும் எந்தச் சூழலில் இருந்தாலும், சத்தியத்தை நிலைநிறுத்திக் கொண்டே இருப்பார்கள். உண்மையின் இயல்பு அப்படித்தான். சத்தியத்தின் மகத்துவம் அவ்விதம்தான்.

மகாத்மா என்று எல்லோராலும் போற்றப்பட்டதால், காந்திஜீ சத்தியவானாக வாழவில்லை. படிக்கும் காலத்திலேயே அப்படித்தான் வாழ்ந்தார். அம்மாவிடம் செய்த சத்தியம் போலவே, மதுவைத் தொடாமலும் மாமிசத்தை உண்ணாமலும் வாழ்ந்தார். ரயில் பயணத்தில் ஏற்பட்ட அவமானத்தால், இனவெறிக்கு எதிராகப் போராடத் தொடங்கினார். அவரின் வாழ்க்கையும் வாழ்க்கைப் பயணமுமே இனத்துக்காக, இந்தியாவுக்காக என்றானது. அதனால்தான் அவரை மகாத்மா என்று கொண்டாடுகிறோம்.

பகவான் என்றும் யோகி என்றும் இன்றைக்குக் கொண்டாடி வணங்கிக் கொண்டிருக்கும் பகவான் யோகி ராம்சுரத்குமார், அங்கே, வடக்கில் படித்துவிட்டு, பல்கலைக்கழகத்தில் பட்டம் வாங்கிவிட்டு, பள்ளியின் தலைமை ஆசிரியராக, ஹெட்மாஸ்டராகப் பணியாற்றினார்.

அப்படிப் பணியாற்றுகிற வேளையில், இரண்டு பொறுப்புகள் அவருக்கு இருந்தன. மாணவர்களை வழிநடத்த வேண்டும். அதுவொரு ஆசிரியரின் கடமை. ஹெட்மாஸ்டராக இருப்பதால், ஆசிரியர்களையும் அரவணைத்துச் செல்லவேண்டும். அதுவே தலைமைப் பண்புக்கு அழகு. தலைமைப் பண்பின் தலையாய குணமும் அதுவே!

பள்ளிக்கூடத்தை அத்தனை கவனமாக நடத்தினார். மாணவர்களின் எதிர்காலத்தை நினைத்து, அவர்களுக்கு சத்விஷயங்களைப் போதித்தார். மாணவர்களே எதிர்காலம் என்பதில் கண்ணும்கருத்துமாக இருந்து செயல்பட்டார். ஆசிரியர்களுக்கு ஆசிரியர்களுக்கான இலக்கணத்தைப் போதித்தார். அதன்படி நடப்பதும் பேசுவதும் மாணவர்களை படிப்பையும் தாண்டி நல்வழிப்படுத்தும் என்பதைப் புரியவைத்தார்.

இப்போது அவரிடம் விளையாட்டுத்தனமெல்லாம் அறவே இல்லை. உள்ளிருக்கும் சிந்தனையே இதற்குக் காரணம். உள்ளே தெளிவு வந்துவிட்டதன் அடையாளம், இந்த நிதானம். இவை அனைத்துக்கும் காசியும் சாரநாத்தும் காரணம். காசிவிஸ்வநாதரும் புத்த பகவானும் அடித்தளம்.

வயது கூடிவிட்டதால் வந்த குணமல்ல அது. இறைத்தேடல் கொடுத்த நிதானம் இது. தன்னை அறியும் நோக்கம் கொடுத்த தெளிவு இது.

இன்றைக்கும் நம்மில் நிறையபேர், வாழ்க்கையையே விளையாட்டாகத்தான் எடுத்துக் கொண்டிருக்கிறோம். அப்படி விளையாட்டாகவே, விளையாட்டு புத்தியுடனே இருப்பதால், நல்லதுகெட்டது தெரியாமலேயே அல்லாடுகிறோம். ஏதேனும் ஒரு நல்லது நடந்துவிட்டாலும் ‘என்னால்தான் நடந்தது... என்னால்தான் நடந்தது..’ என்று எகிறி குதிக்கிறோம். ‘என்னைப் போல் வருமா...’ என்று ஆட்டம் போடுகிறோம். ‘என்னை மிஞ்ச யாருமில்லை’ என்று கர்வத்தோடு திரிகிறோம்.

அதேபோல், துக்கம் வந்தாலோ துவண்டு போகிறோம். சரிந்து உட்கார்ந்துவிடுகிறோம். ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி...’ என்று தலையில் கைவைத்து குமைந்து போகிறோம். ‘என்னை மட்டும் கடவுள் இப்படிச் சோதிக்கிறான்’ என்று ஏதோ கடவுள் சோதனை செய்கிற வேலையைச் செய்பவராகப் புலம்பிக் கதறுகிறோம்.

நிறைகுடம் எப்போதுமே தளும்புவதில்லை. பகவான் யோகி ராம்சுரத்குமார் என நாமெல்லாம் இந்த அற்புத மகானை அறிவதற்கு முன்பிருந்தே, நம்மிடம் கனிவுடன் ஞானத்தகப்பனாய் இருந்து அருளும் அன்பும் வழங்கிக் கொண்டிருக்கிற அந்த கருணைக்கடல், உத்தியோகம் பார்க்கிற போதும் அப்படியே, இதே குணங்களுடன் செயல்பட்டதில் அதிசயம் ஒன்றுமில்லை. ஆச்சரியப்பட ஏதுமில்லை.

பள்ளி நேரம் போக, மீதமுள்ள நேரங்களில் புத்தகங்களில் மூழ்கினார். ஞானநூல்களில் இருந்து தன் தேடுதல் பணியை மீண்டும் தொடங்கினார். படித்தது போக மீண்டும் சாதுக்களின் சத்சங்கம் அவருக்கு பல போதனைகளை வழங்கிக் கொண்டிருந்தது. ஞானநூல்களும் அந்த ஞானநூல்களுக்கு இணையான சாதுக்களின் பேச்சுகளும் அவரை இன்னும் இன்னும் செம்மைப்படுத்திக் கொண்டே இருந்தன.

இவையெல்லாம் கலந்துகட்டி உள்ளுக்குள் இறங்கி சிம்மாசனமிட்டு உட்கார்ந்து கொண்டன. அடிக்கடி ராம்சுரத் குன்வரை கேள்விகள் கேட்டு துளைத்தெடுத்தன. ராம்சுரத் குன்வரை, உள்ளே இருக்கிற ராம்சுரத் குன்வர் கேள்விகள் கேட்டார். வெளியே இருக்கிற ராம்சுரத் குன்வர் பதிலளித்தார். சிலசமயம் இது அப்படியே மாறியும் நிகழ்ந்தது. அதாவது, வெளியே இருக்கும் ராம்சுரத் குன்வர், உள்ளிருப்பவரிடம் கேள்விகள் கேட்க... அதற்கும் பதில்கள் வந்துகொண்டே இருந்தன. சகலத்தையும் உள்வாங்கியபடி இருந்தார் ராம்சுரத் குன்வர்.

ஒருமுறை... பள்ளி முடிந்து, வீட்டுக்குச் சென்று கொண்டிருக்கும் போது ஒரு குரல் அவருக்குக் கேட்டது. அது குரல் மட்டுமே! உருவமோ உடலோ காட்சியோ அல்ல. எவரும் உடலாக அங்கே நிற்கவில்லை. உருவமே இல்லை. அங்கே காட்சிகள் ஏதும் நிகழவில்லை. கண்ணுக்குத் தென்படவில்லை. செவி வழியே வந்து உயிர் தொட்டு அசைத்தது அந்தக் குரல்.

குரலும் குரலில் இருந்து வந்த சொற்களும் ராம்சுரத் குன்வரை என்னவோ செய்தது. அவரை தூங்கவிடவில்லை. தூக்கம் வரவில்லை. தூங்காததால் மறுநாள் ஓர் அயர்ச்சி வருமே. அப்படி எதுவும் அவருக்கு அது அயர்ச்சியைக் கொடுத்துவிடவில்லை. ஆனாலும் உள்ளே ஓர் மலர்ச்சியும் அயர்ச்சியுமாக இரண்டும் கலந்த நிலையில் திளைத்தார். அந்தக் குரல் சொன்னதிலேயே இரண்டறக் கலந்திருந்தார்.

சிலநாட்கள் ஆகியிருக்கும். இப்போது, பள்ளியில் வேலையில் ஈடுபட்டிருக்கும் போது மீண்டும் குரல் கேட்டது. அதே குரல்... அதே சொற்கள். அதே கனிவு... அதே உத்தரவு.

அவரால் வேலை செய்யமுடியவில்லை. வேலையில் மனம் ஒன்றவில்லை. கால்கள் எங்கோ எந்தத் திசை நோக்கியோ பயணிக்கத் துடித்தன. அப்படிப் பயணிக்கும்படி, மனம் ஆசைப்பட்டது. இந்தப் பயணமே சிறந்தது என்று புத்தி உத்தரவிட்டுக் கொண்டிருந்தது. இந்த மனத்தின் விருப்பத்துக்கும் புத்தியின் உத்தரவுக்கும் அந்தக் குரல் காரணம். குரலின் வழி வந்த கட்டளை காரணம்.

‘இப்போது நீ செய்து கொண்டிருக்கும் வேலை உன்னுடை யதில்லை. உன் வேலை எதுவோ அதைச் செய்யவில்லை. இது நீ செய்யும் வேலை இல்லை’ என்று அடிக்கடி அந்தக் குரல் சொல்லிக் கொண்டே இருந்தது.

பின்னாளில்... இதுகுறித்து பகவான் யோகி ராம்சுரத்குமார் சொல்லும் போது... ‘அந்தக் குரல்தான் என்னை தெற்குப் பக்கம் கொண்டுவந்து சேர்த்தது. அந்தக் குரல்தான் என்னை இங்கே வரவைத்தது. அந்தக் குரல்... குரலில் இருந்து வந்த கட்டளை... சுவாமி விவேகானந்தருடையது என உணர்ந்தேன்’’ என்கிறார் பகவான்.

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

ஜெயகுரு ராயா.

- ராம்ராம் ஜெய்ராம்

தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in

முந்தைய அத்தியாயம் படிப்பதற்கு...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x