Published : 19 May 2018 02:56 PM
Last Updated : 19 May 2018 02:56 PM

‘‘எங்களுடன் வாருங்கள்... அமைச்சராக்குகிறோம்’’ - காங்கிரஸ் எம்எல்ஏவிடம் எடியூரப்பா பேரம் பேசிய பரபரப்பு ஆடியோ

கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏவிடம், முதல்வர் எடியூரப்பா பேரம் பேசிய ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 104 எம்எல்ஏக்கள் பெற்று தனிப்பெரும் கட்சியான பாஜக ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியது.

அதேசமயம், காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை இணைந்து பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரின. ஆனால் அந்த கோரிக்கையை நிராகரித்த ஆளுநர் வாஜூபாய் வாலா, கர்நாடக முதல்வராக எடியூரப்பாவிற்கு, பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதை எதிர்த்து காங்கிரஸ் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கர்நாடக முதல்வராக எடியூரப்பா சட்டப்பேரவையில் இன்று மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி, தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி வாக்கெடுப்புக்கான பணிகள் நடந்து வருகின்றன. காலை முதல் எம்எல்ஏக்கள் பதவியேற்று வருகின்றனர். வாக்ககெடுப்புக்கு சிறிது நேரமே உள்ள நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏ பசன்கவுடா பாட்டீலுடன், முதல்வர் எடியூரப்பா பேரம் பேசும் ஆடியோ டேப் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எடியூரப்பா முதல்வராக பதவியேற்ற பின், பெங்களூரு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஹைதராபாத் மற்றும் கொச்சிக்கு பேருந்தில் அழைத்து செல்லப்பட்டனர்.

அந்த சமயத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ பசன்கவுடா பாட்டீலை, முதல்வர் எடியூரப்பா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவது போல ஆடியோ டேப் வெளியாகியுள்ளது. இந்த ஆடியோ பதிவை தற்போது கர்நாடகாவில் ‘டிவி’ சேனல்கள் ஒலிபரப்பி வருகின்றன.

அதில் இடம் பெற்றுள்ள விவரம் வருமாறு:

எடியூரப்பா: எங்கே செல்கிறீர்கள்?

பசன்கவுடா பாட்டீல்: கொச்சிக்கு சென்று கொண்டு இருக்கிறோம்?

எடியூரப்பா: ஏன் கொச்சிக்கு செல்கிறீர்கள்? நீங்கள் எங்களுடன் வாருங்கள். உங்களுக்கு தேவையானவற்றை செய்கிறோம்.

பசன்கவுடா பாட்டீல்: நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

எடியூரப்பா: உங்களை அமைச்சராக்குகிறோம். உங்களுக்கு தேவையானவற்றை செய்கிறோம். எது வேண்டுமோ? கேளுங்கள்

இவ்வாறு அந்த ஆடியே பதிவில் விவாதம் இடம் பெற்றுள்ளது. இந்த பேச்சுக்கு இடையே பாஜக மூத்த தலைவர் ஜனார்த்தன் ரெட்டியின் பேசுவதும் கேட்கிறது.

 

இதை மிஸ் பண்ணாதீங்க:

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x