Published : 19 May 2018 07:58 AM
Last Updated : 19 May 2018 07:58 AM

இந்தியாவில் நன்னீர் குறைந்து வருகிறது: நாசா செயற்கைக்கோள் ஆராய்ச்சியில் தகவல்

இந்தியாவில் நன்னீர் கிடைப்பது குறைந்து வருவதாக நாசா செயற்கைக்கோள் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் (நாசா) கீழ் செயல்பட்டு வரும் கோட்டார்ட் விண்வெளி மையத்தில் விஞ்ஞானிகள் பல்வேறு விதமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நாசா அனுப்பிய செயற்கைக்கோள்கள் மூலம் பூமியில் ஏற்படும் பல்வேறு மாற்றங்கள், சீதோஷ்ண நிலை, நீர் இருப்பு, நன்னீர் அளவு உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் பூமியில் நல்ல நீர் எங்கு உள்ளது? எந்த இடத்தில் அதிகம் உள்ளது? எந்த இடத்தில் குறைவாக உள்ளது? போன்ற ஆராய்ச்சிகளை நாசா விஞ்ஞானிகள் மேற்கொண்டு வந்தனர். அவர்களது ஆய்வு முடிவுகள் பல்வேறு இதழ்களில் வெளியாகியுள்ளன. பூமியில் ஈர நிலப்பகுதிகள் மேலும் ஈரமாகவும், வறண்ட நிலங்கள் மேலும் வறண்டும் காணப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது. மனிதர்களின் நீர் நிர்வாகம், மாறி வரும் சீதோஷ்ண நிலை, இயற்கை சுழற்சியின் காரணமாக இவ்வாறு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு மற்றும் கிழக்கு இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள், கலிபோர்னியா, ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் நன்னீரானது குறைந்து காணப்படுகிறது.

வட இந்தியப் பகுதிகளில் நிலத்தடி நீரானது மிகவும் குறைந்து காணப்படுகிறது. கோதுமை, அரிசி உற்பத்திக்காக அதிக அளவில் நிலத்தடி நீர் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. இதனால் இங்கு நிலத்தடி நீர் மட்டம் அபாய நிலைக்கும் கீழே சென்றுவிட்டது. மேலும் இப்பகுதிகளில் தொடர்ந்து குறைவான அளவு மழை பெய்து வருவதும் நிலத்தடி நீர் குறையக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

14 ஆண்டுகளாக நிலத்தடி நீரின் அளவைக் கணக்கில் கொண்டு இந்த முடிவுகளை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். உலகின் சுமார் 34 மண்டலங்களில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுகுறித்து நாசாவுக்குச் சொந்தமான கோட்டார்ட் விண்வெளி மையத்தின் விஞ்ஞானி மாட் ரோடெல் கூறும்போது, “பல்வேறு விதமான செயற்கைக்கோள்களை கொண்டு முதன்முறையாக இதுபோன்ற நன்னீர் ஆராய்ச்சியை மேற்கொண்டோம். பூமியிலுள்ள இயற்கை வளங்களில் ஒன்றாக விளங்குவது இந்த நன்னீர். இதைத்தான் நாம் குடிநீருக்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்தி வருகிறோம். இதைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை” என்றார்.

விஞ்ஞானி ஜே பேமிகிளியெட்டி கூறும்போது, “இந்த ஆய்வின்போது பல்வேறு நீரியல் மாற்றங்களை நாங்கள் கண்டறிந்தோம். வறண்ட பகுதிகள் மேலும் வறண்ட பகுதிகளாக மாறி வருகின்றன. நிலத்தடி நீர் அதிகமாக உறிஞ்சப்படுவதால் இந்த வறண்ட நிலை ஏற்படுகிறது” என்றார். -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x