Published : 19 May 2018 12:32 PM
Last Updated : 19 May 2018 12:32 PM

கர்நாடகாவில் இறுதிகட்ட மோதல்: ஆபரேஷன் தாமரையா? கையா? - காணாமல் போன காங்கிரஸ் எம்எல்ஏவால் பரபரப்பு

கர்நாடகாவில் வாக்கெடுப்பு நடைபெற இன்னமும் சில மணிநேரங்கள் மட்டுமே உள்ள நிலையில் எதிரணி எம்எல்ஏக்களை இழுக்க இரு தரப்பிலும் இறுதிகட்ட முயற்சிகள் நடந்து வருகின்றன. பதவியேற்க காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் உரிய நேரத்தில் வராததால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 104 எம்எல்ஏக்கள் பெற்று தனிப்பெரும் கட்சியான பாஜக ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியது.

அதேசமயம், காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை இணைந்து பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரின. ஆனால் அந்த கோரிக்கையை நிராகரித்த ஆளுநர் வாஜூபாய் வாலா, கர்நாடக முதல்வராக எடியூரப்பாவிற்கு, பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதை எதிர்த்து காங்கிரஸ் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கர்நாடக முதல்வராக எடியூரப்பா சட்டப்பேரவையில் இன்று மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி, தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதைத்தொடர்ந்து பாஜகவைச் சேர்ந்த போபையாவை சபாநாயகராக, ஆளுநர் வாஜூபாய் வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது.

இதையடுத்து கர்நாடக சட்டப்பேரவையில் வாக்கெடுப்புக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இன்று காலை 11 மணி முதல் எம்எல்ஏக்கள் பதவியேற்று வருகின்றனர்.

வாக்கெடுப்புக்கான ஏற்பாடுகள் ஒருபுறம் நடந்து வந்தாலும், மறுபுறம் எதிரணி எம்எல்ஏக்களை இழுக்க இருதரப்பும் தீவிரம் காட்டி வருகின்றன.

‘ஆபரேஷன் தாமரை’

கர்நாடக முதல்வராக எடியூரப்பா பொறுப்பேற்ற பிறகு எதிரணி எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் அணி மாறச் செய்ய ‘ஆபரேஷன் தாமரை’ என்ற பெயரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சர்ச்சைக்குரிய பாஜக மூத்த தலைவர் ஜனார்த்தன் ரெட்டி இதற்கான பணியில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக எதிர் முகாமில் உள்ள அதிருப்தி எம்எல்ஏக்களுடன் பேரம் பேசப்பட்டு வருகிறது. குமாரசாமி முதல்வராக எதிர்ப்பு தெரிவித்து வரும் லிங்காயத்து எம்எல்ஏக்கள் 20 பேரை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருக்க பேரம் பேசி வருகின்றனர்.

வடக்கு கர்நாடகவை சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த் சிங், ஜனதார்த்தன் ரெட்டிக்கு நெருக்கமானவர் என கூறப்படுகிறது. அவர் காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் சேர்ந்து ஹைதரபாத்திற்கு செல்ல வில்லை என முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால் அவர் ஹைதராபாத் சென்று, மற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்களை சந்தித்தாக தெரிகிறது.

அவர் மூலம் மற்ற எம்எல்ஏக்களுக்கு பாஜக வலை விரித்ததா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் தான் காங்கிரஸூக்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதாக அவர் காங்கிரஸ் தலைமையிடம் வாக்குறுதி அளித்துள்ளதாக கூறபப்டுகிறது. எனினும் அவர் சட்டப்பேரவைக்கு வந்து இன்னமும் பதவியேற்கவில்லை. இதனால் ஆனந்த் சிங் பற்றிய சர்ச்சை இன்னமும் தொடர்கிறது.

‘ஆபரேஷன் கை’

பாஜகவிற்கு போட்டியாக காங்கிரஸூம் ஆளும் கட்சி எம்எல்ஏக்களை இழுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. முன்னாள் அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான சிவக்குமாரிடம் இதற்கான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பாஜக பக்கம் சாயக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட சுயேச்சை எம்எல்ஏக்கள் இருவரை காங்கிரஸூக்கு ஆதரவாக மாற்றியது சிவக்குமார்தான். அவர் தற்போது பாஜக எம்எல்ஏக்கள் சிலரை தங்கள் அணிக்கு ஆதரவாக செயல்பட வைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

இதனால்தான், பாஜக எம்எல்ஏக்களும் நேற்று முழுவதும் ஓட்டல் அறையில் தங்க வைக்கப்ப்டடு பாதுகாப்பாக சொகுசு பேருந்தில் சட்டப்பேரவைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களை கண்காணிக்க பாஜக மூத்த தலைவர்கள் சிலரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மொபைல் போன்கள் கண்காணிக்கப்பட்டு வருவதுடன், அவர்கள் சரியான முறையில் வாக்களிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

முன்னாள் அமைச்சர் சிவக்குமாருடன் தொடர்பில் உள்ள பாஜக எம்எல்ஏக்கள் சிலர் வாககெடுப்பின்போது, நடுநிலை வகிக்க கூடிய ஆபத்து இருப்பதால் அவர்களை கண்டறிந்து பாஜக தலைமை எச்சரித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

காணாமல்போன காங்கிரஸ் எம்எல்ஏ

கர்நாடக சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் பதவியேற்று வரும் நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த் சிங் பதவியேற்கவில்லை. மற்றொரு எம்எல்ஏவான பிரதாப் கவுடா பாட்டீலை பதவியேற்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை. இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் சற்று தாமதமாக அவர் அவைக்கு வந்தார். பின்னர் அவர் பதவியேற்றுக் கொண்டார்.

இதை மிஸ் பண்ணாதீங்க:

கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு: எடியூரப்பா வெற்றி பெறுவாரா?; பாஜக மீது எதிர்க்கட்சிகள் புகார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x