Published : 19 May 2018 11:40 AM
Last Updated : 19 May 2018 11:40 AM

கர்நாடக சபாநாயகராக போபையாவே செயல்படுவார்; உச்ச நீதிமன்றம் உத்தரவு: வாக்கெடுப்பை நிறுத்தி வைக்க சம்மதமா? என காங்கிரஸூக்கு நீதிபதிகள் அதிரடி கேள்வி

கர்நாடகாவில் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்ட போபையாவை நீக்க வேண்டும் உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. இந்த மனுவை விசாரிக்க வேண்டும் என்றால் வாக்கெடுப்பை ஒத்தி வைக்க காங்கிரஸூக்கு சம்மதமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். வாக்கெடுப்பை போபையாவே நடத்தி முடிப்பார் எனவும் நீதிபதிகள் கூறினர்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 104 எம்எல்ஏக்கள் பெற்று தனிப்பெரும் கட்சியான பாஜக ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியது.

அதேசமயம், காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை இணைந்து பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரின. ஆனால் அந்த கோரிக்கையை நிராகரித்த ஆளுநர் வாஜ்பாய் வாலா, கர்நாடக முதல்வராக எடியூரப்பாவிற்கு, பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதை எதிர்த்து காங்கிரஸ் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கர்நாடக முதல்வராக எடியூரப்பா சட்டப்பேரவையில் இன்று  மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி, தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

போபையா நியமனம்

உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, பாஜக எம்எல்ஏ போபையாவை தற்காலிக எம்எல்ஏவாக நியமித்து ஆளுநர் வாஜ்பாய் வாலா, பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் போபையா நியமனத்தை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது காங்கிரஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் ‘‘தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள போபையாவை விட பலமுறை எம்எல்ஏவாக இருந்த அனுபவம் உள்ள பலர் உள்ளனர். காங்கிரஸ் எம்எல்ஏ தேஷ் பாண்டே 8 முறை எம்எல்ஏவாக உள்ளார்.

ஆனால் போபையா, முதல்வர் எடியூரப்பாவிற்கு மிகவும் நெருக்கமானவர். 2010-ம் ஆண்டு ஊழல் புகார் தொடர்பாக வழக்கு பதிவான நிலையில், எடியூரப்பாவிற்கு எதிராக 11 பாஜக எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தினர். அவர்களை தகுதி நீக்கம் செய்து எடியூரப்பாவை அப்போது காப்பாற்றியது போபையா. எனினும் போபையாவின் உத்தரவை பின்னர் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. எனவே அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்’’ என வலியுறுத்தினார்.

உச்ச நீதிமன்றம் மறுப்பு

எனினும் அவரது கோரிக்கையை ஏற்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். சபாநாயகர் நியமன விவகாரம் தொடர்பான மனுவை விசாரிக்க போதிய கால அவகாசம் இல்லை என்பதை சுட்டிக்காட்டி நீதிபதிகள் இதுதொடர்பாக உத்தரவு பிறப்பிக்க மறுத்து விட்டனர்.

அவர்கள் தங்கள் உத்தரவில் ‘‘சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்பி பதிலை பெற வேண்டும். அதன் பிறகு மட்டுமே உத்தரவு பிறப்பிக்க முடியும். அதுவரை கர்நாடக சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடத்த முடியாது. வாக்கெடுப்பை ஒத்தி வைக்க காங்கிரஸூக்கு சம்மதமா? எனவே போபையா நியமனத்திற்கு எதிரான மனுவை விசாரிக்க முடியாது. அவரது நியமனத்தை ரத்து செய்ய முடியாது. அவரே தற்காலிக சபாநாயகராக தொடருவார். அவரே வாக்கெடுப்பையும் நடத்தி முடிப்பார்’’ எனக் கூறினர்.

மேலும் வாக்கெடுப்பு முழுவதையும் நேரலையாக ஒலிபரப்ப வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x