Published : 11 May 2018 04:30 PM
Last Updated : 11 May 2018 04:30 PM

ஐபிஎல் சூதாட்டத்தை அம்பலப்படுத்திய மும்பை போலீஸ் உயர் அதிகாரி திடீர் தற்கொலை

 

நிழல் உலக தாதாக்களை அதிர வைத்து, மும்பையை 20 ஆண்டுகளுக்கும் மேலாக கலக்கி வந்த மூத்த போலீஸ் அதிகாரி ஹிமன்ஷூ ராய் இன்று திடீரென தற்கொலை செய்துள்ளார்.

மும்பையைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி ஹிமன்ஷூ ராய் (வயது 54). மிகவும் நேர்மையான அதிகாரியாக செயல்பட்ட அவர் பல்வேறு சவாலான வழக்குகளை விசாரித்து திறன்பட செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்தவர்.

கடந்த 2013-ம் ஆண்டு மும்பையை கலக்கிய ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங், சூதாட்ட மோசடியை அம்பலப்படுத்தினார். இந்த வழக்கின் பின்னணியில் இருந்து செயல்பட்ட பல பிரபலங்கள் குறித்து விசாரித்து பெரிய அளவில் பிரபலமடைந்தார். ஐபிஎல் சூதாட்டப் புகாரில் இந்திய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஸ்ரீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பனை கைது செய்ததும் இவரே.

அதுபோலவே மும்பையைச் சேரந்த பிரபல பத்திரிக்கையாளர் ஜே டே, நிழலுக தாதாக்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கையும் இவரே விசாரித்தார்.

சோட்டா ராஜான் கும்பலால் ஜே டே கொல்லப்பட்டதை கண்டுபிடித்தார். இதுமட்டுமின்றி மும்பையை உலுக்கிய பல்லவி புருக்கயஸ்தா கொலை வழக்கு உள்ளிட்டவற்றையும், தடயவியல் ஆவணங்களை கொண்டு சாதூர்யமாக விசாரித்து, குற்றவாளிகை கையும் களவமாக கைது செய்தார்.

இதன் மகாராஷ்டிர மாநில தீவிரவாத தடுப்பு படை தலைவராக இவர் பொறுப்பு வகித்தபோது மும்பையை ஆட்டிப்படைத்த நிழல் உலக தாதாக்களை அடுத்தடுத்து கைது செய்தார். மும்பை அமெரிக்கன் பள்ளியை வெடி குண்டு வைத்து தகர்க்க நடந்த சதியை கண்டுபிடித்து, இந்த வழக்கில் மூளையாக இருந்து செயல்பட்ட மென்பொருள் துறை பொறியாளர் அனீஸ் அன்சாரியையும் கைது செய்தார்.

ஏறக்குறைய 20 ஆண்டுளுக்கும் மேலாக மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய போலீஸ் அதிகாரியாக வலம் வந்தார்.

இந்தநிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறையில் இவர் ஒதுக்கி வைக்கப்பட்டு இருந்தார். மகாராஷ்டிர அரசின் தலையீட்டால், முக்கியத்துவம் இல்லாத பதவிக்கு மாற்றப்பட்டார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவர் அடிக்கடி விடுப்பில் சென்றார்.

இவர் மட்டுமி்ன்றி, வேறு சில முக்கிய காவல்துறை அதிகாரிகளும், மகாராஷ்டிர அரசால் திட்டமிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுமட்டுமின்றி சில ஆண்டுக்கு முன்பு புற்றுநோய் பாதிப்புக்கும் ஆளாகி இருந்தார். இதையடுத்து நீண்ட விடுப்பு எடுத்து சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த சூழலில் அவர் இன்று பிற்பகல் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். உடனடியாக மருத்துவமனைக்கு அவர் எடுத்துச் செல்லப்பட்டார். ஆனால் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஹிமனுஷூ ராய் மறைவுக்கு காவல்துறை அதிகாரிகள், அரசியல் பிரபலங்கள் என பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதை மிஸ் பண்ணிடாதீங்க...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x