Last Updated : 30 Jun, 2019 12:00 AM

 

Published : 30 Jun 2019 12:00 AM
Last Updated : 30 Jun 2019 12:00 AM

இலங்கையில் மீண்டும் மரண தண்டனை நிறைவேற்றும் அதிபர் சிறிசேனாவின் முடிவுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு

இலங்கையில் 43 வருடங்கள் கழித்து மரண தண்டனையை அமல்படுத்துவதற்கு அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா அனுமதி வழங்கி உள்ளதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இலங்கை ஆங்கிலேயர்களின் காலனி நாடாக இருந்தபோது இலங்கை குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 285-வது பிரிவின்படி மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன. இலங்கை சுதந்திரம் அடைந்த பிறகும் மரண தண்டனை இலங்கை சட்டப் புத்தகத்தில் அப்படியே தொடர்ந்து வந்தாலும் 1978-ம் ஆண்டுக்கு பின்னர் ஆட்சிக்குப் வந்த இலங்கை அதிபர்கள் மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பான உத்தரவுகளை பிறப்பிக்க மறுத்து வந்தனர்.

சிறுவர் பாலியல் வன்கொடுமை, கொலைகள், போதைப் பொருள் விற்பனை போன்றவை இலங்கையில் அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் மரண தண்டனையை அமல்படுத்த வேண்டும் என பொது மக்கள் தரப்பில் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டதால் 2018-ல் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் போதைப் பொருள் தொடர்பான குற்றச் செயல்களுக்காக மரண தண்டனையை நிறைவேற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இலங்கையில் கொழும்பு வெலிகடை, மஹர, பல்லேகலை, அனுராதபுரம், பதுளை ஆகிய சிறைச்சாலைகளில் தற்போது பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு மரண தண்டனை பெற்ற 500-க்கும் மேற்பட்டோரில் 247 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கி ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. இதில் போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 4 பேரை தூக்கிலிட இலங்கை சிறைத்துறை சார்பில்பரிந்துரைக்கப்பட்டது.

இதைதொடர்ந்து, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, அவர்கள் 4 பேருக்கும் மரண தண்டனையை நிறைவேற்றும் ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளதாக புதன்கிழமை அறிவித்தார்.

43 ஆண்டுகளுக்கு பின்னர் அதிபர் மைத்ரிபால சிறிசேனா மரண தண்டனைக்கு அனுமதி அளித்திருப்பதால் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான சட்டரீதியான பணிகளை இலங்கை அரசு தொடங்கியது.

இந்நிலையில் மீண்டும் மரண தண்டனையை நிறைவேற்றும் அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் தீர்மானத்துக்கு எதிராக பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்தன. மேலும் போராட்டங்கள் நடைபெறுகின்றன.

கொழும்புவில் உள்ள வெலிகடை சிறைச்சாலைக்கு எதிராக முதலாவது போராட்டம் நேற்று நடைபெற்றது. இதில், திரண்ட சமூக செயற்பாட்டாளர்கள், மரண தண்டனை நிறைவேற்றுகின்ற தீர்மானத்தை கைவிடுமாறு வலியுறுத்தியதுடன் மரண தண்டனை வேண்டாம் என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி முழக்கங்களை எழுப்பினர்.

தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு

இதற்கிடையே, தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அதற்காக மீண்டும் மரணதண்டனையை நடைமுறைப்படுத்துவது ஏற்புடையதல்ல. எனவே முற்றாக மரணதண்டனையை இல்லாதொழிக்கும் வகையில் சட்டங்களில் மறுசீரமைப்புகளை ஏற்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் நாடாளுமன்றத்தில் மேற்கொள்வோம்" என தெரிவித்துள்ளது.

இதனிடையே, மரண தண்டனையை நிறைவேற்றும் இலங்கை அதிபரின் தீர்மானத்துக்கு இடைக்கால தடை விதிக்குமாறு அந்நாட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் அடுத்த 7 நாட்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படாது என இலங்கை சிறைச் சாலைகளின் ஆணையாளர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x