Last Updated : 28 Jun, 2019 10:36 AM

 

Published : 28 Jun 2019 10:36 AM
Last Updated : 28 Jun 2019 10:36 AM

ஜி 20 மாநாடு தொடங்கியது: ட்ரம்ப்புடன் மோடி சந்திப்பு; ஈரான் வர்த்தகம், பாதுகாப்பு, 5ஜி குறித்து ஆலோசனை

ஜப்பானில் இன்று தொடங்கிய ஜி 20 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பைச் சந்தித்து பிரதமர் மோடி பேசினார். இரு தலைவர்களும் ஈரான் வர்த்தகம், பாதுகாப்பு, 5ஜி நெட்வொர்க் சேவை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

ஜப்பானின் ஒசாகா நகரில் ஜி 20 உச்சி மாநாடு இன்று தொடங்கியது. இரு நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா, உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கின்றன. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று ஜப்பான் சென்றடைந்தார்.

அங்கு பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயை நேற்று சந்தித்த  பிரதமர் மோடி அவருடன்  பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் இன்று தொடங்கிய ஜி 20 மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பைச் சந்தித்து பிரதமர் மோடி பேசினார்.

இந்தியா மீது மிகுந்த அன்பு வைத்திருப்பதாக, அதிபர் ட்ரம்ப் எழுதிய கடிதத்தை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ அளித்ததைக் குறிப்பிட்டு பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்தார்.

ஈரான் வர்த்தகம், 5ஜி நெட்வொர்க், இரு நாடுகளின் உறவுகள், பாதுகாப்பு உறவுகள் ஆகியவை குறித்து அதிபர் ட்ரம்ப்பிடம் பேச ஆர்வமாக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

ஈரான் நாடு அணு ஆயுத ஒப்பந்தத்தை மீறியதாக குற்றம் சாட்டி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொருளாதாரத் தடையை அமெரிக்கா விதித்தது. ஈரான் கச்சா எண்ணெய் ஏற்றுமதி வர்த்தகத்துக்கும் சிக்கலை ஏற்படுத்தியது. ஆனால், ஈரானில் மற்ற நாடுகள் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைத்துள்ளன. ஆனால்,  இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகின்றன. இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுகுறித்து பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் ஆலோசனை நடத்தினார்.

மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று, தொடர்ந்து 2-வது முறையாக பிரதமர் மோடி பதவி ஏற்றதற்கு அதிபர் ட்ரம்ப் வாழ்த்துகளைத் தெரிவித்தார். இரு நாடுகளும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒருங்கிணைந்து பணியாற்ற விருப்பமாக இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.

இது தொடர்பாக ட்ரம்ப் கூறுகையில், "பிரதமர் மோடிக்குக் கிடைத்தது மிகப்பெரிய வெற்றி. அதை அடைந்துவிட்டீர்கள். மிகச்சிறப்பான பணிகளை நாட்டுக்காகச் செய்துள்ளீர்கள். நாம் இருவரும் சேர்ந்து மிகப்பெரிய அறிவிப்புகளை வெளியிடுவோம். வர்த்தகம், உற்பத்தி, 5ஜி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசுவோம். பேச்சுவார்த்தையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

நாம் இருவரும் சிறந்த நண்பர்களாக இருக்கிறோம். ஆனால், நம்முடைய நாடுகள் நெருக்கமாக வந்ததில்லை. ஆனால், நெருக்கமாக மாறும் என உறுதியளிக்கறேன்.ராணுவம், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நாம் இணைந்து செயலாற்றுவோம். அது குறித்து இன்று பேசுவோம்.

ஈரான் வர்த்தகம் குறித்து பேசுவதற்கு அதிகமான நேரம் இருக்கிறது, அவசரம் வேண்டாம். காலம் அந்த அழுத்தத்தைக் கொடுக்கவில்லை" எனத் தெரிவித்தார்.

அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடி சந்திப்பில் முக்கிய விஷயம் ஒன்றும் விவாதக்கப்பட உள்ளது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் 28 பொருட்களுக்கு இந்தியா வரிவிதித்தது. அதுகுறித்து பிரதமர் மோடியிடம், அதிபர் ட்ரம்ப் ஆலோசனை நடத்த உள்ளார்.

இதுகுறித்து ஜப்பான் வந்து சேர்ந்ததும் அதிபர் ட்ரம்ப் ட்விட்டரில் கூறுகையில், "அமெரிக்காவுக்குத்தான் முன்னுரிமை. முதலில் அமெரிக்காதான். அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் 28 பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதித்துள்ளது. இது குறித்து பிரதமர் மோடியுடன் நான் ஆலோசனை நடத்த இருக்கிறேன். இது ஏற்றுக்கொள்ள முடியாதது. இதை திரும்பப் பெற வலியுறுத்துவேன்" எனத் தெரிவித்திருந்தார்.

மேலும் ஹார்லே டேவிட்ஸன் மோட்டார் பைக்குகளுக்கும் இந்தியா அதிக வரி விதித்த நிலையில், அதிபர் ட்ரம்ப் அதுகுறித்து விமர்சித்ததும், வரியை 100 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாகக் குறைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x