Published : 21 Jun 2019 02:55 PM
Last Updated : 21 Jun 2019 02:55 PM

ஈரான் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டு வாபஸ் பெற்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

அமெரிக்க ஆளில்லா விமானத்தை இரான் சுட்டு வீழ்த்தியாக குற்றச்சாட்டும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இரான் மீது ராணுவ தாக்குதல் மேற்கொள்வதற்கு உத்தரவிட்டதாகவும், பின்பு உடனடியாக தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாகவும் அமெரிக்க ஊடகமான நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

 

இதுகுறித்த தகவலை வெள்ளை மாளிகையை சேர்ந்த உயரதிகாரிகள் தெரிவித்ததாக கூறி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானின் குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டுமே தாக்குவதற்கு திட்டமிடப்பட்டதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வெள்ளிக்கிழமை விடியும் முன்பாக இந்தத் தாக்குதலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, அதாவது ஈரானின் ராணுவத்திற்கோ, அல்லது குடிமக்களுக்கோ இதனால் சேதம் ஏற்பட்டு விடக்கூடாது என்ற விதத்தில் விடிவதற்கு முன்பாக தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

 

விமானங்கள் பறந்தன, கப்பல்கள் நிலைகொண்டிருந்தன, ஆனால் எந்த ஒரு ஏவுகணைகளும் ஈரான் ராணுவ நிலைகளை நோக்கிப் பாயவில்லை.

 

மத்திய கிழக்கில் ட்ரம்ப் நிர்வாக உத்தரவுகளின் படி நடந்திருந்தால் இது 3வது தாக்குதலாக இருந்திருக்கும். சிரியாவில் 2017 மற்றும் 2018-ல் இருமுறை தாக்குதல் நடத்தப்பட்டதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி தெரிவிக்கிறது.

 

ஆனால் ஈரான் மீதான தாக்குதல் இன்னும் உயிருடன் இருக்கிறதா அல்லது முற்றிலும் வாபஸ் பெறப்பட்டதா போன்ற விவரங்கள் தெரியவில்லை என்று கூறும் அமெரிக்க ஊடகம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மனமாற்றத்தினால் வாபஸ் பெறப்பட்டதா, அல்லது ஏதேனும் உத்தி மற்றும் நடைமுறைச் சிக்கல்களா என்பது பற்றித் தெரியவில்லை என்று செய்தி வெளியிட்டுள்ளது.

 

ஹார்மோஸ் ஜலசந்தி மேல் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதன் மூலம் இரான் மிகப்பெரிய தவறை இழைத்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். எனினும், இதுமனித தவறுகளால் நிகழ்ந்திருக்கலாம் என்று கூறிய அதிபர், இரான் வேண்டுமென்றே செய்திருக்கும் என்பதை தன்னால் நம்ப முடியவில்லை என்று தெரிவித்தார்.

 

அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் ஈரானின் வான்வெளி எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக ஈரான் குற்றஞ்சாட்டுகிறது. ஆனால், ஈரானின் இந்த குற்றச்சாட்டை அமெரிக்கா மறுத்துள்ளது. ஈரான் நாட்டை அமெரிக்காவின் ஆளில்லா விமானம் உளவு பார்க்கும் நோக்கில் பறந்ததாக ஈரானின் ஐ.நாவுக்கான தூதர் மஜித் தக் ரவஞ்சி கூறியுள்ளார். அமெரிக்காவின் இந்த செயல் சர்வதேச சட்டத்தின் ஒரு அப்பட்டமான விதிமீறல் என்றும் மஜித் அமெரிக்காவை சாடியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x