Last Updated : 14 Jun, 2019 01:30 PM

 

Published : 14 Jun 2019 01:30 PM
Last Updated : 14 Jun 2019 01:30 PM

தீவிரவாதத்தை பரப்பும் நாடுகள் தான் கண்டிப்பாக பதில் அளிக்க பொறுப்பானவர்கள்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

தீவிரவாதத்துக்கு உதவி செய்யும், துணையாக இருக்கும், பரப்பும் நாடுகள் தான் அதற்கு கண்டிப்பாக பதில் அளிக்க கடமைக்கப்பட்டவர்கள் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மாநாட்டில் அமர்ந்திருக்கும் போதே பாகிஸ்தானை மறைமுகமாக பிரதமர மோடி சாடினார்.

கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ் கெக் நகரில் 2 நாட்கள் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உறுப்பு நாட்டு தலைவர்கள் மாநாடு நேற்றுமுன்தினம் தொடங்கியது.

இதில் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய 8 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதுதவிர பார்வையாளர்களாக உள்ள ஆப் கானிஸ்தான், பெலாரஸ், ஈரான் மற்றும் மங்கோலியா ஆகிய 4 நாடு களின் தலைவர்களும் பங்கேற் கின்றனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலையில் டெல்லியில் இருந்து தனி விமானம் பாகிஸ்தான் வழியாகச் செல்லாமல் ஓமன், ஈரான் வான் வழியாக பிஷ்கெக் சென்றார்.

இந்த மாநாட்டின் இடையே சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் விளாதிமிர் புதின், ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி, கிர்கிஸ்தான் அதிபர் சூரன்பே ஜின்பெக்கோவ் ஆகியோருடன் பிரதமர் மோடி தனித்தனியாக சந்தித்துப் பேசினர்.

அதன்பின் ஷாங்காய் கூட்டுறவு மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:

கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நான் இலங்கைக்குச் சென்றிருந்தேன். அங்கு ஈஸ்டர் பண்டிகையின் போது, தீவிரவாதிகளின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட புனித அந்தோணியார் தேவாலயத்துக்குச் சென்று அங்கு தீவிரவாதத்தின் கோரமான முகத்தை பார்த்தேன். அந்த தேவாலயத்தில்தான் ஏராளமான அப்பாவி மக்கள் தீவிரவாதத்தின் பிடியில் சிக்கி பலியானார்கள்.

சர்வதேச அளவில் அச்சுறுத்திவரும் தீவிரவாதத்தை எதிர்க்க, பதிலடி கொடுக்க ஒருமித்த நோக்கில் அனைத்து நாடுகளும் ஒன்றாக இணைய வேண்டும்.

இந்தியா தீவிரவாதம் இல்லாத சமூகமாக இருக்க விரும்புகிறது. தீவிரவாதத்தை பரப்புவோர்கள், உதவி செய்பவோர்கள், தீவிரவாதிகளுக்கு உதவி செய்பவர்கள் அனைவரும் தீவிரவாத செயல்களுக்கு பதில் அளிக்க கடமைப்பட்டவர்கள், பொறுப்பானவர்கள்.

தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் சேர்ந்து பிராந்திய அளவில் தீவிரவாதத்துக்கு எதிரான கட்டமைப்பை உருவாக்க வேண்டும். தீவிரவாதத்துக்கு எதிரான மாநாட்டை சர்வதேச அளவில் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் நடத்த வேண்டும்.

இலக்கியங்கள், கலாச்சாரங்கள் அனைத்தும் சமூகத்தில் சாதகமான, ஆக்கப்பூர்வமான விஷயங்களை வலியுறுத்துகின்றன. குறிப்பாக சமூகத்தில் இளைஞர்கள் மத்தியில் பிரிவினையை பரப்புவதில் நிறுத்த முக்கிய பங்காற்றுகின்றன.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்

பாகிஸ்தான் ஆதரவில் செயல்பட்டு வரும் தீவிரவாதிகள் தொடர்ந்து இந்தியா மீது எல்லை மீறி தாக்குதல் நடத்தி வருகின்றன. தங்கள் மண்ணில் செயல்படும் தீவிரவாத குழுக்களுக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்தக் கோரி பாகிஸ்தானுடன் தொடர்ந்து பலமுறை இந்தியா வலியுறுத்தி வருகிறது.

கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் பதான்கோட் தாக்குதல், புல்வாமா தாக்குதல் ஆகியவற்றுக்குப்பின் பாகிஸ்தானுடன் இந்தியா எந்தவிதமான தொடர்பையும் வைத்துக் கொள்ளவில்லை. தீவிரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரேநேரத்தில் நடத்த முடியாது என்று இந்தியா பேச்சு நடத்த மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x