Published : 15 May 2019 10:16 AM
Last Updated : 15 May 2019 10:16 AM

ஈரானுக்கு எதிராக 1,20,000 அமெரிக்கப் படை வீரர்கள்? - மத்திய கிழக்கில் பதற்றம்; ட்ரம்ப் மறுப்பு

ஈரானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், தேவைப்பட்டால் போர் தொடுக்கவும் ஏதுவாக மத்திய கிழக்கு பகுதிக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் கொண்ட அமெரிக்க படையை  அங்கு அனுப்ப திட்டமிட்டு வருவதாக வெளியான தகவலை ட்ரம்ப் மறுத்துள்ளார்.

ஈரானுக்கும் அமெரிக்காவும் இடையேயான பதற்றம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு வளைகுடா நாடுகளுக்கு ஏவுகணை அமைப்புகளையும், போர்க் கப்பலையும் அமெரிக்கா அனுப்பி வைத்தது. வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவம் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சுறுத்தல் எழுந்திருப்பதால், ட்ரம்ப் நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாகக் கூறப்பட்டது.

ஆனால் படைகளைக் குவித்து, மத்திய கிழக்கில் பதற்றத்தை ஏற்படுத்த அமெரிக்க திட்டமிடுவதாக ஈரான் குற்றம்சாட்டி இருந்தது. உலகில் எண்ணெய் போக்குவரத்துக்கு ஆதாரமாக உள்ள ஹோர்முஸ் நீரிணைப்பு பகுதியை மூடப் போவதாக ஈரான் எச்சரித்து வருகிறது.
இந்தநிலையில், ஈரானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், தேவைப்பட்டால் போர் தொடுக்கவும் ஏதுவாக மத்திய கிழக்கு பகுதிக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் கொண்ட அமெரிக்க படையை  அங்கு அனுப்ப திட்டமிட்டு வருவதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டு இருந்து.

ஆனால் இதனை அதிபர் ட்ரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார். செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், ‘‘இது போலி செய்தி. இதுபோன்ற எந்த ஒரு திட்டமும் இல்லை.

சரியானதைத்தான் நான் செய்வேன். எந்த ஒரு நாட்டையும் மிரட்ட வேண்டிய அவசியம் இல்லை. இது உண்மை என்றால் எங்கள் திட்டமும் வேறுவிதமாக இருக்கலாம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x