Published : 26 Apr 2019 03:38 PM
Last Updated : 26 Apr 2019 03:38 PM

தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளிகளில் தவறுதலாக இடம்பெற்ற பெண்ணின் புகைப்படம்: வருத்தம் தெரிவித்த இலங்கை

இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர்களின் புகைப்படத்தில் தவறுதலாக தன் புகைப்படம் இடம்பெற்று இருப்பதாக பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் கடந்த 21-ம் தேதி அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 359  என்று கூறப்பட்டு வந்த நிலையில் பலி எண்ணிக்கை 253 என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலில் தொடர்புடையதாக சந்தேகப்படும் முகமது இவுஹயிம் சாதிக் அப்துல் ஹக், பாத்திமா லதீபா, முகமது இவுஹயிம் சாஹித் அப்துல் ஹக், புலஸ்தினி ராஜேந்திரன் (எ) சாரா, அப்துல் காதர் பாத்திமா காதியா மற்றும் முகமது காசிம் முமது ரில்வான் ஆகிய 6 பேரின் புகைப்படங்கள் மற்றும் பெயர்களை போலீஸார் நேற்று வெளியிட்டனர்.

இந்நிலையில் போலீஸார் வெளியிட்ட புகைப்படங்களில் பாத்திமா கவுத்தியா  என்ற பெண்ணின் பெயரில் எனது புகைப்படம் இடம் பெற்றுள்ளது என்று அமரா மஜித் என்ற பெண் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

இதுகுறித்து அமரா மஜித்  என்ற ஃபேஸ்புக் பக்கத்தில், ''நான் இலங்கை அரசாங்கத்தால் தவறுதலாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளேன். இது முற்றிலும் பொய். இந்தக் கொடூரமான தாக்குதலுடன் என்னை தொடர்புபடுத்துவதை நிறுத்துங்கள்'' என்று பதிவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இலங்கை அரசு தனது தவறுக்கு மன்னிப்பு கேட்டுள்ளது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x