Published : 24 Apr 2019 05:24 PM
Last Updated : 24 Apr 2019 05:24 PM

ரயிலில் அடிபட்டு உயிரை விட்ட உரிமையாளர்: உடலைப் பிரிய மறுத்து தண்டவாளத்திலேயே படுத்திருந்த நாய்

ரயிலில் அடிபட்டு உயிரிழந்த உரிமையாளரின் உடலை விட்டுச் செல்ல மறுத்த வளர்ப்பு நாய், தண்டவாளத்திலேயே படுத்திருந்தது காண்போர் உள்ளத்தை உருகச் செய்தது.

மெக்ஸிகோவின் வடக்குப் பகுதியான மாண்டி மொரெலோஸ் நகரத்தைச் சேர்ந்தவர் விக்டர் ரெய்னா. 57 வயதான இவர் சில ஆண்டுகளாக நாய் ஒன்றை வளர்த்து வந்தார். தனிமையில் இருந்து வந்த விக்டர் மதுப் பழக்கத்துக்கு அடிமையானார். சில நாட்களுக்கு முன்பாக அதிகாலையில் விக்டர் போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

மாண்டிமொரெலோஸ் ரயில் நிலையம் அருகே தள்ளாடியபடியே விக்டர் நடந்து சென்றார். தண்டவாளத்தைக் கடக்கவும் முயன்றார். அப்போது விரைந்து வந்த ரயில் ஒன்று, அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் விக்டர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தன்னுடைய உரிமையாளர் உயிரிழந்ததை அறிந்த நாய், அவரின் உடல் அருகிலேயே படுத்துக்கொண்டது. விக்டரின் உடலை எடுத்துச் செல்ல அவசரக் குழுவும் காவல்துறையும் அங்கு வந்தனர்.

அங்கிருந்த நாயை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் உரிமையாளரின் உடலை விட்டு நாய் செல்ல மறுத்தது. நாயை விக்டரின் உடலில் இருந்து விலக்க முயன்ற காவல்துறை அதிகாரியைக் கடிக்க முயற்சி செய்தது. அங்கிருந்து செல்ல மறுத்து தண்டவாளத்திலேயே தலை வைத்துப் படுத்துக்கொண்டது.இது காண்போரின் மனதை உருகச் செய்தது.

எனினும் அதிகாரிகள் வலுக்கட்டாயமாக நாயை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதுதொடர்பான செய்தி வைரலானவுடன் ஏராளமான நெட்டிசன்கள் அந்த நாயைத் தத்தெடுக்க விரும்புவதாகத் தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x