Last Updated : 24 Apr, 2019 04:40 PM

 

Published : 24 Apr 2019 04:40 PM
Last Updated : 24 Apr 2019 04:40 PM

யார் இந்த ஜஹ்ரான் ஹஷிம்?- இலங்கை தற்கொலைப்படைத் தாக்குதலில் என்ன தொடர்பு?-புதிய தகவல்கள்

இலங்கையில் 359 பேர் கொல்லப்பட்ட மிகமோசமான தற்கொலைப்படைத் தாக்குதலுக்கு அந்நாட்டைச் சேர்ந்த மதகுரு ஜஹ்ரான் ஹஷிமுக்கு முக்கியத் தொடர்பு இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈஸ்டர் பண்டிகையின்போது, இலங்கையில் தேவாலயம், ஹோட்டல்கள் உள்ளிட்ட 9 இடங்களில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் இதுவரை 359 பேர் கொல்லப்பட்டுள்ளனனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. நியூஸிலாந்து நாட்டில் கடந்த ஒரு மாதத்துக்கு முன் மசூதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்று அது தொடர்பாக ஒரு வீடியோவையும் வெளியிட்டது. இந்த வீடியோவில் 8 பேர் இருந்தனர், இந்த 8 நபர்களி்ல ஒருவர் மட்டும் முகத்தை மறைக்காமல் இருந்தார். இவர் இலங்கையைச் சேர்ந்த மதகுரு ஹஷிம் எனத் தெரியவந்துள்ளது.

கறுப்புநிற துணியை தலையில் சுற்றிக்கொண்டு, கையில் துப்பாக்கியுடன், ஹஷிம் இருந்துள்ளார். மற்ற 7 பேரும் கறுப்பு, வெள்ளை துணியால் முகத்தை மறைத்திருந்தனர்.

இலங்கை அரசு ஏற்கனவே ஹஷிம் குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பி மறைமுகமாக இந்த தாக்குதலுக்கு காரணமாக குற்றம்சாட்டி இருந்தது. ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் உதவியுடன் இலங்கையில் தேசிய தவ்ஹீத் ஜமா அத் என்ற இஸ்லாமிய அமைப்பை ஹஷிம் தொடங்கி நடத்தி வந்துள்ளார். இவர்தான் இலங்கை தற்கொலைப்படைத் தாக்குதலில் முக்கியக் குற்றவாளியாக இருக்கலாம் என இலங்கை அரசால் கருதப்படுகிறது.

பல்வேறு இடங்களில் தனது பெயரை ஹஷிம் என்றும் ஹஷ்மி என்று மாற்றி வைத்துள்ளார் என்று இலங்கை போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால், ஐஎஸ் அமைப்பினர் நேற்று வெளியிட்ட வீடியோவுக்குப் பின்புதான் இலங்கையில் நடந்த தாக்குதலுக்கு ஹஷிம் முக்கியப் பங்காற்றியுள்ளார் என்று புலனாய்வு பரிவினர் முடிவுக்கு வந்துள்ளனர்.

ஹஷிமின் பிரச்சாரத்தால் இலங்கையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஈர்க்கப்பட்டு இந்த அமைப்பில் சேர்ந்துள்ளனர். யூடியூப் மற்றும் ஃபேஸ்புக்கிலும் ஹஷிமின்  பிரச்சார வீடியோக்கள் ஏராளமாக வெளியிடப்பட்டுள்ளன. முஸ்லிம் அல்லாதோருக்கு எதிராக ஹஷிமின் அனல் தெறிக்கும்  பேச்சுக்கள் அதில் இடம் பெற்றுள்ளன.

இலங்கையில் உள்ள முஸ்லிம் கவுன்சிலின் துணைத் தலைவர் ஹில்மே அகமது கூறுகையில், " கடந்த 3ஆண்டுகளுக்கு முன்பே உள்ளூர் முஸ்லிம் நிர்வாகிகள் ஹஷிம் குறித்த எங்கள் கவலைகளைத் தெரிவித்தோம். குர்-ஆன் வகுப்புகள் நடத்துகிறேன் என்று கூறிக்கொண்டு ஏராளமான இளைஞர்களை தவறான பாதைகக்கு கொண்டு சென்றார். ஹஷிமுக்கு சர்வதேச அளவில் பல தொடர்புகள் இருந்தன.

ஹஷிம் பேசும் அனைத்து வீடியோக்களும் இந்தியாவில் இருந்துதான் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. கள்ளப்படகு மூலம் இந்தியாவின் தென்மாநில நகரங்களுக்குச் சென்றுவீடியோக்களை பதிவேற்றம் செய்துவிட்டு மீண்டும் திரும்பிவிடுவார்கள். ஆனால், ஹசிம் இப்போது உயிரோடு இருக்கிறாரா அல்லது இறந்துவிட்டார் என்பது தெரியவி்ல்லை.

ஹஷிமுக்கு நெருக்கமாக முகமது ஜஹ்ரான், மவுலவி ஹஷிம் ஆகியோர் இருந்தனர். இருவருமே மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள்.  இதில் கிழக்குகடற்கரைப் பகுதியான மட்டக்களிப்பு பகுதியில் சீயோன் தேவாலயத்தில்  ஒரு தற்கொலைப்படைத் தாக்குதல் நடந்தது. இருவரும் அதில் கொல்லப்பட்டதாக போலீஸார் கூறுகிறார்கள்.

ஆனால் இலங்கையில் இவர்கள் தாக்குதல் நடத்தும் அளவுக்கு துணிச்சல் இருக்கிறதா என்று யாரும் நினைக்கவில்லை. இதில் ஜஹ்ரன் சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். பள்ளிப்படிப்பை பாதியில்விட்ட ஜஹ்ரன் கட்டங்குடியில் உள்ள மதரசாவில் படித்தவர்.

கட்டங்குடியில் உள்ள முஸ்லிம் மக்களுக்கும், தவ்ஹித் ஜமாத்துக்கும் ஜஹ்ரன் பல்வேறு இடையூறுகளை கொடுத்துள்ளார். நாள்தோறும் பள்ளிவாசலுக்கு செல்வோரிடம் தொடர்ந்து வம்புசெய்து அவர்களிடம் ஜஹ்ரன் சண்டையிடுவார்.

சிலநேரங்களில் கத்தியால் கொலை செய்யவும் முயன்றுள்ளார். கட்டங்குடியில் தேசிய தவ்ஹித் அமைப்பை கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கினார் " எனத் தெரிவித்தார்.

இந்த தாக்குதல் குறித்து இலங்கையின் பாதுகாப்புத்துறையின் துணை அமைச்சர் ருவான் வஜிவர்தனே கூறுகையில், " இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதலை தேசிய தவ்ஹித் ஜாமாத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நடத்தினார்களா, அல்லது அந்த அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற சிலர் நடத்தினார்களா என்பது குழப்பமாக இருக்கிறது. ஆனால், இந்த குழுவின் தலைவர் இந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் இறந்திருக்கலாம் என கருதுகிறோம். ஆனால், ஹஷிம் என்பது உறுதியாகத் தெரியாது.

இந்த தாக்குதலுக்கு நடத்தியவர்களுக்கு சர்வதேச உதவிகள் ஏதும் கிடைத்துள்ளதா அல்லது ஐஎஸ் தீவிரவாதிகள் உதவினார்களா என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது. " எனத் தெரிவித்தார்.

இலங்கையின் முக்கிய வட்டாரங்கள் கூறுகையில், " தற்கொலைப்படைத் தாக்குதலில் ஹஷிம் இறந்துவிட்டாரா என்பது குறித்த எந்த ஆதாரங்களும் இல்லை. தாக்குதலில்அனைவருக்கும் டிஎன்ஏ சோதனை நடத்தாமல் எந்த விஷயத்தையும் உறுதி செய்ய முடியாது " எனத் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x