Published : 15 Mar 2019 07:13 PM
Last Updated : 15 Mar 2019 07:13 PM

நியூஸி. மசூதித் துப்பாக்கிச் சூடு நடத்தியவனை தைரியமாகப் பிடித்த நபர்: நேரில் பார்த்தவர்கள் பிரமிப்பு

நியூஸிலாந்து நாட்டின் கிறைஸ்ட்சர்ச்சில் 2 மசூதிகளில் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்தியவர்கள் மீது கொடூரமாகத் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை ஒருவர் இறுக்கமாகப் பிடிக்காதிருந்தால் பலி எண்ணிக்கை இன்னும் படுமோசமாக இருந்திருக்கும் என்று நேரில் பார்த்த ஒருவர் இந்தியத் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தனர்.

 

முஸ்லிம்கள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டை நடத்திய ஆஸ்திரேலியனான பிரெண்ட்டன் டர்ட்டான் ஒரு வலதுசாரி இயக்கத்தைச் சேர்ந்தவன்  என்று தெரிகிறது.

 

இந்நிலையில் நேரில் பார்த்த நபர் கூறும்போது, “நாங்கள் சிறிய மசூதியில் இருந்தோம். 100  சதுரமீட்டர்கள்தான் இருக்கும். அப்போது துப்பாக்கி ஏந்திய மர்மநபர் மசூதிக்குள் வந்து சுடுகிறார் என்றால் நம்மால் எதுவும் செய்ய முடியாது, உயிரைக்காப்பாற்றிக் கொள்ளத்தான் தோன்றும் இது மனித இயல்பு.  ஆனால் நானும் என் நண்பனும் நேரில் பார்த்த காட்சி எங்களை பிரமிக்க வைத்தது. ஒரு நபர் தைரியமாக துப்பாக்கிச் சூடு நடத்தியவனை பின்புறமிருந்து இறுக்கப் பிடித்தார், அவனால் ஒன்றும்  செய்ய முடியவில்லை, துப்பாக்கியை கீழே போடும்வரை அவர் பிடி தளரவில்லை.

 

அவர் பிடித்ததையடுத்து துப்பாக்கி கீழே விழுந்ததால் தாக்குதல் நடத்திய தீவிரவாதி கதவை நோக்கி ஓடுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போய் விட்டது, இது மட்டும் நடக்கவில்லையெனில் இன்னும் பலர் கொல்லப்பட்டிருப்பார்கள். நானும் இப்போது உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்க மாட்டேன். அந்த மனிதனுக்கு நன்றிகள் பல. அவர் யார் என்று நிச்சயம் கண்டுபிடிப்போம்.

 

நான் யாருக்காகவும் பேசவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக இந்த அழகான நாட்டில் வசித்து வருகிறேன். இங்கு நமக்கு எந்தவித அச்சுறுத்தல்களும் இல்லை, இல்லவேயில்லை. ஆகவே ஒரு சம்பவத்தை வைத்து இந்த நாட்டைப் பற்றி நான் கருத்து கூறுடல் கூடாது.

 

நான் நியூஸிலாந்தை நேசிக்கிறேன், இங்கு வாழும் மக்களை நேசிக்கிறேன்.  நியூஸி. மக்களிடமிருந்துதான் எனக்கு இந்தச் சம்பவத்துக்குப் பிறகு நலம் விசாரித்து அதிக போன்கள் வந்தன. ” என்கிறார் பைசல் சையத் என்கிற இந்த நபர். தாக்குதலை நேரில் பார்த்தவர், இவர் உயிரும் போயிருக்கும் அதிர்ஷ்டவசமாகத் தப்பியுள்ளார். சையத்தின் நண்பர்கள் இந்தத் தாக்குதலில் பலியாகினர், காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x