Last Updated : 14 Mar, 2019 10:14 AM

 

Published : 14 Mar 2019 10:14 AM
Last Updated : 14 Mar 2019 10:14 AM

சர்வதேச தீவிரவாதியாக மசூத் அசாரை அறிவிக்க ஐ.நா.வில் சீனா 4-வது முறையாக மீண்டும் முட்டுக்கட்டை: இந்தியா கடும் அதிருப்தி

புல்வாமா தாக்குதலுக்கு காரணமாக இருக்கும் முக்கியத் தீவிரவாதியும், ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவருமான மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் மூலம் அறிவிக்க மேற்கொண்ட முயற்சியை 4-வது முறையாக சீனா தடை செய்து முட்டுக்கட்டை போட்டது.

இந்தியா தொடர்ந்து செய்து வரும் முயற்சிகளை சீனா தடுத்து வருவதற்கு இந்தியா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர், புல்வாமாவில் கடந்த மாதம் 14-ம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில்ன் பாலகோட் பகுதியில் செயல்பட்டுவரும் ஜெய்ஷ் இ முகமது முகாம்களை இந்திய விமானப்படை கடந்த மாதம் 26-ம் தேதி குண்டுவீசி அழித்ததாகக் கூறப்பட்டது.

இந்த சூழலில், ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கக் கோரி அமெரிக்கா, பிரானஸ், இங்கிலாந்து  உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் கொண்டு வந்தன.

10 நாட்களுக்குள் ஐ.நா.வில் உள்ள உறுப்பு நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்தால், தீர்மானம் குறித்து ஆய்வு செய்யப்படுவதாக இருந்தது. ஆனால், இன்று அதிகாலை 12.30 மணி கடைசிநேரமாகும். ஆனால்,அதுவரை எந்த உறுப்பினர்களும் எதிர்ப்புத் தெரிவிக்காத நிலையில் கெடுநேரம் முடியும் தருவாயில், சீனா தொழில்நுட்ப ரீதியாக சில கேள்விகளை முன்வைத்து தீர்மானத்தை நிறைவேற்றவிடாமல் தடுத்தது.

மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க கோரும் தீர்மானத்தை ஆய்வு செய்ய இன்னும் சிறிது காலம் எடுத்துக்கொள்ளலாம் என்று, காலஅவகாசம் அளித்தல் போதுமானது என்று சீனா ஐ.நா.வில் கோரியது. இதனால், கடைசி நேரத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுவது தடைசெய்யப்பட்டது.

சீனா கேட்டுள்ள காலஅவகாசம் என்பது, குறைந்தபட்சம் 6 மாதங்கள் வரை முதல் கட்டமாக அளிக்கப்படும், அதன்பின், 3 மாதங்கள் வரை நீட்டிக்கப்படலாம். ஆதலால், இன்னும் 9 மாதங்களுக்கு மசூத் அசார் மீது தடைவிதிக்க வாய்ப்பில்லாத சூழலை சீனா உருவாக்கியுள்ளது.

சீனாவின் இந்த செயலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடுமையாக கண்டித்து, தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், " மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கும் முயற்சி தடையானதில் எங்களுக்கு வேதனை ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்திய குடிமக்கள் மீது தாக்குதல் நடத்திய  தீவிரவாதிகளை நீதியின் முன் நிறுத்த தொடர்ந்து, அனைத்து வகையான முயற்சிகளையும் மேற்கொள்வோம். மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க ஆதரவுஅளித்த அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் எங்களின் நன்றியை தெரிவிக்கிறோம் " எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்தியத் தூதரும், ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியுமான சயித் அக்பருதீன் ட்விட்டரில் கூறுகையில், " சிறிய, பெரிய மற்றும் எத்தனையோ தடைகள். மீண்டும் மிகப்பெரிய அரசு முயற்சிக்கு தடை விதித்துள்ளது. தீவிரவாதத்துக்கு எதிராக எழுந்து நின்ற அனைவருக்கும், ஆதரவு அளித்தவர்களுக்கும் நன்றி " என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க 4-வதுமுறையாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு தோல்வியில் முடிந்துள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தடைவிதிக்கும் அல்கொய்தா தடை விதிக்கும் குழுவுக்கு கடைசி நேரம் எந்த உறுப்பு நாடும் எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருந்திருந்தால், மசூத் அசார் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டு, அனைத்து நாடுகளிலும் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு இருந்திருப்பார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x