Published : 27 Feb 2019 11:15 AM
Last Updated : 27 Feb 2019 11:15 AM

வியட்நாமில் ட்ரம்ப் - கிம் சந்திப்பு

வியட்நாமில் நடைபெற்று வரும் உச்சி  மாநாட்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஆகியோர் சந்திப்பு நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், “உலக நாடுகள் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வடகொரிய அதிபர் கிம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இடையேயான சந்திப்பு வியட்நாமில்   தலைநகர் ஹானோயில் அதிபர் மாளிகையில் நடைபெற்று வருகிறது. 

தற்போது கிம் மற்றும் ட்ரம்புக்கு சிறப்பு  விருந்து அளிக்கப்பட்டு வருகிறது. இதில் வியட்நாம் பிரதமர்  நேயென் ஜுவான்னுடன்  அந்நாட்டின் முக்கிய தலைவர்கள்  பங்கேற்றுள்ளானர்” என்றார்.

வடகொரிய அதிபர் கிம் உடனான சந்திப்புக்கு பிறகு  ட்ரம்ப்,  வியட் நாம் அதிபர்  நூயென் பூவை சந்திக்க இருக்கிறார்.

இந்த நிலையில் கிம் உடனான சந்திப்பு குறித்து ட்ரம்ப் கூறும்போது, ”வியட்நாமில் நடக்கும் இந்த முக்கியமான உச்சி மாநாடு குறித்து நாங்கள்  நன்றாகவே உணர்ந்திருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

இந்தச் சந்திப்பின் முக்கியதுவத்தை உணர்ந்து இதனை வெற்றி பெற செய்ய நாங்கள் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்திருக்கிறோம் என்று வியட்நாம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா 22 ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இதில் இரண்டு சோதனைகள் ஜப்பான் கடலுக்கு அருகில் நடத்தப்பட்டன. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன.

ஆனால், எதிர்ப்புகளைச் சற்றும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது. இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.

எனினும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைப் பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்ததது.

இந்த நிலையில் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அதுமுதல் வடகொரியா - தென் கொரியா உறவில் இணக்கம் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து ட்ரம்ப் - கிம் இடையே சிங்கப்பூரில் சந்திப்பு ஏற்பட்டது.

இந்தச் சந்திப்பில் அணு ஆயுதங்களை அழிக்க வடகொரியா சம்மதம் தெரிவித்தது. இந்த நிலையில் ட்ரம்ப் - கிம் இடையே இரண்டாவது சந்திப்பு நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x