Last Updated : 27 Feb, 2019 09:58 AM

 

Published : 27 Feb 2019 09:58 AM
Last Updated : 27 Feb 2019 09:58 AM

தீவிரவாதிகளுக்கு எதிராக அர்த்தமுள்ள நடவடிக்கை எடுங்கள்: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

பாகிஸ்தானில் மண்ணில் செயல்பட்டுவரும் தீவிரவாதிகளுக்கு எதிராகத் தீவிரமான, அர்த்தமுள்ள நடவடிக்கை எடுங்கள் என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.

அதேசமயம், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் பதற்றப்பட்டு ராணுவ நடவடிக்கையில் இறங்காமல், பொறுமை காக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளன.

ஜம்மு காஷ்மீரில், புல்வாமாவில் கடந்த 14-ம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு நாடுமுழுவதும் பெரும் எதிர்ப்பலை நிலவியது. இந்நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பாலாகோட் பகுதியில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முகாம் மீது நேற்று இந்திய விமானப்படை பதிலடித் தாக்குதல் நடத்தியது. இதில் 350-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள், தற்கொலைப்படைத் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக மத்திய அரசு தெரிவிக்கிறது.

இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் குறித்து அறிந்ததும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெகமூட் குரோஷி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரை தொலைபேசியில் அழைத்துப் பேசி விவரங்களைக் கேட்டறிந்தார்.

மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு தனிப்பட்ட முறையில் தொலைப்பேசியில் பேசிய மைப் பாம்பியோ, பிராந்தியத்தில் அமைதியும், பாதுகாப்பும் நிலவ தேவையான நடவடிக்கைகள் எடுக்க ஒத்துழைப்போம் எனத் தெரிவித்துள்ளார்.

தற்போது வியட்நாமில் 2 நாட்கள் மாநாட்டில் பங்கேற்றுவரும் பாம்பியோ, வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

 " தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையாக பிப்ரவரி 26-ம் தேதி இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்வராஜுன் தொலைப்பேசியில் பேசினேன். பிராந்தியத்தில் அமைதியும், பாதுகாப்பும் நிலவ தேவையான ஒத்துழைப்பை வழங்குவதாகத் தெரிவித்தோம்.

மேலும், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரோஷியிடமும் தொலைப்பேசியில் பேசினேன். அப்போது இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளும் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் செயல்பட்டு, ராணுவ நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். தங்கள் மண்ணில் செயல்படும் தீவிரவாதிகளுக்கு எதிராக உறுதியான, அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

பதற்றத்தை எந்தவகையிலும் தணிக்கும் வகையில் இரு நாடுகளும் செயல்படத் தேவையான முயற்சிகளை நாங்கள் மேற்கொள்வோம் என இரு நாட்டு அமைச்சர்களிடம் நான் பேசினேன். எதிர்காலத்தில் ராணுவ நடவடிக்கையைத் தவிர்க்கும் வகையில், இரு அமைச்சர்களும் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன் "

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த வாரம் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம்  பேசிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், இந்தியா தனது சுயபாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க உரிமை இருக்கிறது. பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத குழுக்களை அழிக்க அமெரிக்கா, இந்தியா இணைந்து செயல்படும் " எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x