Published : 16 Jan 2019 03:56 PM
Last Updated : 16 Jan 2019 03:56 PM

பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய 17 அடி முதலை: 8 அடி தடுப்புச் சுவரை தாவி இழுத்துச் சென்றது

இந்தோனேசியாவின் வடக்கு சுலாவேசி நகரில், பெண் ஆராய்ச்சியாளர் உணவு கொடுக்கச் சென்றபோது, 17 அடி நீளமுள்ள முதலை ஒன்று அவரை உயிருடன் விழுங்கிய சம்பவம் நடந்துள்ளது.

வடக்கு சுலாவேசி நகரில் சி.வி.யோசிகி முதலை ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது. இந்த மையத்தில் டீசி டுவோ(வயது44) என்ற பெண் ஆராய்ச்சியாளர் பணியாற்றி வந்தார். அந்த பண்ணையில் மெரி என்ற முதலை வளர்க்கப்பட்டு வந்தது. இந்த முதலை 17 அடி நீளம் கொண்டது என்பதால், மனிதர்களைத் தாக்கும் தன்மை கொண்டதால், 8 அடி தடுப்புச்சுவற்றுக்குள் வளர்க்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இந்த முதலைக்கு நேற்றுமுன்தினம் டீசி டுவோ வழக்கம் போல் மாமிச உணவுகளை அளிக்கச் சென்றார். அப்போது திடீரென 8 அடி தடுப்புச் சுவரை மீறி பாய்ந்த முதலை, டுவோவின் கைகளைப் பற்றி இழுத்துச் சென்றது முதலையின் வாய்க்குள் டுவோ உடலின் பெரும்பகுதியான பாகங்கள் சென்ற நிலையில், ஆவேசமாக இழுத்துச் சென்றது.

டுவோவின் அலறல் சத்தத்தைக் கேட்ட அவரின் தோழி வந்து பார்க்கையில் டுவோவை முதலை இழுத்துச் செல்வதை அறிந்து அலறித் துடித்தார். உடனடியாக ஆராய்ச்சி மையத்தில் இருந்தவர்களிடமும், போலீஸாருக்கும் தகவல் அளித்தார்.

அதன்பின் போலீஸாரும், மீட்புப்படையினரும், விரைந்து வந்து மெரி முதலையைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்டநேர போராட்டத்துக்குப்பின் முதலையைப் பிடித்தனர். முதலையை ஆய்வு செய்ததில், மனித உடல் பாகங்களை சாப்பிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

இந்தச்சம்பவத்தை நேரில் பார்த்த டுவோவின் தோழி எர்லிங் ருமென்கன் கூறுகையில், “ முதலைக்கு டுவோ உணவு வழங்குவதை நான் ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது திடீரென முதலைப் பாய்ந்து வந்து டுவோவை கண்இமைக்கும் நேரத்தில் இழுத்துச் சென்றது. உடனடியாக போலீஸாருக்கும், ஆராய்ச்சி மைய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தேன். திரும்பி வந்து பார்க்கையில், டுவோவின் சிதைந்த உடல் பாகங்கள் நீரில் மிதந்தன. உடனடியாக டாம்பாரி போலீஸ் நிலையத்துக்கும் தகவல் அளித்தேன். 8 அடி சுவற்றை முதலைத் தாவியதை என்னால் நம்ப முடியவில்லை” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே இந்த முதலை ஆராய்ச்சி மையத்தில் முதலையை வளர்த்து வரும் ஜப்பான் நாட்டவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

டோமோஹான் நகர போலீஸ் தலைவர் ராஸ்வின் சிராய்ட் கூறுகையில், “ முதலையை வளர்த்து வந்த உரிமையாளரைத் தேடி வருகிறோம். அதிகாரிகள் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளார்கள். இந்தக் கொடூரமான சம்பவம் குறித்து அந்த முதலையின் உரிமையாளர் அறிந்திருப்பார் என்று நினைக்கிறேன். முதலையை வளர்க்கச் சட்டப்பூர்வ அனுமதி பெற்றிருக்கிறாரா என்பது தெரியவில்லை. அனுமதியில்லை என்றால் கைது செய்யப்படுவார். முதலை தற்போது பிடிக்கப்பட்டு அரசு காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x