Published : 01 Jan 2019 02:00 PM
Last Updated : 01 Jan 2019 02:00 PM

அமெரிக்காவில் மரணப் படுக்கையில் இருந்த மகன்; போராடி வந்த ஏமன் தாயின் இறுதி முத்தம்

ஏமனைச் சேர்ந்த இரண்டு வயதான அப்துல்லா ஹசன் பிறந்த போதே மூளை சார்ந்த நோயால் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சைக்காக அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒக்லாண்டில் இருக்கும் மருத்துவமனையில் தந்தையுடன் தங்கி சிகிச்சை எடுத்து வந்த அப்துல்லா கடந்த வெள்ளிக்கிழமை மரணம் அடைந்தார்.

மரணப் படுக்கையிலிருந்த அப்துல்லாவைக் காண அவரது தாயார் ஷைமா மேற்கொண்ட போராட்டம் உருக்கமாக உள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில்,”அப்துல்லாவும் அவரது தந்தை அலி ஹசனும் அமெரிக்க குடிமக்கள். ஆனால் அப்துல்லாவின் தாய் ஷைமா ஏமனைச் சேர்ந்தவர்.

ஏமனில் கடந்த 6 வருடங்களாக நடக்கும் போர் காரணமாக அப்துல்லா 8 மாதக் குழந்தையாக இருக்கும்போது எகிப்துக்கு இவர்கள் குடிபெயர்ந்தனர். இந்த நிலையில் அப்துல்லாவின் மூளையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவர் சுவாச நோயால் பாதிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து அப்துல்லாவின் அப்பா அலி ஹசன்  மூன்று மாதங்களுக்கு முன்னர் கலிபோர்னியாவுக்கு அழைத்து வந்து சிகிச்சைக்காக அப்துல்லாவைச் சேர்த்துள்ளார். இந்நிலையில் அப்துல்லாவின் உடல்நிலை சமீப நாட்களில் மோசம் அடைந்தது. இதனைத் தொடர்ந்து அப்துல்லாவின் தாயாரை அமெரிக்கா வருமாறு மருத்துவர்கள் கூறினர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு  ஜனவரியில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற ட்ரம்ப் 7 நாடுகளின் (சிரியா, இராக், ஈரான், ஏமன், லிபியா, சோமாலியா, சூடான்)  பயணிகள், அகதிகள் அமெரிக்காவில் நுழையத் தடை விதித்ததன் காரணமாக அப்துல்லாவின் அம்மா ஷைமா அமெரிக்கா வருவதற்காக ஏராளமான பிரச்சினைகளைச் சந்தித்தார்.

ஷைமாவின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. தொடர்ந்து பல்வேறு போராட்டங்களைச் சந்தித்த அவர் பின்னர் பல்வேறு தரப்புகளிலுருந்து வந்த வேண்டுகோளுக்குப் பிறகு அமெரிக்கா வர ஷைமாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இறுதியாக இறக்கும் தருவாயில் இருந்த தன் மகனை முத்தத்துடன் வழியனுப்பி வைத்திருக்கிறார் ஷைமா” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

அப்துல்லாவின் இறப்பு குறித்து அவரது தந்தை அலி ஹசன் கூறும்போது, ”எங்களது இதயம் உடைந்தது. எங்களது வாழ்வின் ஒளியாகிய எங்கள் குழந்தைக்கு நாங்கள் இறுதி விடை அளிக்க வேண்டும்” என்றார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x