Published : 09 Dec 2018 08:32 AM
Last Updated : 09 Dec 2018 08:32 AM

ரசாயன கழிவுநீரை சுத்திகரிக்கும் நெற்பயிர்: அமெரிக்க வேளாண் துறை விஞ்ஞானி தகவல்

பூச்சிக்கொல்லிகள் கலந்த ரசாயன கழிவுநீரை நெற்பயிர் சுத்திகரிக்கிறது என்று அமெரிக்க வேளாண் துறை விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கோதுமை, சோளம், சோயாபீன்ஸ் ஆகிய உணவுப் பயிர்கள் அதிகம் பயிரிடப் படுகின்றன. இந்த பயிர்களின் விளைச்சலுக்காக ஏராளமான பூச்சிக் கொல்லிகள் பயன்படுத் தப்படுகின்றன. இதன்காரணமாக வேளாண் நிலம் பாழாகிறது. விளை நிலங்களில் இருந்து வெளி யேறும் ரசாயன கழிவுநீர், ஏரி, ஆறுகளில் கலந்து நீர்நிலைகளும் மாசடைகின்றன.

இதுதொடர்பாக அமெரிக்க அரசின் வேளாண் துறை மூத்த விஞ்ஞானி மேட் மூர் தலைமையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பூச்சிக்கொல்லிகள் கலந்த ரசாயன கழிவுநீரை நெற்பயிர் சுத்திகரிப்பது உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து வேளாண் விஞ்ஞானி மேட் மூர் கூறியதாவது:

ரசாயன கழிவுநீரை சுத்திகரித்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும், இதர தாவரங்களுக்கு அச்சுறுத்தல் இல்லாத செடி எது என்ற கேள்வி எனக்குள் நீண்டகாலமாக இருந்தது. இதில் எனக்கு கிடைத்த விடை நெற்பயிர்.

அமெரிக்க வேளாண் பண்ணை களில் இருந்து வெளியேறும் பூச்சிக்கொல்லி ரசாயனங்கள் கலந்த கழிவுநீர் ஆறு, ஏரிகளில் கலக்கிறது. இதனால் நீர்நிலைகள் மாசடைகின்றன. வேளாண் நிலமும் பாழாகிறது.

இதை தடுக்க சில கழிவுநீர் கால்வாய்களில் நெற்பயிர்களை வளர்த்தோம். வேறு சில கால்வாய் களில் இதர செடிகளை வளர்த் தோம். நான்கு பண்ணைகளில் சுமார் 2 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆய்வு நடத்தினோம்.

இதில் நெற்பயிர் வளர்க்கப்பட்ட கால்வாய்களில் 85 சதவீதம் முதல் 97 சதவீதம் வரை ரசாயன கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. எனவே அமெரிக்க விவசாயிகள், தங்களது பண்ணைகளில் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் நெற்பயிர்களை வளர்க்க அறிவுறுத்தியுள்ளோம். இந்த நெற்பயிரை உணவுக்காகவும் பயன்படுத்தலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அண்டார்டிகாவை தவிர்த்து உலகின் அனைத்து கண்டங்களி லும் நெற்பயிர் பயிரிடப்படுகிறது. உலக மக்கள் தொகையில் சுமார் 20 சதவீதம் பேர் நெற்பயிரில் இருந்து கிடைக்கும் அரிசியை உணவாகப் பயன்படுத்துகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x