Last Updated : 10 Nov, 2018 06:14 PM

 

Published : 10 Nov 2018 06:14 PM
Last Updated : 10 Nov 2018 06:14 PM

பண மதிப்பிழப்பும், ஜிஎஸ்டியும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பாதித்துவிட்டது: ரகுராம் ராஜன் விளாசல்

மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஆகியவை நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் கடந்த ஆண்டு பாதித்துவிட்டது. தற்போதுள்ள 7 சதவீத வளர்ச்சி நாட்டின் தேவைகளை நிறைவேற்றப் போதாது என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் பெர்க்லேயில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் எதிர்கால இந்தியா என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. அதில் பங்கேற்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் பேசியதாவது:

''இருமிகப்பெரிய அதிர்ச்சி நடவடிக்கைகள் வரும் வரை, கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து 2016-ம் ஆண்டுவரை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்பது மிகவேகமாக இருந்தது. ஆனால், பண மதிப்பிழப்பு மற்றும், ஜிஸ்டி வரி என அடுத்தடுத்து அதிர்ச்சி அறிமுகப்படுத்தப்பட்ட பின், நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடுமையாகப் பாதித்தது. சர்வதேச அளவில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி உச்சத்தில் இருந்த நிலையில், இந்த இரு அதிர்ச்சியால் வளர்ச்சி திடீரென சரிந்தது.

25 ஆண்டுகளில் 7 சதவீத பொருளாதார வளர்ச்சி என்பது மிக மிக வலிமையானது. கடந்த 1991-ம் ஆண்டுக்குப் பின் கடந்த 25 ஆண்டுகளில் இந்த வளர்ச்சி என்பது வியப்புக்குரியது.

உண்மையில் இந்த 7 சதவீத பொருளாதார வளர்ச்சி என்பது இளைஞர்கள் அதிகமாக இருக்கும் தொழிலாளர் சந்தைக்குப் போதுமானதாக இருக்காது. அதிகமான வேலைவாய்ப்புகள் அவசியம். பொருளாதார வளர்ச்சி இன்னும் தேவை, இந்த நிலையோடு நாம் மனநிறைவு அடைந்துவிட முடியாது.

இந்தியா திறந்தவெளி பொருளாதாரத்தைக் கொண்டிருக்கிறது. உலகப் பொருளாதாரம் வளர்ந்தால், இந்தியப் பொருளாதாரமும் அதிகமாக வளரும். ஆனால், 2017-ம் ஆண்டில் என்ன நடந்தது. உலகப் பொருளாதாரம் வளர்ந்தது, ஆனால், இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது.

அதற்குக் காரணம் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையும், ஜிஎஸ்டி வரியுமே காரணம். இவை இரண்டும் பொருளாதார வளர்ச்சியைக் கடுமையாக பாதித்துவிட்டன. இந்த இருபெரிய சிக்கலால், பிரச்சினையால் பொருளாதார வளர்ச்சி பின்னுக்கு இழுக்கப்பட்டது.

பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகிய சிக்கலில் இருந்து மீண்டு, இந்தியப் பொருளாதாரம் மீண்டும் சுறுசுறுப்படைந்து செல்லும்போது, பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்ந்து சிக்கலைக் கொடுத்தது.

வாராக்கடன் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தச் சூழல் தடுக்கப்பட்டு களையப்பட வேண்டும். அதற்கு வங்கிகள் தங்களின் வரவு செலவுக் கணக்குகளை முறையாகப் பராமரிக்கும் போது, இந்த விஷயம் களையப்படும்.ஆனால், மோசமான கடன்களைச் சமாளிக்கும் அளவுக்கு இங்குள்ள 'அமைப்பு முறையில்' போதுமான கருவிகள் இல்லை.

திவால் சட்டத்தால் மட்டும் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள நிலைமையைச் சரிசெய்துவிட முடியாது. வங்கிகளின் வாராக்கடன் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களைத் தீர்க்க அது ஒரு கருவி. ஆனால், வாராக்கடன்களைச் சமாளிக்க பன்முக அணுகுமுறை அவசியம். இந்தியாவுக்கு வலிமையான பொருளாதார வளர்ச்சியை எட்ட திறன் இருக்கிறது. இந்த 7 சதவீத வளர்ச்சியை எடுத்துக்கொண்டு அடுத்த கட்டத்துக்கு நகரலாம்.

ஆனால், 7 சதவீத வளர்ச்சிக்கு கீழே நாம் சென்றால், ஏதோ கண்டிப்பாக தவறு செய்கிறோம். இந்த வளர்ச்சியைத் தக்கவைக்க மாதத்துக்கு 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது அவசியம்.

தற்போது நாடு 3 மிகப்பெரிய சிக்கலில் சிக்கி இருக்கிறது. முதலாவது சிதிலமடைந்த, கிழிந்த அடிப்படைக் கட்டமைப்பு. கட்டுமானத்துறை நாட்டின் பொருளாதாரத்தை தொடக்கத்தில் வழிநடத்தக்கூடியது, வளர்ச்சியை உருவாக்கக்கூடியது.

இரண்டாவது குறுகியகால இலக்குகள் மூலம் மின்துறையைச் சீரமைக்க வேண்டும். அதாவது, உற்பத்தி செய்யும் மின்சாரம் உண்மையில் தேவைப்படும் மக்களுக்குச் செல்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். மூன்றாவதாக வங்கியைச் சீரமைத்தல். இந்த மூன்று சிக்கல்களைத் தீர்க்க வேண்டும்.

அதுமட்டுமல்லாமல், இந்தியாவில் உள்ள மற்றொரு முக்கியப் பிரச்சினை மத்திய அரசிடம் அரசியல் ரீதியான கொள்கை உருவாக்கத்தில் அதிகப்படியான அதிகாரக் குவிப்பு இருக்கிறது. மத்தியஅரசில் இருந்து இந்தியா பணியாற்ற முடியாது. அனைத்துத் தரப்பு மக்களும் சுமையைப் பகிர்ந்து கொள்ளும்போதுதான் இந்தியா செயலாற்ற முடியும். ஆனால் இன்றைய சூழலில் மத்திய அரசு அதிகமான அதிகாரக் குவிப்பில் இருக்கிறது.

உதாரணமாக, எந்த ஒருமுடிவு எடுக்க வேண்டுமானாலும் பிரதமர் அலுவலகத்திடம் இருந்து அனுமதி பெற வேண்டியிருக்கிறது. சமீபத்தில் திறக்கப்பட்ட மிகப்பெரிய சர்தார் படேல் சிலை பெரிய உதாரணம். இந்தச் சிலை உருவாக்கும் திட்டத்துக்கு கூட பிரதமர் அலுவலகத்தின் அனுமதி தேவைப்பட்டது''.

இவ்வாறு ரகுராம் ராஜன் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x