Published : 14 Oct 2018 12:42 AM
Last Updated : 14 Oct 2018 12:42 AM

உலக மசாலா: இசைக்கு மயங்கிய ரக்கூன்கள்!

நியூயார்க்கைச் சேர்ந்தவர் எடி லாரன்ஸ். இவர் பூர்விக அமெரிக்கர்களின் புல்லாங்குழல் இசையை அழகாக இசைக்கிறார். செயின்ட் லாரன்ஸ் கவுன்ட்டியில் உள்ள காட்டில் நின்று புல்லாங்குழலை இசைக்கிறார். இசையைக் கேட்டவுடன் எங்கிருந்தோ ரக்கூன்கள் ஓடி வருகின்றன. சுமார் 20 ரக்கூன்கள் ஓடிவந்து அவரைச் சுற்றி நின்றுகொண்டிருக்கின்றன. இந்த வீடியோ ஒரு மாதத்துக்கு முன்பே வெளியிடப்பட்டாலும் இன்றுவரை அதிகம் பார்க்கக்கூடிய வீடியோவாக இருந்துகொண்டிருக்கிறது. ‘‘இந்த இசைக்கு ‘ரக்கூன் நடனம்’ என்று பெயர். ஆனால் இந்த இசை கேட்டு ரக்கூன்கள் நடனம் ஆடுவது இல்லை. சும்மா பெயர் வைத்திருக்கிறார்கள் என்றுதான் நினைத்தேன். ரக்கூன் நடனத்தை இசைத்து, அவற்றை வரவழைக்க முடியுமா என்று பரிசோதனை செய்து பார்த்தேன். என்ன ஆச்சரியம், ரக்கூன்கள் இசை கேட்டு வர ஆரம்பித்தன! நான் ஒரு மாதத்துக்கு முன்புதான் இந்த இசையைக் கற்றுக்கொண்டேன். புல்லாங்குழல் இசைக்கு மயக்கும் சக்தி இவ்வளவு இருக்கும் என்று நினைக்கவில்லை. பொதுவாகப் பழக்கப்படுத்தப்பட்ட விலங்குகள் மணி அடித்தால் உணவு கிடைக்கும் என்று வருவது உண்டு. ஆனால் காட்டில் வசிக்கும் ரக்கூன்கள் இசை கேட்டு வருவது ஆச்சரியமாகவே இருக்கிறது. ரக்கூன்கள் கூச்ச சுபாவம் கொண்ட விலங்குகள். இரவில்தான் உணவு தேடி வெளியே வருகின்றன. ஆனால் புல்லாங்குழல் இசைக்குப் பகலிலேயே காட்டை விட்டு வெளியே வருவதை இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை” என்கிறார் எடி லாரன்ஸ்.

எலிகளைப்போல் இசைக்கு மயங்கிய ரக்கூன்கள்!

சீனாவைச் சேர்ந்த லீ, பெரிய நிறுவனத்தில் உயர் அதிகாரியாக இருக்கிறார். இவரிடம் விலை உயர்ந்த ஃபெராரி 488 கார் இருக்கிறது. தினமும் மகனை இந்த காரில்தான் பள்ளிக்கு அழைத்துச் செல்வார். மகன் வகுப்பில் படிக்கும் சக மாணவர்கள் அவன் அருகில் உட்காருவதோ, பேசுவதோ கிடையாது என்பதை அறிந்தார். பள்ளியில் புகார் கொடுத்தார். விலை உயர்ந்த காரில் வரும் மாணவனுடன் பேச வேண்டாம் என்று மற்ற மாணவர்களின் பெற்றோர் சொல்லி வைத்திருக்கிறார்கள் என்று தெரிந்தது. பள்ளிக்காக இருக்கும் விசாட் குழுவில் இந்த விஷயத்தைப் பல பெற்றோர் தீவிரமாக எதிர்த்தனர். ஏழை, பணக்காரர் பாகுபாடு தங்கள் குழந்தைகளின் மனதைப் பாதிப்பதாகச் சொன்னார்கள். சாதாரண காரில் வந்து விட்டால் என்ன என்று கேட்டார்கள். பெற்றோரும் ஆசிரியர்களும் வைத்த கோரிக்கைகளை லீ நிராகரித்துவிட்டார். "நான் கடினமாக உழைத்துதான் இந்த நிலையை எட்டியிருக்கிறேன். இப்படி உழைத்தால் ஃபெராரி கார் வாங்கலாம் என்று உங்கள் குழந்தைகளுக்கு உத்வேகம் அளிக்கலாமே! எதையும் நேர்மறையாகப் பாருங்கள். நான்தான் அவனை காரில் அழைத்து வருகிறேன். அவனிடம் பணக்காரத்தன்மை ஏதாவது இருக்கிறதா? சாதாரண குழந்தைபோல்தானே இருக்கிறான். எனக்காக என் மகனை ஏன் தண்டிக்கிறீர்கள்?’ என்று கேட்டார். இப்படிக் கேட்ட பிறகு நிலைமை இன்னும் மோசமானது. ஒருகட்டத்தில் எல்லோரும் விசாட்டில் அவரைப் புறக்கணிக்க ஆரம்பித்தனர். விரக்தியில்  அந்தக் குழுவிலிருந்து வெளியேறிவிட்டார், லீ.

புறக்கணிப்பு கொடுமையானது…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x