Published : 13 Oct 2018 08:13 AM
Last Updated : 13 Oct 2018 08:13 AM

உலக மசாலா: 13 வயது வங்கி உரிமையாளர்!

பெரு நாட்டைச் சேர்ந்த 13 வயது ஜோஸ் டோல்ஃபோ க்விஸோகலா ஒரு வங்கியை 6 ஆண்டுகளாக நடத்திவருகிறார்! இதில் 2000 பேர் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். 7 வயது ஜோஸுக்குத் தன்னுடைய பள்ளி நண்பர்கள், தின்பண்டங்களுக்கும் பொம்மைகளுக்கும் அதிகமாகச் செலவு செய்வதுபோல் தோன்றியது. இதற்குப் பதிலாகக் கிடைக்கும் பணத்தை சேமித்து வைத்தால், அர்த்தமுள்ள செலவினங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்தார். உடனே பணம், சேமிப்பு, வங்கி குறித்து தன் பெற்றோரிடமும் வங்கி அதிகாரிகளிடமும் ஆலோசனை பெற்றார். அப்போது வேறு ஒரு யோசனை தோன்றியது. பெற்றோரின் உதவியின்றி மாணவர்களே ஒரு குறிப்பிட்ட தொகையைச் சம்பாதித்து, மாணவர்களுக்கான வங்கியில் சேமிக்க வேண்டும் என்பதுதான். மாணவர்கள் தங்கள் வீட்டிலுள்ள தேவையற்ற தினசரிகள், பத்திரிகைகள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றைக் கொண்டுவந்து கொடுக்க வேண்டும். அந்தப் பொருட்களை விற்று, அதற்கு உரிய தொகையை அந்த மாணவரின் பெயரில் வங்கியில் வரவு வைக்கப்படும். இப்படிச் சேமிக்கும் பணத்தைத் தேவையானபோது மாணவர்கள் எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தன்னுடைய திட்டத்தைப் பள்ளியில் சொன்னார் ஜோஸ். ஆனால் ஆசிரியர்கள், ஒரு 7 வயது மாணவரால் வங்கியை நிர்வாகம் செய்ய இயலாது என்றும் இது பயன் தராத திட்டம் என்றும் சொல்லிவிட்டனர். ஜோஸுக்கு இருந்த ஆர்வத்தைக் கண்ட பள்ளியின் முதல்வரும் துணை முதல்வரும் உதவுவதற்கு முன்வந்தனர்.

“முதல்வரின் உதவியோடு வங்கியை ஆரம்பித்துவிட்டேன். ஆசிரியர்களும் மாணவர்களும் மிக மோசமாகக் கிண்டல் செய்தனர். அதைப் பொருட்படுத்த வேண்டாம் என்று முதல்வர் உற்சாகப்படுத்தினார். விரைவிலேயே என் வகுப்பு மாணவர்கள் அனைவரும் என்னைப் புரிந்துகொண்டு, ஆர்வத்துடன் வங்கியின் வாடிக்கையாளர்களாக மாறினார்கள். தேவையற்ற பொருட்களை மறுசுழற்சி செய்யும் நிறுவனத்துடன் பேசி, நாங்கள் கொடுக்கும் பொருட்களுக்குக் கூடுதல் பணம் தரும்படி ஒப்பந்தம் செய்துகொண்டேன். இந்த வங்கியில் கணக்கு ஆரம்பிக்க வேண்டும் என்றால் 5 கிலோ மறுசுழற்சி பொருட்களைக் கொடுத்து, வாடிக்கையாளர் அட்டையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். பிறகு மாதம் ஒரு கிலோ பொருட்களைக் கொடுத்தால் கூடப் போதுமானது. மாணவர்கள் தங்களுக்கு என்று ஒரு வங்கி இருப்பதும் அதில் தங்களுக்கு ஒரு கணக்கு இருப்பதும் குறித்து பெருமிதம் கொள்கிறார்கள். சிலருடன் ஆரம்பித்த வங்கியில் விரைவிலேயே 200 வாடிக்கையாளர்கள் சேர்ந்தனர். தற்போது 2 ஆயிரம் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். 2012 – 2013-ம் ஆண்டில் மட்டும் 1 டன் மறுசுழற்சி பொருட்களை 200 வாடிக்கையாளர்கள் கொண்டுவந்து சேர்த்துள்ளனர். இந்த வெற்றி பெரு நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தது. ஏராளமான மாணவர்கள் வங்கியை நோக்கி வந்தனர். சுதந்திரமாக வங்கியின் சேவைகளைப் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த 6 ஆண்டுகளில் நான் அனுபவத்தின் மூலம் அதிகம் கற்றுக்கொண்டேன். பெரியவர்களுடன் என்னால் தயக்கமின்றிப் பேச முடிகிறது. ஆலோசனை கேட்டு வருகிறவர்களுக்கு தகுந்த ஆலோசனைகளையும் வழங்குகிறேன்” என்கிறார் பார்ட்செலனா மாணவர் வங்கியின் உரிமையாளர் ஜோஸ்.

சிறிய வயதிலிருந்தே சேமிப்புக் குறித்து புரிதல் வந்தால், எதிர்காலத்தில் பெரு நாடு மிக முக்கியமான முன்னேற்றத்துக்குச் செல்லும் என்று நம்பும் ஜோஸுக்கு, ஏராளமான விருதுகள் உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

அசத்துகிறாரே இந்த 13 வயது வங்கி உரிமையாளர்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x