Published : 23 Sep 2018 08:54 AM
Last Updated : 23 Sep 2018 08:54 AM

உலக மசாலா: கொடூரமான சிந்தனை

ஆஸ்திரேலியாவின் 6 மாநிலங்களிலிருந்து ஸ்ட்ராபெர்ரி விளைவிக்கப்பட்டு, நாடு முழுவதும் அனுப்பப்படுகின்றன. சமீபத்தில் கடைகளில் வாங்கிய ஸ்ட்ராபெர்ரிகளில் உலோக ஊசி இருப்பதாக ஏராளமானவர்கள் புகார் கொடுத்திருக்கிறார்கள். உடனே பழங்களை ஆய்வு செய்திருக்கிறார்கள். பெரும்பாலான பழங்களில் ஊசிகள் வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. முதலில் இந்தப் பிரச்சினை க்வின்ஸ்லாந்தில்தான் ஆரம்பித்திருக்கிறது. விரைவில் நாடு முழுவதும் பரவிவிட்டது. இப்படி ’விவசாயத்தில் தீவிரவாதம்’ யார் செய்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் ஸ்ட்ராபெர்ரிகளை வாங்குபவர்கள் அப்படியே சாப்பிடாமல், வெட்டிய பிறகு சாப்பிடுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். க்வின்ஸ்லாந்தில் 24 வயது இளைஞர் ஒருவர் ஸ்ட்ராபெர்ரியில் இருந்த ஊசியைக் கவனிக்காமல் விழுங்கிவிட்டார். வயிற்றில் வலி வந்த பிறகு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் மூலமே ஸ்ட்ராபெர்ரி புகார் பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏராளமான புகார்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வர ஆரம்பித்தன. எவ்வளவோ முயற்சி செய்தும் அரசாங்கத்தால் யார் செய்கிறார்கள், எதற்காகச் செய்கிறார்கள் என்பதை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் இப்படிப்பட்ட மோசமான செயலைச் செய்பவர்கள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 51 லட்சம் ரூபாய் பரிசாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவிலிருந்து அதிக அளவில் ஸ்ட்ராபெர்ரியை இறக்குமதி செய்யும் நியூசிலாந்து வாங்குவதை நிறுத்திவிட்டது. இந்தச் செயலால் விவசாயிகள், வியாபாரிகள், மக்கள் என்று பல தரப்பினரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உணவுப் பொருளில் இப்படி ஒரு கொடிய காரியத்தைச் செய்பவர்களை மன்னிக்க முடியாது என்கிறார்கள் பெரும்பாலானவர்கள்.

ஐயோ… எவ்வளவு கொடூரமான சிந்தனை…

இங்கிலாந்தைச் சேர்ந்த கலைஞர் அன்னா ப்ரெளன்ஸ்டட். மனிதர்களின் குணத்தை அறிந்துகொள்வதற்காக, 1 லட்சம் பென்னிகளை நீரூற்றுத் தொட்டிக்குள் போட்டார். ஒரு வாரம் கழித்து என்ன ஆகியிருக்கிறது என்று பார்ப்பதற்காகக் காத்திருந்தார். ஆனால் நாணயங்களைப் போட்டு 24 மணி நேரத்துக்குள் பெரும்பாலான நாணயங்கள் திருடு போய்விட்டன. இந்த நாணயங்களின் மதிப்பு சுமார் 94.5 ஆயிரம் ரூபாய். தற்போது 154 ரூபாய் மதிப்புள்ள நாணயங்களே எஞ்சியிருக்கின்றன. ”இன்றைய காலகட்டத்தில் மனிதர்களின் மனம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்காகவே இந்தச் சமூகப் பரிசோதனையை மேற்கொண்டேன். 354 கிலோ செப்பு நாணயங்களைப் பலரும் வந்து செல்லும் கேம்ப்ரிட்ஜ் நீரூற்றுத் தொட்டிக்குள்  போட்டிருப்பதையும் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டிருப்பதையும் தெரிவித்திருந்தோம். அப்படியும் 99% நாணயங்கள் திருடு போய்விட்டன என்பது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. அதுவும் ஒரே நாளில் மாயமாகியிருப்பதை நினைத்தால் கவலையாகவும் இருக்கிறது. இப்படி எடுக்கப்பட்ட நாணயங்களை ஏழைகளுக்கும் அறக்கட்டளைகளுக்கும் கொடுத்திருப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் அவர்களிடம் விசாரித்தபோது, அனைவரும் தம் சொந்தத் தேவைகளுக்கே பயன்படுத்திக்கொண்டது இன்னும் அதிர்ச்சியைக் கொடுத்தது. ஆனாலும் ஆத்திரமூட்டும் செயலாக இதைப் பார்க்கவில்லை. தமக்குச் சொந்தமில்லாததை எடுக்கக் கூடாது என்ற மனநிலையை இன்னும் மக்கள் பெறவில்லை என்பதைப் புரிந்துகொண்டேன்” என்கிறார் அன்னா.

பக்குவப்படாத மனிதர்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x