Last Updated : 22 Sep, 2018 06:04 PM

 

Published : 22 Sep 2018 06:04 PM
Last Updated : 22 Sep 2018 06:04 PM

பேச்சுவார்த்தை ரத்து; ‘அகங்காரம் பிடித்த இந்தியா’- இம்ரான் கான் கடும் விமர்சனம்

 

இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவத்துறை அமைச்சர்களுக்கு இடையே நடக்க இருந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்தது இந்தியாவின் அகங்காரத்தையும், எதிர்மறையான பதிலாகவும் இருக்கிறது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விமர்சித்துள்ளார்.

அடுத்த வாரம் நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா சபைக்கூட்டதின் போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடையிலான பேச்சுவார்த்தையை நடத்த இரு நாடுகளும் முடிவு செய்திருந்தன. இதனால், 2016-ம் ஆண்டுக்குப் பின் மீண்டும் பேச்சு தொடங்க இருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் நேற்று காஷ்மீரில் போலீஸார் 3 பேரை வீட்டில் இருந்து கடத்திச் சென்ற ஹிஸ்புல் தீவிரவாதிகள் அவரைச் சுட்டுக்கொலை செய்து வீசிவிட்டுச் சென்றனர். இந்தியப் படைகளால் கொல்லப்பட்ட தீவிரவாதி புர்ஹான் வானியைப் புனிதப்படுத்தி இஸ்லாமாபாத்தில் நேற்று தபால் தலை வெளியிடப்பட்டது.

இந்தச் சம்பவங்களால் அதிர்ச்சி அடைந்த மத்திய அரசு நியூயார்க்கில் அடுத்தவாரம் நடக்க இருந்த இருதரப்பு பேச்சுவார்த்தையை ரத்து செய்து அறிவித்தது. பாகிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான் கானின் உண்மையான முகம் என்ன என்பது தெரிந்துவிட்டது. இந்தப் பேச்சுவார்த்தைக்கு பின் பாகிஸ்தானின் கொடுமையான திட்டம் என்பதை அறிந்து கொண்டோம் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விமர்சித்து இருந்தது.

இதற்குக் கண்டனம் தெரிவித்தும், பேச்சுவார்த்தையை ரத்து செய்தது குறித்தும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:

''இரு நாடுகளுக்கு இடையிலான அமைதிப் பேச்சு என்னுடைய அழைப்பின் பெயரில், வேண்டுகோளின் பெயரில் தொடங்க இருந்த நிலையில், இந்தியாவின் அகங்காரமான, எதிர்மறையான செயல்பாடுகள் என்னை வேதனைப்படுத்துகிறது.

எப்படியாகினும், தொலைநோக்குப் பார்வை இல்லாத எதையும் மிகப்பெரிய அளவில் சிந்திக்க இயலாத, அற்ப மனிதர்கள் மிகப்பெரிய பதவிகளில் இருப்பதை நான் என்னுடைய வாழ்க்கை முழுவதும் பார்த்திருக்கிறேன், அதைக் கடந்துதான் வந்திருக்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x