Published : 22 Sep 2018 03:48 PM
Last Updated : 22 Sep 2018 03:48 PM

எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் உடலைக் கண்டுபிடிக்க பாக்.ராணுவமும் உதவிக்கரம் நீட்டியது; எங்களுக்குப் பங்கில்லை: பாகிஸ்தான் கடும் மறுப்பு

வெளியுறவு அமைச்சர்கள் மட்டப் பேச்சை இந்தியத் தரப்பு ரத்து செய்தது கடும் ஏமாற்றம் அளிக்கிறது என்று கூறியுள்ள பாகிஸ்தான், பிஎஸ்எப் ஜவான் கொலையில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று மறுத்துள்ளது இம்ரான் கான் தரப்பு.

பேச்சுவார்த்தைகளுக்கு மறுப்பு தெரிவித்து இந்தியா கூறிய காரணங்கள் ‘முழுதும் திருப்திகரமாக இல்லை’ என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இம்ரான் தலைமை பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பை ரத்து செய்ய இந்தியா கூறியுள்ள காரணங்கள், அதுவும் உறுதி செய்யப்பட்ட 24 மணி நேரத்துக்குள் ரத்து செய்தது முற்றிலும் திருப்திகரமாக இல்லை. ஐநா பொதுச்சபை கூட்டத்துக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று இந்தியா கூறியதற்கு 2 நாட்கள் முன்னரே ஜவான் கொலையுண்டது நிகழ்ந்துள்ளது.

மேலும் பாகிஸ்தான் தரப்பினர் ஜவான் கொலையில் எங்கள் ராணுவத்தின் பங்கு எதுவும் இல்லை என்பதை இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையிடம் தெரிவித்துள்ளது.

ஜவானின் உடலைக் கண்டுபிடிப்பதில் பாகிஸ்தான் ராணுவம் உதவிபுரியவும் முன் வந்தது. இந்த உண்மைகள் இந்தியத் தரப்பினருக்கும் தெரியும். இந்திய ஊடகங்களும் பாகிஸ்தான் மறுப்பை வெளியிட்டுள்ளன. ஆனாலும் பாகிஸ்தானுக்கு எதிரான இந்த விஷமப் பிரச்சாரம் தொடர்கிறது. இந்த வாய்ப்பை இந்தக் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்து கொள்வதற்காக உறுதியாக பாகிஸ்தான் பயன்படுத்துகிறது.

எங்கள் அதிகாரிகளும் உண்மையைக் கண்டுபிடிக்க விசாரணை நடத்தத் தயாராக உள்ளனர். தீவிரவாதம் என்ற ஒன்றைத் தவறாக எங்களுக்கு எதிராக எழுப்பும் இந்தியா காஷ்மீரி மக்களுக்கு எதிராக இழைக்கும் சொல்லொணா குற்றங்களை மறைக்கவும் முடியாது, காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான உள்ளார்ந்த போராட்டத்தையும் அது நியாயமற்றது என்று கூறவும் முடியாது.

இருதரப்பு உறவு மலர்வதற்கான இன்னொரு வாய்ப்பை இந்திய தரப்பு வீணடித்து விட்டது” என்று பாகிஸ்தான் தரப்பு பதிலளித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x