Published : 17 Sep 2018 04:57 PM
Last Updated : 17 Sep 2018 04:57 PM

பொருளாதாரத் தடைகளால் ஈரானை ஒன்றும் அசைத்துவிட முடியாது: அமெரிக்கா மீது ரஷ்யா சாடல்

ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் பயனற்றவை மற்றும் தவறானவை என்று  ரஷ்யா விமர்சித்துள்ளது.

இதுகுறித்து ரஷ்யாவின் ஆற்றல் வளத்துறை அமைச்சர்  அலெக்சாண்டர்  நோவாக் கூறும்போது, "ஈரான் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் நிலையான தன்மையைக் கொண்டுள்ளது. அவர்களை தொடர்ந்து சந்தையில் செயல்படவிடுவது நல்லது. ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் தவறானவை மற்றும் எந்தவித பலனும் இல்லாதவை. ஆனால் நாம் இதுகுறித்து கருத்து மட்டுமே கூற முடியும்" என்றார்.

2015-ம் ஆண்டில், அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தில், அணு சக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்று ஈரான் உறுதியளித்தது. இதை ஏற்று அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பல்வேறு பொருளாதாரத் தடைகளும் நீக்கப்பட்டன.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது என்றும் கடுமையாக விமர்சித்து வந்தார்.

இந்த நிலையில் ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது.

ஈரான் ஒரு நாளைக்கு 24 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்யை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.  இந்த நிலையில் ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா  தொடர்ந்து விதித்து வருகிறது.

மேலும், ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா உள்ளிட்ட  பிற நாடுகள் வாங்குவதைத் தடுக்க ட்ரம்ப் நடவடிக்கை எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x