Published : 16 Sep 2018 10:00 AM
Last Updated : 16 Sep 2018 10:00 AM

அமெரிக்காவும் உலகமும் எதிர்நோக்கும் சவால்கள்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை கோபப்படுத்த சின்ன விஷயமே போதும். அப்படி இருக்கும்போது, கடந்த செப்டம்பர் 5-ம் தேதி ‘தி நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையில் பெயர் குறிப்பிடாமல் வெளியான கட்டுரையைப் பார்த்தால் சும்மா விடுவாரா.. அவரையே அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. அதிபராக இருக்கும் ட்ரம்ப் நல்லவர் இல்லை என்பதோடு அவர் எடுக்கும் பல முடிவுகள் நாட்டுக்கே பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என கட்டுரையில் கூறப்பட்டிருந்தது. இதில் ட்ரம்ப்புக்கு கோபம் ஏற்படுத்திய இன்னொரு விஷயம் என்னவென்றால் அந்தக் கட்டுரையை எழுதியவர் பெயர் இல்லை. வெள்ளை மாளிகையின் மூத்த நிர்வாக உறுப்பினர் என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது. அவ்வளவுதான். யார் இதை எழுதியிருப்பார்கள் என்ற சந்தேகத்தில் துணை அதிபர் மைக் பென்ஸ் முதல் அனைவரும் சந்தேக வளையத்தில் சிக்கிக் கொண்டு அவதிப்படுகின்றனர்.

தி நியூயார்க் டைம்ஸோ அல்லது அதுபோன்ற சிறந்த பத்திரிகை நிறுவனமோ ட்ரம்ப் அல்லது அவரது ஆதரவாளர்களின் அழுத்தத்துக்கு பயந்து யாரையும் காட்டிக் கொடுக்கப் போவதில்லை. அமெரிக்க அதிபராக இருந்த ரிச்சர்டு நிக்ஸன் காலத்தில் நடந்த வாட்டர்கேட் ஊழலின்போதே இதுபோன்ற பல பிரச்சினைகளை அமெரிக்க பத்திரிகைகள் ஏற்கெனவே சந்தித்துவிட்டன. ஆனால் இப்போது அமெரிக்காவில் நடந்து கொண்டிருக்கும் பல விஷயங்கள் அமெரிக்காவுக்கு மட்டுமல்ல மற்ற உலக நாடுகளுக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவையாக உள்ளன. ஒரே ஆறுதலான விஷயம் என்னவென்றால், கட்டுரையில் வரும் ஒரு வரிதான்...

வெள்ளை மாளிகையில் விஷயம் தெரிந்த ஆட்கள் இருக்கிறார்கள் என்பதை அமெரிக்கர்கள் அறிந்து கொள்ள வேண்டும். ட்ரம்ப் செய்யாவிட்டாலும் நாட்டுக்கு எது நல்லதோ அதைச் செய்ய நாங்கள் முயற்சிக்கிறோம் என்பதுதான். தனது கடமையை சரிவர செய்யாத அதிபரை மாற்ற வகை செய்யும் 25-வது சட்டத் திருத்தம் குறித்து அதிபரின் உதவியாளர்கள் விவாதித்த தகவலை வெள்ளை மாளிகை அதிகாரிகள் வெளியிட்டதும் நிலைமை இன்னும் மோசமானது.

ட்ரம்ப் செய்யும் கோமாளித்தனங்கள் அமெரிக்காவுக்கோ உலக நாடுகளுக்கோ புதிதல்ல. இதெல்லாம் தெரிந்துதான் அவரை 45-வது அதிபராக அமெரிக்க மக்கள் தேர்ந் தெடுத்தனர். கடந்த 18 மாதங்களாக அந்தப் பொறுப்பிலும் வைத் துள்ளனர். சுதந் திரமான மீடியாவுக்கு எதிராகவும் அவரை விமர்சிக்கும் `பொய் செய்திகளுக்கு' எதி ராகவும் அவரின் விமர் சனமும் ட்விட்டர் மூலம் அவர் நடத்தும் தாக்குதல் களும் அவர் வகிக்கும் அதிபர் பதவிக்கு அழகல்ல. ட்ரம்ப்பின் ஜனநாயக விரோத நடவடிக் கைகளையும், தடையில்லா வர்த்தகத்துக்கு எதிரான கொள்கைகளையும் குடியரசு கட்சியினரே விமர்சிக்கின்றனர். இதனால் கட்சிக்கே கெட்ட பெயர் ஏற்படுமோ என்றும் இதே நிலை நீடித்தால் இடைத் தேர்தல்களில் கட்சி தோல்வியைத் தழுவ நேரிடுமோ என்றும் அஞ்சுகின்றனர். அடுத்து, 2020-ல் நடக்க இருக்கும் அதிபர் தேர்தலிலும் ட்ரம்ப் மிகப் பெரிய சவாலை சந்திக்க நேரிடும்.

அதிபர் ட்ரம்ப்பின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும் என எதிர்பார்ப்பது நல்ல விஷயம்தான். ஆனால் கடந்த காலத்தை பார்க்கும்போது அப்படியெல்லாம் நடக்காது. தன்னைப் பற்றி பத்திரிகையில் எழுதியது யார் என கண்டுபிடிப்பதற்காக மேலும் கடுமையாகத்தான் அவர் நடந்து கொள்வார் என எதிர்பார்க்கலாம். நாட்டின் பொருளாதாரம் நன்றாக இருக்கிறது. வெளிநாடுகளில் எங்கும் அமெரிக்கா போரிட வில்லை. அதனால் அமெரிக்க வீரர்களின் சடலங்கள் விமானத்தில் கொண்டுவரப்பட வில்லை. வேலைவாய்ப் பும் அதிகரித்து வருகிறது. வரி சீர்திருத்தங்களும் மக்களிடையே திருப்தியை ஏற்படுத்தியுள்ளது என பல சாதகமான விஷயங்கள் இருந்தாலும் குடியரசு கட்சியினரும் சோர்ந்து போய் தான் உள்ளனர். அதிபராக இருப்ப வருக்கு இதுபோன்ற விஷயங்களால் புகழ் ஏற்பட வேண்டும். ஆனால் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ட்ரம்ப்பின் பெயர் கெட்டுப் போய்க் கொண்டிருக்கிறது.

அமெரிக்காவின் நட்பு நாடுகள் ட்ரம்ப்பின் நோக்கத்தையும் தவறான வெளிநாட்டுக் கொள்கைகளையும் கேள்வி கேட்கின்றன. ஐரோப்பிய யூனியனில் தீவிரவாதமும் அகதிகள் பிரச்சினையும் தலைப்புச் செய்திகளாக இருக்கும்போது, சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில் உலகின் மிகப் பெரிய அச்சுறுத்தல் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்தான் என 69 சதவீதம் பேர் கூறியிருக்கின்றனர். வர்த்தகம் மற்றும் தடைகள் குறித்த பிரச்சினை ஒருபுறம் இருக்க, ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது மற்றும் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்காவின் கடுமையான நிலைப்பாடு ஆகியவற்றை நட்பு நாடுகள் விமர்சிக்கத் தொடங்கிவிட்டன. இரண்டே இரண்டு விஷயங்கள்தான் அதிபரின் செயல்பாட்டுக்கு முட்டுக்கட்டை போட முடியும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். ஒன்று.. 2018 இடைத் தேர்தல்களில் குடியரசு கட்சியினருக்கு ஏற்படும் தோல்வி.. அடுத்ததாக, அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையீடு குறித்து விசாரணை நடத்தி வரும் சிறப்பு வழக்கறிஞர் ராபர்ட் முல்லர், அதிபர் மீது புகார் கூற வேண்டும். இது இரண்டும் நடக்காவிட்டால், வெள்ளை மாளிகையில் வழக்கம்போல் ட்ரம்ப்பின் ராஜ்ஜியம்தான் நடக்கும்.

- ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி, வாஷிங்டனில் பணியாற்றிய பத்திரிகையாளர் மற்றும் தனியார் கல்லூரி பேராசிரியர்.

தமிழில்: எஸ்.ரவீந்திரன்

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x